காஞ்சிபுரம் DSP கைது உத்தரவை ரத்து செய்த உயர்நீதிமன்றம்! பரபரப்பு பின்னணி என்ன?
"காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேசை கைது செய்ய பிறப்பித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது"

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த பூசிவாக்கம் பகுதியில், காஞ்சிபுரம் அடுத்த நத்தப்பேட்டை பகுதியை சேர்ந்த சிவகுமார் என்பவர் டீ மற்றும் பேக்கரி கடை வைத்து நடத்தி வருகிறார். அதே பூசிவாக்கம் பகுதியை சார்ந்த சிமெண்ட் முருகன் என்பவர், கேக் வாங்குவதற்காக கடைக்கு வந்துள்ளார். அப்போது கேக் தரமற்றதாக இருந்ததாக கூறி முருகன் மற்றும் சிவகுமார் ஆகிய இருவருக்கிடையே, வாக்குவாதம் ஏற்பட்டது.
அடிதடி சண்டை
இந்தநிலையில் பேக்கரி கடை உரிமையாளர் சிவகுமாரின், மருமகன் லோகேஷ் நீதிமன்ற காவலராக பணியாற்றி வருகிறார். லோகேஷ் சிவகுமாருக்கு ஆதரவாக, முருகனிடம் சண்டை போட்டதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் சிவகுமாருக்கும் முருகனுக்கும் அடிதடி சண்டை நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, இதுகுறித்து முருகனின் மனைவி பார்வதி வாலாஜாபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து வாலாஜாபாத் காவல் நிலையத்தில், முருகனின் மனைவி பார்வதி கொடுத்த புகாரின் அடிப்படையில் சிவக்குமார் மீது வாலாஜாபாத் காவல் துறையினர் பல்வேறு பிரிவின்கில் வழக்கு பதிவு செய்தனர். குறிப்பாக வன்கொடுமை தடுப்பு பிரிவு சட்டத்தின் கீழ், சிவகுமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
தாமாக முன்வந்து நீதிபதி விசாரணை
வழக்கு பதிவு செய்யப்பட்டு 15 நாட்களுக்கு மேலாகியும், நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி தாமாக முன்வந்து காஞ்சிபுரம் முதன்மை நீதிபதி செம்மல் இதுவரை எதிரிகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என வழக்கை விசாரித்தார். இது தொடர்பாக காஞ்சிபுரம் சட்ட ஒழுங்கு டிஎஸ்பி, சங்கர் கணேஷ் ஆஜராக உத்தரவு பிறப்பித்தார்.
நேற்று சங்கர் கணேஷ் ஆஜராகி, நீதிபதி முன்னிலையில் விளக்கம் அளித்தார். அப்போது நீதிபதி மாலை 5 மணிக்குள், சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார். ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்படாததால், டிஎஸ்பிஐ கைது செய்து சிறையில் அடிக்க நீதிபதி உத்தரவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் நீதிமன்ற வளாகத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து டிஎஸ்பி மருத்துவ பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது, உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுமதி அனுப்பி வைக்கப்பட்டார்.
காவல்துறை விளக்கம்
இதுகுறித்து ஏபிபி நாடு செய்தி நிறுவனத்திடம் காவல்துறையினர் பேசுகையில், இதில் இருவருக்கிடையே இருந்த தனிப்பட்ட பிரச்சனை காரணமாகவே நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்ததாக தெரிவித்தனர். டிஎஸ்பி மாயமானதாக பரவிய தகவலிலும் உண்மை இல்லை என விளக்கம் அளித்து இருந்தனர்.
உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்
இந்தநிலையில் இன்று காலை டிஎஸ்பி சங்கர் கணேஷ் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. சங்கர் கணேஷ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தனிப்பட்ட விரோதம் காரணமாக பழி வாங்குவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக புகார் தெரிவிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி டி.எஸ்.பி., கைது செய்ய பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தார்.





















