Crime : மார்பிங் செய்த ஆபாச வீடியோ: இன்ஜினியரிடம் பணம் பறிப்பு: ராஜஸ்தானுக்கு விரைந்த க்ரைம் போலீஸ்!
மார்பிங் செய்த ஆபாச வீடியோவை அனுப்பி இன்ஜினியரிடம் பணம்பறித்த வடமாநில கும்பலைப் பிடிக்க ராஜஸ்தான் மாநிலத்துக்கு சைபர் கிரைம் தனிப்படையினர் விரைந்தனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியை சேர்ந்த 48 வயது பொறியாளரின் 'வாட்ஸ்-அப்' எண்ணுக்கு மார்பிங் செய்த ஆபாச வீடியோவை அனுப்பி பணம் பறிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தேனி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த சம்பவம் எப்படி நடந்தது என்பது குறித்து போலீஸ் தரப்பில் கூறும்போது, இன்ஜினியரின் வாட்ஸப் எண்ணுக்கு கடந்த 1-ஆம் தேதி ஒரு வீடியோ கால் வந்தது. பதிவு செய்யாத புதிய எண் என்ற போதிலும் அந்த அழைப்பை அவர் ஏற்றார். அப்போது எதிரே யாரும் முகம் காட்டவில்லை. வீடியோ காலில் எதிர்முனையில் யாரும் இல்லாததால் அந்த அழைப்பை அவர் துண்டித்து விட்டார். இந்தநிலையில், அவருடைய செல்போன் எண்ணுக்கு ஒரு வீடியோ வந்தது. அதில் இன்ஜினியர் வீடியோ காலில் ஒரு பெண்ணுடன் பேசுவது போன்றும், எதிர்முனையில் நிர்வாணமாக பெண் இருப்பது போன்றும் 'மார்பிங்' செய்து அந்த வீடியோவை அனுப்பியுள்ளனர்.
Chandrayaan 3 Facts: விண்ணில் சீறப்போகும் சந்திரயான் - 3..! சந்திரயான் 2-லிருந்து எப்படி எல்லாம் மேம்படுத்தப்பட்டுள்ளது தெரியுமா?
வீடியோ அனுப்பிய நபர்கள் இன்ஜினியரிடம் பணம் கேட்டு மிரட்டினர். எதிர்முனையில் மிரட்டிய நபர்களுக்கு 3-ஆம் தேதி ரூ.5 ஆயிரம், 8-ஆம் தேதி ரூ.5 ஆயிரம் என ரூ.10 ஆயிரம் அனுப்பிய நிலையில், மீண்டும் பணம் கேட்டு மிரட்டினர். அதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பாதிக்கப்பட்டவர் குறித்த விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்தனர்.
இதற்கிடையே பாதிக்கப்பட்ட இன்ஜினியரை தொடர்பு கொண்டு மிரட்டிய நபர்கள் பயன்படுத்திய செல்போன் எண், பணம் பெற பயன்படுத்திய கூகுள்பே எண் மற்றும் வங்கிக்கணக்கு விவரங்களை வைத்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே உத்தரவின்பேரில், சைபர் கிரைம் போலீசார் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இன்ஜினியரிடம் பணம் பறிக்க முயன்ற கும்பல் பயன்படுத்திய ஒரு செல்போன் எண் மேகாலயா மாநிலத்தை சேர்ந்த ஒருவரின் பெயரில் இருப்பதும், பணம் பெற பயன்படுத்திய வங்கிக்கணக்கு மராட்டிய மாநிலத்தை சேர்ந்த மற்றொருவரின் பெயரில் இருப்பதும் தெரியவந்தது. பணம் பறித்த கும்பல் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து செயல்பட்டதாகவும் தெரியவந்தது. இதையடுத்து இந்த கும்பலை பிடிக்க ராஜஸ்தான் மாநிலத்துக்கு தனிப்படையினர் விரைந்தனர். அந்த கும்பலை சேர்ந்தவர்கள் பிடிபட்டால்தான், இதுபோன்று வேறு யாரை எல்லாம் மிரட்டி பணம் பறித்தார்கள்? என்ற விவரம் தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே இன்ஜினீயர் என்று கூறப்பட்ட அந்த நபர் பெரியகுளம் தி.மு.க. எம்.எல்.ஏ. சரவணக்குமார் என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இதை போலீஸ் தரப்பிலோ சரவணக்குமார் தரப்பிலோ உறுதிப்படுத்தப்பட்வில்லை.