Kanchipuram Rain: காஞ்சிபுரம் 2 மணி நேரத்தில் 4.2 செ.மீ மழை! தத்தளிக்கும் மக்கள், போக்குவரத்து பாதிப்பு!
Kanchipuram Rain: "காஞ்சிபுரத்தில் இரண்டு மணி நேரத்தில் 4.2 செ.மீ வரை மழை: தாழ்வான பகுதிகள் வெள்ளநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்"

"காஞ்சிபுரத்தில் 2 மணி நேரத்தில் கொட்டி தீர்த்த மழை, காஞ்சிபுரத்தில் 3.2 சென்டிமீட்டர் மழை பதிவானது, வாலாஜாபாத்தில் அதிகபட்சமாக 4.2 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது"
காஞ்சிபுரத்தில் கனமழை
காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று மதியம் நேரத்தில் இரண்டு மணி நேரம் கொட்டித் தீர்த்த கனமழையால், நகரின் பல முக்கியப் பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் மதியம் 2 மணி முதல் நான்கு மணி வரை, மாவட்டத்தில் அதிகபட்சமாக வாலாஜாபாத் பகுதியில் 4.2 சென்டிமீட்டர் மழையும், காஞ்சிபுரத்தில் 3.24 சென்டிமீட்டர் மழையும், ஸ்ரீபெரும்புதூரில் 2.28 சென்டிமீட்டர் மழையும் பதிவானது. அதேபோன்று உத்திரமேரூர் பகுதியில் ஒரு சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தை பொருத்தவரை காஞ்சிபுரம் மாநகராட்சி பகுதி, சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர், இருங்காடு கோட்டை, உத்திரமேரூர், வாலாஜாபாத் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
தாழ்வான பகுதியில் புகுந்த வெள்ள நீர்
இந்த திடீர் கனமழையின் காரணமாக, காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட செவிலிமேடு, மேட்டுத் தெரு, ரயில்வே சாலை உள்ளிட்ட அனைத்து தாழ்வான பகுதிகளிலும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. பல இடங்களில் சாலைகளை மூழ்கடித்து நீர் ஓடியதால், இருசக்கர வாகனங்கள் கிட்டத்தட்ட தண்ணீரில் மூழ்கி நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், அலுவலகம் மற்றும் அத்தியாவசிய பணிகளுக்காக வெளியே சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். "மழை எப்போது பெய்தது என்று தெரியவில்லை, ஆனால் தண்ணீர் எங்களைப் பார்க்க சீக்கிரமே வந்துவிட்டது" என்று பாதிக்கப்பட்ட மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
மாணவர்களும் அவதி
மாலை நேரத்தில் பல இடங்களில் தண்ணீர் தேங்கி வருவதால் பள்ளி கல்லூரிக்கு சென்று வந்த மாணவர்கள் அவதி அடைந்துள்ளனர். தொடர்ந்து பல இடங்களில் மழைநீர் வெள்ளம் காரணமாக, போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர்.





















