Lord Kallazhagar: ”வாராரு வாராரு அழகர் வாராரு” - பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்!
மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் 12 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நேற்று திருத்தேரோட்டம் நடைபெற்றது. இந்நிலையில் சித்திரை திருவிழாவில் சிகர நிகழ்ச்சியாக பச்சை பட்டுடுத்தி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சூழ தங்க குதிரை வாகனத்தில் ஆற்றில் இறங்கினார்.
முன்னதாக கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி பதினெட்டாம்படி கருப்பண்ண சுவாமி முன்பு தங்கப்பல்லக்கில் தல்லாக்குளத்தில் உள்ள அழகர் மலையில் இருந்து தங்கை மீனாட்சி திருமணத்தை காண புறப்பட்டார். வழியில் 483 மண்டகப்படிகளில் எழுந்தருளிய அழகரை புதூர் மூன்றுமாவடியில் பக்தர்கள் வரவேற்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இன்றைய தினம் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை பெற்றுக்கொண்டு பச்சை பட்டுடுத்தி அழகர் ஆற்றில் இறங்கினார். பச்சை வண்ணம் என்பது நடப்பாண்டு மழை பொழிந்து விவசாயம் செழிக்கும் என்பது நம்பிக்கையாகும். அழகரை வெள்ளிக்குதிரை வாகனத்தில் வந்த வீரராகவ பெருமாள் வரவேற்றார். மேலும் “கோவிந்தா..கோவிந்தா, நாராயணா” என்ற கோஷங்கள் விண்ணதிர தோல் பைகளில் தண்ணீரை பீய்ச்சி பக்தர்களும் அழகரை வரவேற்றனர்.
இதனிடையே வைகை ஆற்றில் அழகர் இறங்கும் நிகழ்ச்சியை முன்னிட்டு 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் 800க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள், தீயணைப்பு துறையினரும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதேசமயம் பக்தர்கள் கூட்டம் அளவுக்கதிகமாக உள்ளதால் 400க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள், ட்ரோன் கேமராக்கள் மூலம் கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
வரலாறு சொல்வது என்ன?
தங்கை மீனாட்சியின் திருக்கல்யாணத்தை காண கள்ளழகர் அழகர்மலையில் இருந்து ஆவலாய் புறப்பட்டு மதுரையை நோக்கி வருவார். ஆனால் வழியெங்கும் பக்தர்களுக்கு காட்சி கொடுப்பதால் வருவதற்கு தாமதமாகி அதற்குள் மீனாட்சிக்கு கல்யாணம் முடிவடைகிறது. இதனால் கள்ளழகர் வைகை ஆற்றில் நீராடி விட்டு தங்கையை காணாமல் திரும்புவதாக புராணங்கள் கூறுகிறது.
அதேபோல் வைகை கரையில் தவளையாக சாபம் பெற்றிருந்த மண்டூக முனிவருக்கு அழகர் சாபவிமோசனம் கொடுத்த நாளாகவும் கருதப்படுகிறது. அழகர் ஒவ்வொரு வருடமும் எந்த வண்ணம் பட்டுடுத்தி ஆற்றில் இறங்குவாரோ அதனை பொருத்து அந்த ஆண்டில் நல்லது, கெட்டது இருக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.