கேரளாவில் கனமழை.. சரிவைச் சந்திக்கும் ஏலக்காய் விலை.. தமிழ்நாடு விவசாயிகளுக்கும் சிக்கல்
கேரளாவில் விளையும் நறுமண பொருட்களில் ஒன்றான ஏலக்காய், தேனி மாவட்டம் போடியில் நடந்த ஏலத்தில் ஒரு கிலோ ஏலக்காய் அதிகபட்ச விலையாக 1,021 ருபாய்க்கு ஏலம் போனது.
கேரளாவில் அதிக அளவில் விவசாயம் செய்யப்படும் ஏலக்காய், நறுமண பொருட்களில் ஒன்றாகும். கேரள மாநிலத்தில் உள்ள இடுக்கி மாவட்டத்தில் சுமார் லட்சக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் இந்த ஏலக்காய் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்த விவசாயத்தில் பெரும்பாலும் தமிழக தோட்ட தொழிலாளர்களை ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக ஒரு நாளைக்கு ஒரு லட்சம் கிலோ வரை ஏலக்காய் வர்த்தகம் என்பது நடைபெறுவது வழக்கமாக இருந்து வந்தது.
இந்த விற்பனையானது கேரள மாநிலம் புத்தடி மற்றும் தேனி மாவட்டம் போடியில் உள்ள நறுமணப் பொருள் வாரியத்தில் ஆன்லைன் மூலம் ஏல முறையில் விற்பனை செய்யப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் இரு முறை ஆன்லைன் மூலம் ஏலம் முறையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த ஏலத்தில் போடி, தேவாரம், கோம்பை, கம்பம், குமுளி கட்டப்பனை மற்றும் தமிழகத்தின் இதர வெளி மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் கலந்து கொண்டு ஏலக்காய்களை கொள்முதல் செய்து வருகின்றனர். தேனி மாவட்டம் போடி பகுதி மற்றும் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் 1.20 லட்சம் ஏக்கர் பரப்பளவில் ஏலக்காய் விவசாயம் நடைபெற்று வருகிறது.
சென்ற மாதங்களில் ஏலக்காய் தோட்டங்களில் விளைச்சல் இல்லாததால் சந்தைக்கு ஏலக்காய் வரத்து குறைவாக இருந்தது. இடுக்கி மாவட்டம் புத்தடி, தேனி மாவட்டம் போடி ஆகிய இடங்களில் நறுமணப் பொருள் வாரியத்தின் கட்டுப்பாட்டில் தனியார் ஏலக்காய் ஏல நிறுவனங்கள் மூலம் மின்னணு ஏலம் நடத்தப்படுகிறது. கொரோனா காலத்தில் ஏலம் ஏதும் நடைபெறாமல் இருந்த நிலையில், கொரோனா ஊரடங்கில் தளர்வுகளுக்கு பிறகு, ஏலம் நடை பெற்று வருகிறது.
இந்த முறை தேனி மாவட்டம் போடியில் உள்ள ஆன்லைன் ஏல மையத்தில் ஏலக்காய்கான ஏலம் ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டதில், “இந்த ஏலத்தில் 95,531 கிலோ ஏலக்காய் பதிவு செய்யப்பட்டு, 225லாட்டுகளாக பிரிக்கப்பட்டு விற்பனை தொடங்கியது. இந்த ஆன்லைன் ஏலத்தில் ஏராளமானோர் பங்கேற்று ஏலக்காய் வாங்குவதில் மும்மரம் காட்டினார். இந்த ஏலத்தில் ஒரு கிலோ ஏலக்காய் அதிகபட்ச விலையாக 1021 ருபாய்க்கு விற்பனையானது. கேரளாவில் தொடர் மழையால் ஏலக்காய் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதால் இனி வரும் நாட்களில் ஏலக்காய் கொள்முதல் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்