Madaurai: கி.பி 15ம் நூற்றாண்டைச் சேர்ந்த பன்றிக் குத்திப்பட்டான் நடுகல் சிற்பம் கண்டுபிடிப்பு!
அலங்காநல்லூர் அருகே தனியார் நிலப் பகுதியில் 600 ஆண்டு பழமையான பன்றிக் குத்திப்பட்டான் நடுகல் சிற்பம் கண்டறியப்பட்டது.
வீரக்கல், நடுகல், நினைவுத்தூண், வீரன்கல், சுமைதாங்கிக் கல் எனப் பல வடிவங்களில் பல வகைகளாக, இறந்துபோனவர்களை தியாகிகளாக போற்றிய பண்பாடாக தமிழர் பண்பாடு உள்ளது. 'வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும்' என்றார், வான் பொய்ப்பினும் தான் பொய்க்காத வள்ளுவர்.
நடுகல் வழிபாடு:
இதன் பொருள் என்ன? சிறப்பாக வாழ்ந்தவர் தெய்வத்துக்குச் சமமாக வணங்கப்படுவார் என்பதுதான். அதாவது, தமிழர்கள் ஆதியில் தன்னுடைய முன்னோர்களையே வணங்கி வந்துள்ளனர் என்பதைக் குறிப்பிட்டுள்ளார். இதன் அடையாளமாக எழுந்தவைதான் நடுகல் வழிபாடு. இந்நிலையில் அலங்காநல்லூர் அருகே தனியார் நிலப் பகுதியில் 600 ஆண்டு பழமையான பன்றிக் குத்திப்பட்டான் நடுகல் சிற்பம் கண்டறியப்பட்டது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் ஆலம்பட்டி அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தாளாளர், எம். எஸ். ஷா, பொருளாளர் சகிலா ஷா, அவர்களின் ஆலோசனைப்படி, முதல்வர் அப்துல் காதிர் அவர்களின் வழிகாட்டுதலின்படி வரலாற்றுத்துறை தலைவர் மணிமேகலை, பேராசிரியை இருளாயி, மாணவர் கல்லாணை ஆகியோர் வெள்ளையன் பட்டி இருந்து முடுவார்பட்டி செல்லும் வழியில் தனியார் விவசாய பகுதியில் மேற்பரப்பு கள ஆய்வு மேற்கொண்டபோது கிபி 15 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பன்றிக் குத்திப்பட்டான் நடுகல் கற்சிற்பம் கண்டறியப்பட்டது.
#madurai | கி.பி 15ம் நூற்றாண்டைச் சேர்ந்த பன்றிக் குத்திப்பட்டான் நடுகல் சிற்பம் கண்டுபிடிப்பு !
— arunchinna (@arunreporter92) September 29, 2023
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே தனியார் நிலப் பகுதியில் 600 ஆண்டு பழமையான பன்றிக் குத்திப்பட்டான் நடுகல் சிற்பம் கண்டறியப்பட்டது.@DrDMuneeswaran2 | @k_for_krish @abplive pic.twitter.com/GliYdyoRKp
இதுகுறித்து வரலாற்றுத்துறை தலைவர் மணிமேகலை கூறியதாவது
இன்றைய தமிழ் சமூகத்தில் வேளாண்மை முக்கியத் தொழிலாக இருக்கிறது. பரந்துவிரிந்த காணப்பட்ட காடுகளை அழித்து விவசாயம் செய்ய உகந்த நிலமாக மாற்றினார்கள். குறிப்பாக அலங்காநல்லூர் பகுதியில் விவசாயம் தொழில் அதிக முக்கியத்துவம் பெற்று காணப்படுகிறது. பன்றிக் குத்திப்பட்டான் கல் என்பது, அக்காலத்தில் விவசாய நிலங்களுக்குள் நுழைந்து காட்டுப்பன்றிகள் விளை பொருட்களை சேதப்படுத்தி வந்தது அக்காட்டுப் பன்றிகளிடம் இருந்து விவசாயத்தையும் பாதுகாக்க ஒரு போர் வீரனை நியமிப்பார்கள்.
அவ்வீரன் ஊருக்கு துன்பம் விளைவித்து வந்த காட்டுப்பன்றியை அழிக்கும் நோக்குடன், வீரன் போராடும் போது அப்பன்றியும், வீரனும் இறந்திருக்கக்கூடும். அவ்வீரன் வீரத்தை போற்றும் வகையில் நடுகல் எடுக்கும் வழக்கம் உண்டு. பன்றி தாக்கி இறந்தால், பன்றிக் குத்திப்பட்டான் கல் என்று அழைக்கப்படுகிறது.
பன்றிக் குத்திப்பட்டான் கல்
இவ்வாறு கண்டறியப்பட்ட நடுகல் 3 அடி உயரமும் 1 ½ அடி அகலம் கொண்டவை. இவ்வீரனின் தலை மீது கொண்டையும், காதில் குண்டலங்களும், இடுப்பிற்கு கீழ் ஆடை அணிந்து உள்ளான். காதுகளிலும் கழுத்திலும் ஆபரணங்கள் அணிந்துள்ளனர். கரங்களில் மேலிருந்து கீழாக இரண்டு இடங்களில் பூணூலாக அணிந்துள்ளார். இடையில் சிறு குறு வாளுடன் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. காட்டுப்பன்றியை தனது நீண்ட வேல்கம்பு பன்றியின் மார்பில் குத்துவது போல் உள்ளது.
வேட்டை நாய் சிற்பம்
பன்றி குத்தப்பட்டான் நடுகல் வீரன் சேர்ந்து வேட்டை நாய் சிற்பம் பொறிக்கப்பட்டுள்ளது. இச்சிற்பத்தை வேட்டைநாய் பன்றியோடு போராடி உயிர் பிரிந்து இருக்கலாம் . அதனால் தான் வீரன் மற்றும் வேட்டை நாயின் வீரத்தை பறைசாற்றும் விதமாக நடுகல் எடுக்கப்பட்டுள்ளது. இச்சிற்பத்தை வடிவமைப்பு பொறுத்தமட்டில் கிட்டதட்ட 600 ஆண்டு பழமையான சிற்பமாக கருதலாம். தற்போது இவ்வூரில் வாழும் மக்கள் குலதெய்வங்களாக இந்த சிற்பங்களை வணங்கி வருகின்றனர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - அமைச்சர் மாறுவதால் அறிவிப்புகள் பின்வாங்கப்படுமா?- பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி