மாசடையும் மன்னார் வளைகுடா...! கடல் வாழ் உயிரினங்களை காக்க களமிறங்கும் கடலோர சிறுவர்கள்...!
’’மன்னார் வளைகுடா கடலில் கடற்பசு, கடற்குதிரை, கடல் அட்டை, சித்தாமைகள், கடல் பாசி, மெல்லுடலிகள், பவளப்பாறைகள் என 3,600க்கும் மேற்பட்ட அரிய வகை கடல் வாழ் உயிரினங்கள் உள்ளன’’
தமிழகத்தின் தென்கிழக்கு கடல் பகுதியே மன்னார் வளைகுடா எனப்படுகிறது. ராமேஸ்வரம் முதல் கன்னியாகுமரி வரை மட்டுமின்றி இலங்கை வரையிலும் மன்னார் வளைகுடா பரந்து விரிந்துள்ளது. சுமார் 10 ஆயிரத்து 500 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் பாம்பன் முதல் தூத்துக்குடி வரை 21 தீவுகள் அமைந்து உள்ளன.
இந்த மன்னார் வளைகுடா பகுதி தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகிறது. உலகிலேயே மிகவும் அரிய வகை கடல்வாழ் உயிரினங்களான முள்தோலிகள், சங்கு சிப்பிகள், கணுக்காலிகள், திமிங்கிலங்கள், கண்களைக் கவரும் விதத்தில் வண்ண மீன்கள், பாலூட்டி வகையான கடல் பசுக்கள், கடல் அட்டைகள், கடல் பாம்புகள், கடல் குதிரைகள், கடல் பன்றிகள், கடல் ஆமைகள், பவள பாறைகள் என இங்கு மொத்தம் 4 ஆயிரத்து 223 கடல்வாழ் உயிரினங்கள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டு வாழ்ந்து வருகின்றது. மேலும், மன்னார் வளைகுடா கடலில் கடற்பசு, கடற்குதிரை, கடல் அட்டை, சித்தாமைகள், கடல் பாசி, மெல்லுடலிகள், பவளப்பாறைகள் என 3,600க்கும் மேற்பட்ட அரிய வகை கடல் வாழ் உயிரினங்கள் உள்ளன. சமீப காலமாக, இவ்விரு கடலிலும் பயணிக்கும் சரக்கு கப்பல்களில் இருந்து வெளியாகும் எண்ணெய் கழிவுகளால் கடல் மாசுபட்டு வருகிறது.
இக்கடற்பரப்பில் மீன்பிடியின்போது சேதமாகும் வலைகள், கடலில் வீசப்படும் பிளாஸ்டிக் பொருட்கள், சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட பொதுமக்கள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பாட்டில்கள், காலி மதுபாட்டில்கள் கடலில் வீசப்படுவதாலும் கடல் மாசடைந்து வருகிறது. இதனால், கடலுக்கு அடியில் வாழும் லட்சக்கணக்கான அரிய வகை கடல் வாழ் உயிரினங்கள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகின்றன. மீனவர்கள், பொதுமக்கள் பயன்படுத்தி கடலில் வீசப்படும் பிளாஸ்டிக் பொருட்கள், கிழிந்த வலைகளில் சிக்கும் சித்தாமைகள் கடலில் இறந்து கரை ஒதுங்கி வருகின்றன. பிளாஸ்டிக் மற்றும் மீன்பிடி கழிவுகளால் ஏற்படும் கடல் வாழ் உயிரினங்கள் இறப்பை தடுக்க உச்சிப்புளி அருகே பிரப்பன்வலசை மீனவ கிராமத்தில் உள்ள கடல் விளையாட்டு நிறுவனம் மீனவ குழந்தைகளின் உதவியுடன் கடற்கரையை தூய்மைப்படுத்தி வருகின்றனர்.
ராமேஸ்வரம் வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு கடல் விளையாட்டுகள், ஸ்கூபா டைவிங் மூலம் கடலுக்கு அடியில் உள்ள கடல் வாழ் உயிரினங்களை நேரடியாக அழைத்து சென்று காண்பித்து, சுற்றுலா பயணிகளுக்கு நீச்சல் பயிற்சி அளித்தல் என இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கடற்கரையை தூய்மைப்படுத்தும் அளவிற்கு அந்நிறுவனத்திடம் ஆட்கள் இல்லாதால் கடல் விளையாட்டுகள் மீது ஆர்வமுள்ள கடலோரங்களில் வசிக்கும் மீனவ குழந்தைகளின் உதவியுடன் கடற்கரையை தூய்மைப்படுத்த திட்டமிட்டனர். மீனவ கிராம குழந்தைகள் தொலைக்காட்சிகளில் பார்த்து ரசிக்கும் கடல் விளையாட்டுகளை கட்டணமின்றி கற்றுத்தரப்படும் என்ற செய்தியை அறிந்து மீனவர்களின் பெற்றோர் தங்கள் குழந்தைகளை அனுப்பி வைக்கின்றனர்.
இதை பயன்படுத்தி அந்நிறுவனம் பெற்றோரின் அனுமதியுடன் கடற்கரையோரங்களில் கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகளை குழந்தைகள் உதவியுடன் சேகரித்து வருகின்றனர். கடலில் விளையாட வரும் மீனவ குழந்தைகள் கையுறை அணிந்து கடற்கரை ஓரங்களில் கிடக்கும் பிளாஸ்டிக், வலைகள், காலி மது பாட்டில்கள் உள்பட கடலுக்கு மாசு தரும் பொருட்களை கடல் விளையாட்டு நிறுவன ஊழியர்களுடன் சேகரிக்கின்றனர். கழிவு பொருட்களை சேகரித்த பின், குழந்தைகளுக்கு பாதுகாப்பு உடைகள் வழங்கி பயிற்சியாளர்கள் மூலம் நீச்சல் பயிற்சி அளித்து வருகின்றனர். நீரில் மிதத்தல், நீர் சறுக்கு, ஸ்கூபா டைவிங் உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்கள் கொண்ட விளையாட்டுகள் குழந்தைகளுக்கு கட்டணமின்றி கற்று தருகின்றனர். சிறப்பாக செயல்படும் குழந்தைகளை தேர்ந்தெடுத்து மாதம் ஒரு முறை பரிசு வழங்கப்படுகிறது. இம்முயற்சியால் கடந்த காலங்களில் இறந்த நிலையில் கரை ஒதுங்கும் ஆமைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக கடல் உயிரின ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். அப்பகுதியில் நாட்டுப்படகு மற்றும் பாரம்பரிய மீனவர்களுக்கு சமீப காலமாக அதிக மீன் கிடைப்பதால் மீனவர்களின் பொருளாதாரமும் உயர்ந்து வருகிறது.