Watch Video : தடுப்பூசி முகாம் பேனரில், ஏன் பிரதமர் மோடி படம் இல்லை? வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாஜகவினர்
சிவகங்கை மாவட்டத்தில் தடுப்பூசி முகாமில் கட்டப்பட்டிருந்த அரசு பேனரில் பிரதமர் மோடியின் படம் ஏன் இல்லை? என்று பா.ஜ.க.வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சிவகங்கை மாவட்டத்தின் இளையான்குடி அருகே உள்ள சாலைக்கிராமம் என்ற கிராமத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது. இந்த முகாமின்போது அரசின் சார்பில் கொரோனா தடுப்பூசி முகாமிற்கான சிறிய பேனர் கட்டப்பட்டிருந்தது. அந்த பேனரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படம் இடம்பெற்றிருந்தது.
தடுப்பூசி முகாம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அங்கு சிலர் வந்தனர். அவர்கள் தடுப்பூசி முகாமில் இருந்த சுகாதாரத்துறை பணியாளர்களை அழைத்து, தடுப்பூசி முகாமிற்கான பேனரில் ஏன் பிரதமர் மோடியின் படம் போடவில்லை என்றும், கருணாநிதி மற்றும் மு.க.ஸ்டாலின் படம் ஏன் போட்டுள்ளீர்கள்? என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர், அந்த சிறிய பேனரை அவர்களே அகற்றி முகாம் நடைபெற்ற இடத்தில் வைத்துவிட்டனர்.
மேலும், இனிமேல் பாரதப்பிரதமர் மோடியின் படம் இல்லாமல் பேனர் கட்டக்கூடாது என்றும், தமிழக அரசின் முத்திரையுடன் மட்டும் பேனர் கட்டுங்கள் என்றும் எச்சரித்துவிட்டு சென்றனர். இதனால், தடுப்பூசி முகாம் நடைபெற்ற இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், இந்த விவகாரங்கள் அனைத்தும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களிலும் பதிவிடப்பட்டது.
கடந்து செல்லவா... 😡
— Dr.Senthilkumar.S (@DrSenthil_MDRD) December 4, 2021
Video Courtesy: Twitter @Theni_ponnu pic.twitter.com/VtP5CJ2akI
இந்த வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்ட, தருமபுரி எம்.பி. செந்தில்குமார், கடந்து செல்லவா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக, தி.மு.க.வின் முன்னாள் எம்.எல்.ஏ. மதியரசன், இளையான்குடி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், தடுப்பூசி முகாமில் சுகாதாரப்பணியாளர்களை பணி செய்யவிடாமல் தடுத்த பா.ஜ.க.வைச் சேர்ந்த கோவிந்தன், செல்லக்குடி மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்துள்ளார்.
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்