தேனி பள்ளியில் புத்தகக் கடத்தல்: அதிர்ச்சியில் மாணவர்கள்! ஆசிரியர் மீது நடவடிக்கை
அரசு மேல்நிலைப்பள்ளியில் உள்ள புத்தகங்களை ஆசிரியர்களே யாருக்கும் தெரியாமல் மர்ம நபர்களுக்கு வண்டிகளில் ஏற்றி அனுப்பிய சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
அரசு பள்ளியில், நோட்டு புத்தகங்களை கடத்திய ஆசிரியர் மற்றும் தூய்மை பணியாளர் தற்காலிகமாக பணி இடமாற்றம் செய்துள்ளனர். புத்தகங்களை கடத்திய ஆசிரியரை பணி நீக்கம் செய்ய வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சில்வார்பட்டி கிராமத்தில் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் 1200, க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் செப்டம்பர் 26 ஆம் தேதி இரவு பள்ளியின் கேட்டை திறந்து சரக்கு வாகனம் மற்றும் டூவீலரில் சில நபர்கள் உள்ளே சென்றுள்ளனர். இதைப் பார்த்த அப்பகுதி பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பின் தொடர்ந்து சென்று மறைந்திருந்து பார்த்தபோது மாணவர்களுக்கு வழங்க வைத்திருந்த புத்தகங்கள் அறையைத் திறந்து கட்டுக்கட்டாக புத்தகங்கள் மற்றும் நோட்டுகளை சரக்கு வாகனத்தில் ஏற்றியுள்ளனர். இதைப் பார்த்த அப்பள்ளி மாணவர்கள் மறைந்திருந்து செல்போன் மூலம் வீடியோ எடுத்துள்ளனர். பள்ளியில் இருந்த பாட புத்தகங்கள் மற்றும் நோட்டுக்களை ஏற்றிய பின்பு அந்த சரக்கு வாகனம் மற்றும் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் அங்கிருந்து திருடி சென்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து வீடியோ எடுத்த சமூக வலைத்தளத்தில் பரப்பி உள்ளதால் பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் இதுகுறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் பாண்டியன் கேட்டபோது எனக்குத் தெரியாமலே புத்தகங்களை எடுத்துச் சென்றுள்ளதாகவும், எனக்கும் இந்த சம்பவத்துக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என முதலில் தெரிவித்தவர் பின்னர், பள்ளியில் பழைய பேப்பர்கள் கரையான் அறித்துள்ளதால் அந்த பேப்பர்களைத்தான் அங்கிருந்து எடுத்துச் சென்றுள்ளதாக முன்னுக்கு முரண்பாக பதில் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அரசுப் பள்ளியில் புத்தகங்களை கடத்திய வீடியோ காட்சி சமூகவலைத் தலைப்பில் வேகமாக பரவியதால் பள்ளியின் தலைமை ஆசிரியர் பாண்டியன் புத்தகங்கள் எடுத்துச் சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த மாணவர்கள் கூறுகையில், பெரியகுளம் சில்வார்பட்டி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் மாலை வேளைகளில் கால்பந்து விளையாடி வருகின்றனர். அப்படி மாலையில் வந்த பள்ளியின் வாட்ச்மேன் மற்றும் பியூன் விஜயன் இருவரும் எங்களை புத்தகம் திருட்டு சம்பவம் நடந்த நாளன்று தங்களை விளையாட வேண்டாம் எனச் சொல்லி கிளம்ப சொன்னார்கள். எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் என்ன நடக்கிறது என்பதை பார்ப்பதற்காகப் மறைந்திருந்தோம். அப்போது ஒரு டெம்போ மற்றும் இரண்டு பைக்குகளில் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் பள்ளிக்குள் வந்ததாகவும்.பள்ளியில் வேலை செய்யும் ஆசிரியர் பாரதிராஜா அவர்களிடம் பேசி, பள்ளியில் உள்ள புத்தக பண்டல்களை எடுத்து டெம்போவிற்குள் ஏற்றியதாகவும். அப்போது உள்ளே நடந்ததை தாங்கள் மறைந்திருந்து வீடியோ எடுத்ததாகவும் தெரிவித்தனர். தாங்கள் வீடியோ எடுத்ததைப் பார்த்த அந்த ஆசிரியரும் டெம்போவில் வந்திருந்தவர்களும் உடனே வண்டியை எடுத்துக்கொண்டு அவசரமாகச் சென்று விட்டனர்.
மேலும் நாங்கள் எடுத்த வீடியோவை நீக்குமாறும், இந்த விஷயம் வெளியே தெரிந்தால் பெரிய பிரச்சனையாகிவிடும், இது பற்றி வெளியே சொல்லாமல் இருக்க எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருவதாகவும் கூறி ஊர்க்காரர் ஒருவர் தங்களுடன் பேசினார். தாங்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தோம் என்றனர். இது தொடர்பாக வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சம்பவம் குறித்து விசாரணை நடத்திய அதிகாரிகள், ஆசிரியர் பாரதிராஜா மற்றும் தூய்மை பணியாளர் ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.





















