நாற்காலியை பிடிக்க நாற்காலிகளால் சண்டை போட்ட கவுன்சிலர்கள்- ஒன்றிய கவுன்சிலர் கூட்டத்தில் கைகலப்பு!
’’இரட்டை இலைச் சின்னத்தில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் மாற்றுக் கட்சிக்கு செல்லவிருப்பதாக இருந்தால் பதவியை ராஜினமா செய்து விட்டு மாற்றுக் கட்சிக்கு செல்லலாம் என கூறியதால் சண்டை’’
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் அவசர கூட்டம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் ரெஜினா நாயகம் தலைமையில் குழு துணைத்தலைவர் யாகப்பன் முன்னிலையில் நடைபெற்றது. நிலக்கோட்டை யூனியன் ஆணையாளர் முனியாண்டி வரவேற்று பேசினார்.
கூட்டத்தில் 2020-2021 ஆம் ஆண்டுக்கான 15 ஆவது நிதிக்குழு மானியம் ரூபாய் ஒரு கோடியே 26 லட்சம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு ஒதுக்கப்பட்டது. இதற்கான, ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஒவ்வொரு ஒன்றிய வார்டுகளுக்கும் பணிகள் தேர்வு செய்வதற்காக முறையாக விவாதம் நடத்தப்பட்டு, ஒவ்வொரு கவுன்சிலர்களிடம் விளக்கம் கேட்டு அதற்குரிய விளக்கமும் அளிக்கப்பட்டு கூட்டம் முடிவு பெற்றது.
அப்போது ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் யாகப்பன் கூட்டம் முடிவடைந்து விட்டது. அப்போது அதிமுகவில் இருந்து இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்ற அதிமுக ஒன்றிய கவுன்சிலர்கள் மாற்று அணிக்கு மாற இருப்பது பற்றிய சந்தேகத்தை கேள்வியாக எழுப்பினார். அவ்வாறு இரட்டை இலைச் சின்னத்தில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் மாற்றுக் கட்சிக்கு செல்லவிருப்பதாக இருந்தால் இரட்டை இலையில் வெற்றி பெற்றதை ராஜினமா செய்து விட்டு, மாற்றுக் கட்சிக்கு செல்லலாம் என கூறினார்.
இதனால் ஆத்திரமடைந்த திமுக ஆதரவு கவுன்சிலர்கள் 2 பேர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, நாற்காலியை தூக்கி வீசினார். இதற்கு ஆதரவு தெரிவித்து மற்றொரு திமுக ஆதரவு கவுன்சிலர் அதிமுக துணை சேர்மனை நோக்கி நாற்காலியை வீசினார். இதை அறிந்த மற்ற அதிமுகவினர் இவ்வாறு செய்வது முறையற்றது என ஒருவருக்கொருவர் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு கொண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதை அறிந்த நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குரு வெங்கட்ராஜ் தலைமையில் போலீசார் விரைந்து வந்து சம்பவம் குறித்து விசாரணை செய்தனர்.
இதனால், இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து திமுக கவுன்சிலர்கள் வெளியே வந்து பணிகள் பிரிப்பதில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவரும், ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவரும் பாரபட்சமாக ஈடுபடுவதாக கூறினர். ஆகையால் வருகிற நிதியை அனைத்து வார்டுகளுக்கும் சமமாகப் பிரித்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்து வெளிநடப்பு செய்தனர்.
திமுக ஆட்சி அமைத்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அதிமுக கவுன்சிலர்கள் திமுகவிற்கு கட்சி மாறி வருவது குறிப்பிடத்தக்கது
தேனியில் கலவரம்... திடீர் பரபரப்பு... கடைசியில் தான் தெரிந்தது....!
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X