கம்பத்தில் 57 கிலோ கஞ்சா பறிமுதல்: கேரள இளைஞர்கள் கைது! போதை வலையில் சிக்கியதா கம்பம்?
தேனி மாவட்டம், கம்பத்தில் கேரளத்துக்கு காரில் கடத்திச் சென்ற 57 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, கேரளத்தைச் சோ்ந்த 3 இளைஞா்களை போலீசார் கைது செய்தனா்..
தமிழக, கேரள எல்லையை இணைக்கும் முக்கிய நகரமாக கம்பம் விளங்குகிறது. இந்தப் பகுதியின் பிரதான தொழிலாக விவசாயம் இருந்து வருகிறது. தமிழக கேரள எல்லையை ஒட்டி உள்ளதால் கம்பத்திலிருந்து ஏராளமான வணிக ரீதியான போக்குவரத்துகள் தமிழக, கேரள இரு மாநிலங்களுக்குமிடையே இருந்து வருகிறது.
கேரள எல்லையை ஒட்டியுள்ள கம்பம் மெட்டு, குமுளி, கட்டப்பனை, வண்டிப்பெரியார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து கேரள மாநிலத்தவர்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக கம்பம் பகுதிக்கு அதிகம் வருவதுண்டு, அவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த வளர்ந்து வரும் நகரமாக கம்பம் திகழ்கிறது, அதேபோலத்தான் இரு மாநில எல்லைப் பகுதியை ஒட்டியுள்ள போடி நகர் பகுதியும், கம்பம் இருபோக விவசாயத்திற்கு மட்டும் பிரபலமானது அல்ல, இங்கு கஞ்சா விற்பனையும் பிரபலமானது என கூறப்படுகிறது.
கம்பம் பகுதியில் சட்டவிரோதமாக அதிக அளவில் கஞ்சா விற்பனை என்பது இன்றும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என புகார் எழுந்துள்ளது. தமிழக கேரள எல்லையை ஒட்டியுள்ள பகுதியாக இருப்பதால் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்களும் குறிப்பாக இளைஞர்கள் அதிகம் கம்பத்திற்கு வந்து கஞ்சா வாங்கி கொண்டு செல்வது தற்போதும் தொடர்கதையாகி வருகிறது. ”கஞ்சா போதையினா அது கம்பம் கஞ்சா தான்” என்ற வசனம் பழைய மலையாள படங்களிலும் வந்துள்ளது. அது போலதான் கம்பத்தில் கிடைக்கும் கஞ்சாவின் போதைக்கு தனி மார்க்கெட் உள்ளது. கம்பம் வடக்குப்பட்டி பகுதியில் மற்றும் பல்வேறு பகுதிகளில் தற்போது சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை என்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது,
தற்போது விலை ஏற்றமும் அதிகப்படியாக கஞ்சாவிற்கு கூடுதல் மார்க்கெட் எகிறியுள்ளது. இதனை தடுப்பதற்கு தேனி மாவட்ட காவல்துறை மற்றும் கேரள இடுக்கி மாவட்ட காவல்துறை என இரு மாநில எல்லைப் பகுதிகளில் கஞ்சா கடத்துவது குறித்தும் தடுப்பு நடவடிக்கைகளிலும் அவ்வப்போது போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். கஞ்சா போதை பழக்கத்திற்கு அடிமையான இளைஞர்கள் கம்பத்திலிருந்து கஞ்சா வாங்கிக்கொண்டு செல்லும்போது போலீசாரால் பிடிபடுவது போன்ற சம்பவங்களும் அவ்வப்போது நடந்து வருகிறது. இந்த சம்பவங்களில் குறிப்பாக இளைஞர்கள் மட்டுமே அதிகமாக சிக்கி வருகின்றனர்.
இந்த நிலையில், தற்போது ஆந்திரத்திலிருந்து கடத்திவரப்பட்ட கஞ்சா, கம்பம் வழியாக கேரளத்துக்கு காரில் கொண்டு செல்லப்படுவதாக தேனி மாவட்டம், போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.இதனை கம்பம் வடக்கு போலீசா கம்பம் - கூடலூா் புறவழிச் சாலையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, கேரளத்தை நோக்கிச்சென்ற காரில் 28 பொட்டலங்களில் 57 கிலோ இருப்பது தெரியவந்தது.இதையடுத்து, கஞ்சா, காா், 3 கைப்பேசிகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனா். விசாரணையில், கஞ்சா கடத்தியது கேரள மாநிலம், நடக்கல் பகுதியைச் சோ்ந்த முகமது சிஜாஸ் (25), இடுக்கி மாவட்டம், தொடுபுழா அருகே குடயத்தூரைச் சோ்ந்த ஆசாத் (25), எா்ணாகுளத்தைச் சோ்ந்த ரியாஷ் (26) எனத் தெரியவந்தது.இதுகுறித்து வழக்குப் பதிந்த கம்பம் வடக்கு போலீசார், முகமது சிஜாஸ், ஆசாத், ரியாஷ் ஆகியோரைக் கைது செய்து தேனி கண்டமனூா் மாவட்டச் சிறையில் அடைத்தனா்.





















