ஜோதிமணி பிரச்சாரத்தில் இளைஞரின் திடீர் வாக்குவாதம்! பரபரப்பு கிளம்பிய காரணம் என்ன?
காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய அரசின் 100 நாள் வேலை திட்டத்தின் பெயரை மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராமங்கள் தோறும், எம்பி ஜோதிமணி பிரச்சாரம் செய்து வருகிறார்.
காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டமான 100 நாள் வேலை திட்டம் என்பதற்கு பதிலாக விபி-ஜி ராம் ஜி என்ற திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.மேலும் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தினரும் இன்றைய தினம் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் காங்கிரஸ் எம்பி ஜோதிமணியும் பாஜகவுக்கு எதிரான பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சமூக சொத்துக்கள் நாடு முழுவதும் உருவாக்கப்பட்டுள்ளது. நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளன, வேளாண் உற்பத்தி அதிகரித்துள்ளன. இந்த திட்டத்தின் மூலம் பட்டியலின மக்கள், பழங்குடியினர், பெண்கள் என சமூகத்தின் பலவீனமான பகுதியினர் வருமான வாய்ப்பு காரணமாக சுயமரியாதையுடன் கண்ணியமான வாழ்க்கை சூழலை பெற்று வருகின்றனர். வேலைவாய்ப்பு உத்தரவாதத்தை 100 நாட்களிலிருந்து 125 நாட்களாக நாட்களாக உயர்த்தியுள்ளதாக மோடி அரசு போலியான கூற்றுகளை முன்வைத்து வருகிறது என்று காங்கிரஸ் தரப்பு குற்றஞ்சாட்டி வருகிறது.
இந்தநிலையில், காங்கிரஸ் கட்சி சார்பில் மத்திய அரசின் 100 நாள் வேலை திட்டத்தின் பெயரை மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராமங்கள் தோறும், எம்பி ஜோதிமணி பிரச்சாரம் செய்து வருகிறார். அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள கல்வார்பட்டி கிராமத்திற்கு ஜோதிமணி இன்று வருகை தந்திருந்தார். அப்போது 100 நாள் வேலை திட்டத்தின் பெயரை மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜோதிமணி பேசிக் கொண்டிருந்தபோது, திடீரென ஒரு இளைஞர் அங்கு வந்தார். ஜோதிமணியிடம், எங்கள் கிராமத்திற்கு என்ன செய்தீர்கள்? என்று கேட்டு ஜோதிமணியிடம் வாக்குவாதம் செய்தார். இதனை சற்றும் எதிர்பார்க்காத அங்கிருந்த காங்கிரஸ் நிர்வாகிகள், அந்த இளைஞரை அங்கிருந்து விரட்டியடிக்க முயன்றனர்.
ஆனாலும், அந்த இளைஞர் விடவில்லை. என்னை அடி. ஆனால் எங்கள் பகுதிக்கு என்ன செய்தீர்கள், பதில் வேண்டும் என்று அவர்களிடம் கேட்டபடியே தகராறு செய்தார். இதனை தொடர்ந்து பொதுமக்களும் அந்த இளைஞரை அங்கிருந்து செல்லுமாறு சொன்னார்கள். அதன்பிறகு அங்கிருந்த நகர்ந்த அந்த இளைஞர், தெருவில் சென்ற நாயை தூக்கி கொஞ்ச ஆரம்பித்தார். அப்போது அவர் போதையில் இருந்தது தெரியவந்தது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுவிட்டது. பிறகு பொதுமக்களிடம் பேசிய ஜோதிமணி, காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வந்த 100 நாள் வேலைத்திட்டத்தை மத்திய அரசு பெயரை மாற்றியதோடு மட்டுமின்றி நிதியையும் குறைத்து விட்டது. இந்த திட்டத்தில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள ஏராளமான குடும்பத்தினர் பயனடைந்து வருகின்றனர். ஆனால் மகாத்மா காந்தியின் பெயர் வைத்த காரணத்தினாலேயே மத்திய அரசு இத்திட்டத்தை முடக்கி விட்டது என்று குற்றஞ்சாட்டினார்.





















