எரிக்கப்பட்ட அமித்ஷா பொம்மை.. விசிக நிர்வாகியின் மீது பரவிய தீ.. தெறித்து ஓடிய கட்சியினர்
Kanchipuram News: ஆர்ப்பாட்டத்தில் அமித்ஷா உருவ பொம்மை எரித்து ஈடுபட்ட பொழுது உருவ பொம்மையை, காலால் மிதிக்க முயன்ற போது விசிக நிர்வாகியின் கால் பகுதியில் தீ பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
காஞ்சிபுரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக கோரி காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு விசிகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு
நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார். அப்போது அவர், “அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர் என்று சொல்வது இப்போது ஒரு ஃபேஷன் ஆகிவிட்டது. இதற்குப் பதிலாக, கடவுளின் பெயரை இவ்வளவு சொல்லியிருந்தால், அவர்களுக்குச் சொர்க்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும். அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் அமித்ஷா பேசியதற்கு காங்கிரஸ், திமுக,விசிக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
அமித்ஷா விளக்கம் என்ன ?
இந்நிலையில் அம்பேத்கர் குறித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதற்கு விளக்கமளித்துள்ளார். அவர் தெரிவித்ததாவது: எனது பேச்சின் ஒரு பகுதியை மட்டும் திரித்து எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர்; எனது முழு பேச்சையும் கேட்டுவிட்டு பேசுங்கள். நாங்கள், அம்பேத்கருக்கு எதிரானவர்கள் இல்லை.
நேற்று முதல் காங்கிரஸ் கட்சியானது, எனது உரையை திரித்து, உண்மைக்கு எதிரான கருத்தை முன்வைத்து வருகிறது, அதை நான் கண்டிக்கிறேன். காங்கிரஸ் கட்சியானது அம்பேத்கருக்கு எதிரானது; இடஒதுக்கீடு மற்றும் அரசியலமைப்புக்கு எதிரானது. காங்கிரஸ் கட்சியினர் வீர் சாவர்க்கரை அவமதித்துள்ளனர். அவசரகால சட்டம் மூலம் , அரசியலைப்புச் சட்டத்திற்கு எதிராக செயல்பட்டவர்கள். மேலும், எதிர்க்கட்சிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் குறித்து பாஜக ஆராய்ந்து வருவதாகவும் மத்திய அமைச்சர் உள்துறை அமித்ஷா தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரத்தில் வெடித்த போராட்டம்
காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காஞ்சிபுரம் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அம்பேத்கர் குறித்து சர்ச்சை கூறிய கருத்தை பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமிஷாவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்படத்தில் ஈடுபட்ட விசிகவினர் திடீரென சாலையின் நடுவே நகர்ந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில் திடீரென உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் உருவ பொம்மையை பெட்ரோல் ஊற்றி கொளுத்தி கண்டனத்தை தெரிவித்து வந்த நிலையில் விசிக நிர்வாகி ஒருவர் எரிந்த உருவ பொம்மையை மிதிக்க முயன்ற பொழுது காலில் தீ பற்றி எரிந்ததால் விசி கேப்டன் அலறி ஓடியதால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. இந்த போராட்டத்தில் 200க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உடனடியாக பதவி விலக வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.