500 ரூபாய்க்கு இறப்பு சான்றிதழ்! உயிருடன் இருக்கும் கவுன்சிலருக்கு அதிர்ச்சி: மருத்துவர் மீது நடவடிக்கை கோரிக்கை!
உயிரோடு இருக்கும் மாமன்ற உறுப்பினருக்கு 'இறப்பு சான்றிதழ்': மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார்

"500 ரூபாய்க்கு உயிரோடு இருப்பவர்களுக்கு இறப்பு சான்றிதழ், கையும் களவுமாக பிடித்துக் கொடுத்த கவுன்சிலர்"
காஞ்சிபுரம் மாநகராட்சி கவுன்சிலர்
காஞ்சிபுரம் மாநகராட்சி, 48-வது வார்டு மாமன்ற உறுப்பினர் கார்த்திக், உயிருடன் இருக்கும் தன்னை மாரடைப்பால் இறந்துவிட்டதாகப் போலியான மருத்துவ இறப்பு சான்றிதழ் அளித்த மருத்துவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு அளித்துள்ளார்.
சம்பவத்தின் பின்னணி:
மாமன்ற உறுப்பினர் கார்த்திக் அளித்த மனுவில், காஞ்சிபுரம், ஜவஹர்லால் தெரு எண் 14-இல் வேணுகோபால் என்பவர் மருத்துவப் பதிவு செய்து மருத்துவம் பார்த்து வருகிறார். இவர் பொதுமக்களுக்கு இறப்புச் சான்று தேவைப்படும்போது, எந்தவிதப் பரிசோதனையும் செய்யாமல், ரூபாய் 500 பெற்றுக்கொண்டு மருத்துவ இறப்பு சான்றிதழ்களை வழங்கி வருவதாகக் கார்த்திக்குக்குத் தகவல் கிடைத்துள்ளது.
இதன் உண்மைத்தன்மையை அறியும் பொருட்டு, மாமன்ற உறுப்பினர் கார்த்திக் தனது நண்பரை அனுப்பி, தான் இறந்துவிட்டதாகச் சான்றிதழ் கேட்டுப் பெற்று வருமாறு கூறியுள்ளார்.
ரூ. 500 பெற்றுக் கொண்டு சான்றிதழ்:
அதன்படி சென்ற நண்பரிடம், மருத்துவர் வேணுகோபால் ரூபாய் 500 பெற்றுக் கொண்டு, மாமன்ற உறுப்பினர் கார்த்திக் தன்னிடம் மருத்துவம் பார்த்ததாகவும், அவர் மாரடைப்பால் இறந்துவிட்டதாகவும் போலியான மருத்துவ இறப்புச் சான்றிதழை அளித்துள்ளார்.
மாவட்ட நிர்வாகத்திடம் புகார்:
உயிருடன் இருக்கும் தனக்கே பணம் பெற்றுக் கொண்டு இறப்பு சான்றிதழ் வழங்கிய இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து, மாமன்ற உறுப்பினர் கார்த்திக் இன்று (திங்கட்கிழமை) காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் முருகேசன் அவர்களிடம் புகார் மனு அளித்தார்.
நடவடிக்கை கோரிக்கை:
மருத்துவத் துறைக்கே களங்கம் ஏற்படுத்தும் வகையில் இதுபோன்று போலிச் சான்றிதழ்கள் வழங்கும் அந்த மருத்துவரின் மருத்துவத் தகுதியை நீக்கம் செய்ய வேண்டும் என்றும், அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாமன்ற உறுப்பினர் கார்த்திக் தனது மனுவில் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து கார்த்திக் கூறுகையில், "பொதுமக்களுக்கு போலியான முறையில் இறப்புச் சான்றிதழ் வழங்குபவர் மீது மாவட்ட நிர்வாகம் உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.




















