காஞ்சிபுரம்: வாக்காளர் பட்டியல் திருத்தம்! உங்கள் பெயர் உள்ளதா? இல்லையா? உடனே சரிபார்க்கவும்!
SIR Draft Voter List 2026 Tamil Nadu: "காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2.74 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர் வரைவு வாக்காளர் பட்டியல் முழு விவரம் "

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பு தீவிரத் திருத்தம் வரைவு வாக்காளர் பட்டியல் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டார்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்
இந்திய தேர்தல் ஆணையம் 01.01.2026 தேதியை அடிப்படையாகக் கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் 2026 பணியினை மேற்கொள்ள கடந்த 27.10.2025 அன்று அறிவிப்பு செய்தது. அதன்படி, காஞ்சிபுரம் தேர்தல் மாவட்டத்தில் உள்ள ஆலந்தூர், திருப்பெரும்புதூர், உத்திரமேரூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்காளர்களுக்கு 04.11.2025 முதல் 14.12.2025 வரை வீடுதோறும் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் (BLO) சென்று கணக்கெடுப்பு படிவங்கள் விநியோகித்து வாக்காளர்களிடமிருந்து பூர்த்திசெய்யப்பட்ட படிவங்கள் பெறப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, தேர்தல் ஆணையத்தின் உத்திரவின்படி, பெறப்பட்ட படிவங்கள் தொகுக்கப்பட்டு வரைவு வாக்காளர் பட்டியல் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சியினரின் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் இன்று (19.12.2025) வெளியிட்டார்.
1545 வாக்குச்சாவடி மையங்கள்
மேலும் 1200-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் கொண்ட வாக்குச்சாவடி மையங்களை கண்டறிந்து வாக்காளர்கள் எந்த சிரமும் இன்றி வாக்களிக்க ஏதுவாக அவற்றில் மற்றொரு புதியதாக வாக்குச்சாவடி மையத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்திரவின்படி, காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதியில் 27 என வாக்குச்சாவடி மறுசீரமைப்பிற்கு (Rationalisation) பின்பு 144 புதியதாக ஏற்படுத்தப்பட்டு தற்போது உள்ள 1401 வாக்குச்சாவடி மையங்களின் எண்ணிக்கையிலிருந்து 1545 வாக்குச்சாவடி மையங்களாக அதிகரித்துள்ளன.
எவ்வளவு வாக்காளர்கள் நீக்கம் ?
காஞ்சிபுரம் மாவட்டத்தின் 4 சட்டமன்ற தொகுதிகளில், தற்போது உள்ள 1401 வாக்குச்சாவடி மையங்களின் எண்ணிக்கையானது வாக்குச்சாவடி மறுசீரமைப்பிற்கு (Rationalisation) பின்பு 1545 ஆக அதிகரிக்கவுள்ளது. வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறவுள்ளவர்களின் எண்ணிக்கை 11,26,924 ஆகும்.
இறந்தவர்கள் (Death) - 57,658, இரட்டைபதிவு (Double Entry) - 10,719, இடம் பெயர்ந்தவர்கள் (permanently Shifted) - 1,46,621 கண்டறிய முடியாதவர்கள் (untraceable / Absent) - 58,675 மற்றும் மற்றவை (Others) - 601 என நீக்கப்படவுள்ள மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை - 2,74,274.
பட்டியலை சரி பார்ப்பது எப்படி ?
வரைவு வாக்காளர் பட்டியலினை காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்கள், வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் / வட்டாட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் அலுவலகங்களில் மற்றும் வாக்குச்சாவடி நிலைய அலுவலரிடத்திலும் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்படும்.
பொது மக்கள் அலுவலக நேரங்களில் இந்த வரைவு வாக்காளர் பட்டியலை நேரடியாக பார்வையிடலாம். மேலும், இவ்வரைவு வாக்காளர் பட்டியல் குறித்த விவரங்கள் elections.tn.gov.in என்ற இணையதளத்திலும் மற்றும் கண்டறிய முடியாதவர்கள், இடம் பெயர்ந்தவர்கள், இறப்பு (Absent, Shifted, Death- ASD) குறித்த விவரங்கள் kancheepuram.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் மேற்படி வரைவு வாக்காளர் பட்டியல் தொடர்பாக உரிமை கோரல்கள், மறுப்புரைகள் தொடர்பாக விண்ணப்பிப்பது மற்றும் 18 வயது நிரம்பிய அனைவரும் வரைவு வாக்காளர் பட்டியலினை சரிபார்த்து, தங்களது பெயர் விடுபட்டுள்ளதா அல்லது தவறாக வேறொரு இடத்தில் உள்ளதா அல்லது இடம்பெற்றுள்ள விவரங்களில் ஏதேனும் திருத்தம் செய்யப்பட வேண்டுமா என்பதை உறுதி செய்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டுமெனின் படிவம் -6 னையும், திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டுமெனின் படிவம் -8 னையும், பெயர் நீக்கவேண்டுமெனின் படிவம் -7 னையும் 19.12.2025 முதல் 18.01.2026 வரையில் விண்ணப்பித்து, மேற்படி விண்ணப்பிங்கள் மீது 19.12.2025 முதல்10.02.2026 வரை விசாரணை மற்றும் சரிபார்ப்பு செய்து 17.02.2026 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு செய்யப்பட வேண்டும் என்றும் அறிவித்துள்ளது.
மேலும், மேற்படி படிவங்களை வாக்காளர்பதிவு அலுவலரிடத்திலோ, உதவி வாக்காளர்பதிவு அலுவலரிடத்திலோ, வாக்குச்சாவடிநிலைய அலுவலரிடமோ மற்றும் Voters.eci.gov.in என்ற முகவரியிலும் பதிவேற்றம் செய்யலாம்.





















