(Source: ECI/ABP News/ABP Majha)
தேனி | தர்மாபுரி என்னும் "இராணுவ பேட்டை" : வியக்கவைக்கும் ஒரு அதிசய கிராமம்..!
தேனி மாவட்டம் கோட்டூர் அருகே அமைந்துள்ளது தர்மாபுரி கிராமம் இந்த கிராமத்தில் உள்ள ஆண்கள் பெரும்பாலனோர் இந்திய இராணுவ பணியிலேயே சேர்ந்து பணியாற்றி வருகின்றனர்.
சுதந்திரப் போராட்ட காலம் முதல் இன்று வரை இக்கிராமத்தில் உள்ள ஆண்கள் பெரும்பாலனோர் இந்திய இராணுவத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் பணியாற்றி வருகின்றனர்.
பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்திற்கு எதிராகவும், ஆங்கிலேயப் படையை எதிர்த்து போரிடவும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், இந்திய தேசிய ராணுவத்தை தொடங்கினார். இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து வீரம் மிக்க துடிப்பான பலர் இந்திய தேசிய ராணுவத்தில் சேர்ந்து வந்தனர். அந்தக் காலகட்டம் முதல் இப்போதுவரை வீட்டிற்கு ஒருவரை ராணுவத்திற்கு அனுப்பிக்கொண்டிருக்கிறது தேனி மாவட்டத்தில் உள்ள தர்மாபுரி என்ற கிராமம்.
தேனி மாவட்டம் கோட்டூர் அருகே அமைந்துள்ளது தர்மாபுரி கிராமம். இங்கு ஏராளமான குடும்பங்கள் வசிக்கின்றன. இந்த கிராமத்தில் உள்ள ஆண்கள் பெரும்பாலனோர் இந்திய ராணுவ பணியிலேயே சேர்ந்து பணியாற்றி வருகின்றனர். இந்த கிராமத்தில் ஒரே சமூகத்தை சார்ந்தவர்கள் மட்டுமே உள்ளனர். முன்பு இப்பகுதியில் பெரும் பஞ்சம் நிலவியதாலும், அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் இவர்களுக்கு பெரும் சிக்கல் இருந்த நிலையில் அன்றைய கால கட்டத்தில் சுதந்திரப் போராட்டத்திற்கு சுபாஷ் சந்திர போஸ் அழைப்பு விடுத்ததாலும் ஊரில் உள்ள ஆண்கள் இந்திய இராணுவத்தில் சேர்ந்து உள்ளனர்.
பின்பு தலைமுறை தலைமுறையாக இந்த பழக்கம் இங்கு ஒட்டிக்கொண்டது. இதன் பின்னர் இங்கு உள்ள சிறுவர்கள் விவரம் தெரிந்த வயது முதல் இராணுவத்தில் சேர வேண்டும் என்ற எண்ணம் உருவாகி அதற்கான உடற்தகுதிகளை தயார் செய்வதில் மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள மேல் வீடு, கீழ் வீடு, அருகில் உள்ள வீடு, எதிர் வீடு என எங்கு பார்த்தாலும் இராணுவ வீரர்களே. சிறுவர்கள் தினமும் காலையும், மாலையும் உடற் தகுதி பயிற்சி செய்து வருகின்றனர். சிறுவர்கள் பள்ளிப்படிப்பு முடித்தவுடன், தமிழகத்தில் எங்கு ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு நடந்தாலும், முதல் ஆளாக ஆஜராகிவிடுகிறார்கள் தர்மாபுரி கிராமத்து இளைஞர்கள்.
இந்த கிராமத்தில் முன்னாள் ராணுவத்தினர் நலச்சங்கம் என்ற பெயரில், ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களை ஒருங்கிணைத்து தர்மாபுரி கிராமத்தில் சங்கம் ஒன்றை நடத்துகிறார்கள். கிராமத்தில் உள்ள இளைஞர்களை சிறு வயது முதலே ராணுவத்தில் சேர்வதற்காக பயிற்சி அளிப்பதே அச்சங்கத்தினரின் பிரதான பணியாக இருந்து வருகிறது. இளைஞர்களையும், மாணவர்களையும் உடலளவிலும் மனதளவிலும் தயார்படுத்தும் பணியினை மேற்கொண்டு வருகின்றனர் ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ வீரர்கள்.
இது குறித்து ஊரில் உள்ள இராணுவ இளைஞர்கள் கூறுகையில், "விடுமுறைக்கு வரும் ராணுவ வீரர்கள், ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் என எப்போதும் ராணுவ வீரர்களைச் சுற்றியே கிராமத்து இளைஞர்களும், மாணவர்களும் இருப்பதால், இயல்பாகவே ராணுவத்திற்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் இங்கு உள்ள சிறுவர்களுக்கு தோன்றுகிறது. வீட்டில் நான்கு ஆண்கள் இருந்தால் அனைவருமே ராணுவ பணியில் இருப்பர். இங்கு தற்போது 1,300-க்கும் மேற்பட்டோர் பணியில் உள்ளனர். 800 பேருக்கும் மேற்பட்டோர் ஓய்வு பெற்றுள்ளனர். எங்கள் கிராமத்தை 'இராணுவ கிராமம்' என்றே அருகில் உள்ள ஊரை சேர்ந்தவர்கள் அழைக்கின்றனர்” என்கிறார்கள்
மேலும் படிக்க தெரிந்துகொள்ள,