![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Parandur Airport Row : தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள்.. போராடும் மக்களுக்கு எதிராக வழக்குப்பதிவு..
Parandur Airport Protest : பரந்தூர் விமான நிலையம் வேண்டாம் என ஏகனாபுரம் கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
![Parandur Airport Row : தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள்.. போராடும் மக்களுக்கு எதிராக வழக்குப்பதிவு.. case has been registered against the villagers of Ekanapuram after they participated in the election boycott protest against Parandur airport Parandur Airport Row : தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள்.. போராடும் மக்களுக்கு எதிராக வழக்குப்பதிவு..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/22/5a6e217d669fd01b5c3a80e0f14b6b6b1713757271948113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் ( Parandur Airport )
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார 13 கிராம பகுதிகளை உள்ளடக்கிய 5,700 ஏக்கர் பரப்பளவில் பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்கப்படும் என மத்திய, மாநில அரசுகள் அறிவிப்பு வெளியிட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறது. பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைப்பதால் நெல்வாய், தண்டலம், மடப்புரம், நாகப்பட்டு, ஏகனாபுரம், மேலேறி, ஆகிய கிராமங்களில் விவசாய நிலங்கள் மட்டுமின்றி குடியிருப்புகளும் அகற்றப்பட உள்ளதால், தங்களின் இருப்பிடமும், வாழ்வாதாரமான விளைநிலங்களும் பறிபோய் விடும் எனக் கூறி விமான நிலையம் அமைக்க, எதிர்ப்பு தெரிவித்து, நாள்தோறும் இரவு நேரங்களில் ஊர் மைதானத்தில் கிராம மக்கள் ஒன்று கூடி அமர்ந்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
600-வது நாளை கடந்து போராட்டம்
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஏகாம்பரம் கிராம மக்களின் போராட்டம் 635- வது நாளை எட்டியுள்ளது. கிராம மக்களின் போராட்டம் நடக்கும் நிலையில் கடந்த அக்டோபர் மாதம், விமான நிலைய திட்டத்துக்கான நிர்வாக அனுமதி வழங்கி அரசாணை வெளியிட்டது. இந்தநிலையில், இந்த திட்டத்தை செயல்படுத்த, 3 மாவட்ட வருவாய் அலுவலர்கள் தலைமையில், 3 துணை ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர், 29 தாசில்தார்கள், 6 துணை தாசில்தார்கள உட்பட 324 பேர் பணி அமர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நில எடுப்பு தொடர்பான மண்டல அலுவலர்களும் திறக்கப்பட்டு செயல்பாட்டிற்கு வந்துள்ளன.
தேர்தல் புறக்கணிப்பு
![Parandur Airport Row : தேர்தலை புறக்கணித்த கிராம மக்கள்.. போராடும் மக்களுக்கு எதிராக வழக்குப்பதிவு..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/22/175010a055849270c23b995177f549a81713757331296113_original.jpg)
இந்நிலையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலை புறக்கணிப்பதாக கிராம மக்கள் முடிவெடுத்தனர். இதன் அடிப்படையில் தபால் வாக்குகள் கூட பதிவு செய்யாமல் அதிகாரிகளை வெறுங்கையுடன் திருப்பி அனுப்பினர். இதனை தொடர்ந்து நடந்த தேர்தல் புறக்கணிப்பையும் கிராம மக்கள் வாக்களிக்க செல்லவில்லை, சுமார் 1400 வாக்குகள் உள்ள இந்த கிராமத்தில் 21 வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்தது.
அதுவும் அரசு ஊழியர்கள் அந்த வாக்குகளை பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அதிகாரியுடன் வாக்குவாதம்
இந்நிலையில் தேர்தல் நாளன்று வட்டாட்சியர் சுந்தரமூர்த்தி , அரசு ஊழியர்களின் குடும்பத்தினரும் வாக்களிக்க வேண்டும் என பேச்சுவார்த்தை மேற்கொள்ள வந்த பொழுது கிராம மக்கள் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எங்கள் போராட்டத்தை கண்டுகொள்ளாத நீங்கள் இன்று மட்டும் ஏன் வருகிறீர்கள் எனவும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள்.
இதனால் அரசு அதிகாரிகளுக்கும் கிராம மக்களுக்கும் இடையே பதற்றம் ஏற்பட்டது. சம்பந்தப்பட்ட இடத்திலிருந்து போலீசார் சமாதானம் மேற்கொண்டனர். தொடர்ந்து வட்டாட்சியர் மற்றும் இதர அதிகாரிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
தொடரும் வழக்குப்பதிவு
இந்நிலையில் வட்டாட்சியர் கொடுத்த புகாரின் பெயரில் சுங்குவார்சத்திரம் போலீசார் 5 பிரிவின் கீழ் கிராம மக்கள் 10 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். சுப்பிரமணியன், கதிரேசன், கணபதி, பலராமன் , முனுசாமி, இளங்கோவன், கவாஸ்கர், சுதாகர், ஓம் பகவதி, விவேகானந்தன் ஆகிய 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஏற்கனவே போராட்டத்தில் ஈடுபடும் கிராம மக்கள் மீது தடை மீறி போராடியது உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் மீண்டும் மற்றொரு வழக்கை காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இன்று வழக்கில் சம்பந்தப்பட்ட 10 கிராம மக்களும், காவல் நிலையத்தில் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)