காஞ்சிபுரம் குமரக்கோட்டம் கோயிலில் பரபரப்பு! வேல் பூஜை செய்ய முயன்ற விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் கைது!
"காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகர் கோயிலில், அனுமதியின்றி வேல் பூஜை செய்ய வந்த விஸ்வ இந்து பரிஷயத் அமைப்பினர் கைது செய்யப்பட்டனர்"

காஞ்சிபுரம் பிரசித்தி பெற்ற குமரக்கோட்டம் முருகர் கோயிலில், அனுமதியின்றி வேல் பூஜை செய்ய ஊர்வலமாக வந்த விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினரை கோவிலில் வாசலில் தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்தனர். இன்று கோவிலில் அதிக பக்தர்கள் கூட்டம் குவிந்த நேரத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்
காஞ்சிபுரம் மேற்கு ராஜவீதியில் அமைந்துள்ள கந்தபுராணம் அரங்கேற்றிய திருக்கோவிலான அருள்மிகு ஸ்ரீ குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கடந்த வாரம் கந்த சஷ்டி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
இதில் கடந்த திங்கள்கிழமை அன்று கந்த சஷ்டி பெருவிழா நிறைவு நாளில் விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பாஜகவினர் அனுமதி இன்றி ஊர்வலமாக வேல் பூஜை செய்வதற்காக கோவிலின் அருகே வரும் பொழுது, இந்து சமய அறநிலைத்துறையினரும் மற்றும் போலீஸார் அனுமதி இல்லை என தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினரை தடுத்து நிறுத்திய காவல்துறை
இதன் தொடர்ச்சியாக இன்று குமரகோட்டம் முருகன் கோவிலில் இன்று வேல் பூஜை செய்ய இருப்பதாக விஷ்வ இந்து பரிஷத் சேர்ந்த இந்து அமைப்பினர் முடிவெடுத்தனர். இதனைத் தொடர்ந்து வட தமிழக மாநில அமைப்பு செயலாளர் ராமன் தலைமையில் 20க்கும் மேற்பட்ட பக்தர்களுடன் கச்சபேஸ்வரர் கோவிலில் இருந்து ஆறடி உயரம் கொண்ட வேலுடன் ஊர்வலமாக சென்றனர். ஊர்வலமாக வந்தவர்கள் காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோவிலில் நுழைய முயன்ற போது போலீசார் மற்றும் இந்து சமய அறநிலைத்துறையினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கைது செய்த போலீசார்
இந்து அமைப்பனுடன் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் போலீசார் 20-க்கும் மேற்பட்ட நபர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். கோவிலில் இன்று சுபமுகூர்த்தம் நாள் என்பதால் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு என்று வருகை தரும் நிலையில் வேல் பூஜை செய்வதாக போலீஸாருக்கும் இந்துமதம் எல்லாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பக்தர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.






















