Kanchipuram: திமுக கவுன்சிலர்கள் எதிர்ப்பு.. அதிமுக கவுன்சிலர்கள் ஆதரவு.. தப்பித்த திமுக மேயர்
கவுன்சிலர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக மேயர் அறிவிப்பு.
காஞ்சிபுரம் மாநகராட்சி தேர்தல், கடந்த 2022 ஆம் ஆண்டு, நடைபெற்றது. மொத்தம் உள்ள 51 வார்டுகளில் 32 வார்டுகளில் திமுகவும், 1 வார்டில் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றுள்ளன. மொத்தம் 33 வார்டுகளில் வெற்றி பெற்று, திமுக கூட்டணி காஞ்சிபுரம் மாநகராட்சியைக் கைப்பற்றியது. அதிமுக 9 வார்டுகளிலும், பாமக 2 வார்டுகளிலும், பாஜக 1 வார்டிலும், பிற இடங்களில் சுயேச்சைகள் வெற்றி பெற்றிருந்தனர். சுயேட்சைகள் பலரும் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தனர். மேயர் தேர்தலில் மகாலட்சுமி யுவராஜ் காஞ்சிபுரத்தில் முதல் மேயராக பதவி ஏற்றார்.
மேயர் மகாலட்சுமி யுவராஜ்
காஞ்சிபுரம் மேயராக மகாலட்சுமி பொறுப்பேற்று இருந்தாலும், சில மாதங்களிலேயே கவுன்சிலர்களால் பிரச்சனை எழத் துவங்கியது. திமுகவை சார்ந்த கவுன்சிலர்களே மேயருக்கு எதிராக திரும்பத் தொடங்கினர். திமுக தலைமை கழகம் சார்பில், அதிருப்தி திமுக கவுன்சிலர்களிடம் பல கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது. அமைச்சர் நேரு முன்னிலையிலும், தலைமை நிலைய நிர்வாகிகள் முன்னிலையிலும் நடைபெற்ற பேச்சு வார்த்தைகளும் தோல்வியில் முடிந்தன.
நம்பிக்கை இல்லா தீர்மானம்
மாநகராட்சி ஆணையரிடம் 33 கவுன்சிலர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என கடிதம் கொடுத்தனர். இந்தநிலையில் கடந்த ஜூலை மாதம் 29ஆம் தேதி, மேயருக்கு எதிரான நம்பிக்கை இல்லாத தீர்மானம் குறித்த விவாதம் மற்றும் வாக்கெடுப்பு கூட்டம் நடைபெற்றது. மேயர் உட்பட யாரும் நம்பிக்கை இல்லாத தீர்மானம் மீது வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாததால், தீர்மானம் தோல்வியில் முடிந்தது.
மாமன்ற கூட்டம்
இந்நிலையில் தற்போது 8 மாதங்கள் கழித்து மாநகராட்சி மேயர் தலைமையில் மாமன்ற கூட்டமானது இன்று நடைபெற்றது. மேயர் மகாலட்சுமி யுவராஜுக்கு 30க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் இருந்ததால் தீர்மானம் நிறைவேற்றப்படுவதில் சிக்கல் ஏற்படும் என தகவல்கள் வெளியாகி இருந்தன. கூட்டம் நடத்த வேண்டும் என்றால், 18 கவுன்சிலர்கள் வருகை பதிவேட்டில் கையெழுத்திட வேண்டும் என்ற நிலை இருந்த நிலையில், மேயர் மகாலட்சுமி உட்பட 18 கவுன்சிலர்கள் வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டனர்.
இதனைத் தொடர்ந்து கூட்டம் தமிழ் தாய் வாழ்த்துடன் தொடங்கியது. இதனை அடுத்து தீண்டாமை ஒழிப்பு குறித்து உறுதிமொழி எடுக்கப்பட்டது. அடுத்த சில நொடிகளில் 96 தீர்மானங்களில் 3 மற்றும் 4-வது தீர்மானங்களை தவிர்த்து அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்படுவதாக மேயர் மகாலட்சுமி யுவராஜ் அறிவித்தார். ஒரு சில மேயர் ஆதரவு கவுன்சிலர்கள், மேஜையை தட்டி வரவேற்றனர்.
கவுன்சிலர்கள் வாக்குவாதம்
அதிமுக கவுன்சிலர் குட்டி என்கின்ற சண்முகசுந்தரம் பேசுகையில், மேயருக்கு பெரும்பான்மை இல்லாததால், ஒவ்வொரு தீர்மானம் மீது தனித்தனியாக வாக்கு எடுப்பு நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதனைத் தொடர்ந்து அவருடன் மேயர் எதிர்ப்பு திமுக கவுன்சிலர்கள் , அதிமுக மற்றும் எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதிமுக மற்றும் எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் மேயர் முன்பு அமர்ந்து , பெரும்பான்மை இல்லாத மேயர் என கோஷங்கள் எழுப்பினர்.
எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மறுபுறம் காஞ்சிபுரம் மாநகராட்சியின் இரண்டாவது மண்டல தலைவர் சந்துரு பெண் கவுன்சிலரை ஒருமையில், பேசியதாக கண்டித்து பெண் கவுன்சிலர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஒருபுறம் 30க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் , முடிவெடுக்கக் கூடிய அதிகாரம் என்னிடம் இருக்கிறது. எனவே அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்படுவதாக கூறி அங்கிருந்து மேயர் மகாலட்சுமி யுவராஜ் வேகமாக புறப்பட்டார்.
மறுபுறம் துணை மேயர் குமரகுருநாதன் அனைத்து தீர்மானங்களும் பெரும்பான்மை இல்லாததால் நிறைவேற்றப்படவில்லை என அறிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேயர் எதிர்ப்பு திமுக கவுன்சிலர்கள் உட்பட எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் அனைவரும் தொடர்ந்து, கூட்ட அரங்கிலேயே காத்திருப்பதால் பரபரப்பு நீடித்தது.
காப்பாற்றிய அதிமுக கவுன்சிலர்கள்
வருகை பதிவேட்டில் கையெழுத்திட்டு, கூட்டம் நடைபெறுவதற்கு காரணமாக இருந்த 17 இல் கவுன்சிலர்களில், மூன்று கவுன்சிலர்கள் அதிமுக கவுன்சிலர்கள் என்பது மேயர் எதிர்த்து தரப்பு கவுன்சிலர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. குறிப்பாக அதிமுகவை சேர்ந்த அகிலா தேவதாஸ், பிரேம் மற்றும் வேலரசு ஆகியோர் கையெழுத்திட்டதால் இந்த கூட்டம் வெற்றிகரமாக நடைபெற காரணமாக இருந்தது. கையெழுத்து போட்டுவிட்டு மூன்று கவுன்சிலர்களும் கூட்டம் தொடங்குவதற்கு முன்பே வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது.