ஆட்டோமேட்டிக் கழிவறை, நாப்கின் டிஸ்பென்சர், தமிழ்நாட்டில் முதல் முறை: அசத்தும் அரசு மகளிர் பள்ளி!
Kanchipuram News : "தமிழகத்திலேயே முதல் முறையாக எந்த ஒரு தனியார் பள்ளியிலும் இல்லாத அளவிற்கு உயர்தர நவீன வசதிகளுடன் கட்டப்ட்டுள்ள முதல் அரசு பள்ளி கழிவறை இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது "
தனியார் பள்ளிகளுக்கே சவால் விடும் வகையில் சகல வசதிகளுடன் கூடிய அரசு பள்ளி கழிவறை. தமிழக்திலியே முதன்முதலாக அரசு மகளிர் பள்ளியில் மின்னணு தானியங்கி மூலம் செயல்படுத்தப்படும் வெஸ்டர்ன் டாய்லெட், தானியங்கி தண்ணீர் குழாய்கள், நாப்கின் அறை உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் 50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கழிவறையை திறந்து வைத்த காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர்
அதிநவீன கழிப்பறை
அரசு பள்ளிகளில் கழிவறை வசதி சரியாக இருப்பாது என்பது பொதுவான குற்றச்சாட்டாக இருக்கிறது. ஆனால் அதை மாற்றும் வகையில் காஞ்சிபுரத்தில், நவீன வசதிகளுடன் அரசு பெண்கள் பள்ளியில் கழிவறை செயல்பாட்டிற்கு வந்துள்ளது. காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட சின்ன காஞ்சிபுரம் பகுதியில் உள்ள பி.எம்.எஸ்.அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் சுமார் 1000க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் மாணவிகளுக்கு கூடுதல் கழிப்பறை வேண்டும் என காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசனிடம் கோரிக்கை வைத்த நிலையில் பள்ளி வளாகத்தில் காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி நிதியிலிருந்து ரூபாய் 49.50 லட்சம் மதிப்பில் மாணவிகள் பயன்பாட்டிற்காக அதிநவீன வசதிகளுடன் கூடிய கழிப்பறை கட்டும் பணியை காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அடிக்கல் நாட்டி பணியினை துவக்கி வைத்தார்.
நாப்கின் அழிக்கும் கருவி
தற்போது கட்டப்பட்டுள்ள கழிப்பறையில் தானியங்கி மின்னணு மூலம் இயங்கக்கூடிய வகையில் 20 வெஸ்டர்ன் டாய்லெட்கள்,1 மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறை, கைக் கழுவும் தானியங்கி குழாய்கள்,தொற்று பரவாமல் தடுக்க நாப்கின் அழிக்கும் கருவியுடன் நாப்கினுக்கென்று தனி அறை, உள்ளிட்ட பல வசதிகளுடன் அரசு பள்ளிகள் மாணவிகளின் நலனில் அக்கறைக் கொண்டு சுமார் 49.50 லட்சம் மதிப்பீட்டில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டி முடிக்கப்பட்டது.
தமிழகத்திலேயே முதல் முறையாக
இதனைத் தொடர்ந்து,கட்டிமுடிக்கப்ட்ட நவீன (ஹைடெக்) வசதிகளுடன் கூடிய கழிப்பறையை காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் திறந்து வைத்து மாணவர்கள் பயன்பாட்டிற்கு வழங்கினார். தமிழகத்திலேயே முதல் முறையாக எந்த ஒரு தனியார் பள்ளியிலும் இல்லாத அளவிற்கு உயர்தர நவீன வசதிகளுடன் கட்டப்ட்டுள்ள முதல் அரசு பள்ளி கழிவறை இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் கூறுகையில், பெண்கள் படிக்கக்கூடிய பள்ளிகளில் அவர்கள் பயன்படுத்தக்கூடிய கழிவறைகள் மிகவும் சுகாதாரமாக இருக்க வேண்டும் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. கழிவறைகளில் இருந்துதான் அதிகளவில் சுகாதார சீர்கேடு மற்றும் தொற்றுகள் ஏற்படுகிறது. எனவே,கழிவறை நவீன முறையில் கட்டவேண்டும் என்ற நோக்கில் முதல்முறையாக இந்த கழிவறை கட்டப்பட்டுள்ளது.
தனியார் பள்ளியிலும் இல்லாத அளவிற்கு கட்டப்ட்டுள்ள இந்த கழிவறையை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் கட்ட அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் தலைமையில் ஆலோசிக்கப்பட இருக்கிறது. இங்கு கட்டப்பட்டுள்ள 20 தனிகழிவறை,மாற்றுத் திறனாளிக்கான தனி கழிவறை, இவை அனைத்தும் தானியங்கி மூலம் செய்யப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.மேலும், நாப்கின்னால் (Napkin) நோய்தொற்று பரவாமல் தடுக்கும் விதமாக நாப்க்கின் அழிக்கும் கருவியும் தனிஅறையில் பொருத்தப்பட்டுள்ளது.
கழிவறையில் உள்ள மின்னணு தானியங்கி மின்சாரம் இல்லையென்றாலும் செய்லபடும் , ஒரு வேளை மின்சாரம் இல்லாமல் செயல்படாத சூழ்நிலை ஏற்படாமல் தவிர்க்கும் நோக்கில் சூரிய ஒளி மின்சார தகடுகளும் பொருத்தப்பட்டுள்ளது.இதனால், தானியங்கி மின்னணு எந்த ஒரு காரணத்தினாலும் செய்லடாமல் போக வாய்ப்பில்லை என காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் தெரிவித்தார்.