Bhogi Pandigai: வந்துச்சு வந்துச்சு பொங்கல் வந்துச்சு..! பழைய பொருட்களை எரித்து போகி கொண்டாட்டம்..!
சிறுவர், சிறுமியர் மேளம் அடித்து போகி பண்டிகை கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்
தைப்பொங்கலை வரவேற்கும் விதமாக அதிகாலையிலேயே போகிப் பண்டிகை கொண்டாடிய காஞ்சி நகர மக்கள். தங்கள் வீடுகளை சுத்தம் செய்து சேகரித்த தேவையற்ற பொருட்களை, குழந்தைகள் மேளம் கொட்டிட தீயிட்டு கொளுத்தி மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.
Bhogi Pongal 2024 ( போகிப் பண்டிகை )
உலகம் முழுக்கவே அறுவடை திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் அறுவடை திருவிழாவாக பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது. வேளாண்மையே இந்நாட்டின் முதன்மையான தொழில் என்பதால் அறுவடை காலத்தையும், விவசாயத்திற்கு ஆதாரமாக இருக்கும் சூரியனை போற்றி நன்றி தெரிவிக்கும் விதமாக பொங்கல் கொண்டாடப்படுகிறது. அதற்கு முந்தைய நாள், போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
சுத்தம், சுகாதாரத்தை பேணும் விதமாக போகி கொண்டாடப்பட்டு வருகிறது. ‘புதியன புகுதல்’ என்று சொல்லப்படுவதை கேட்டிருப்போம். தை பிறந்தால் வழி பிறக்கும் என கொண்டாடும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை, தை மாதத்தின் முதல் நாளான நாளை கொண்டாடப்படுகிறது. தைப்பொங்கலை வரவேற்கும் விதமாக மார்கழி மாதத்தின் கடைசி நாளை போகிப் பண்டிகை என கொண்டாடுவது தமிழ் மக்களின் மரபு.
தீயவை போக்கும் போகி
என்னென்ன செய்யலாம்?
- போகிப் பண்டிகையன்று தெய்வங்களை வழிபடும் வழக்கம் உள்ளது. அன்றைக்கு வீடுகளில் விளக்கேற்றி வழிபடலாம்.
- மழைக்காலம் முடிந்து குளிர்காலம் என்பதால் நோய்க்கிருமிகள் பரவும் ஆபத்து அதிகமிருக்கும் காலம் என்பதால் நோய்த்தொற்று பரவலில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள வீட்டை சுத்தமாக வைத்துகொள்ள வேண்டும்.
- போகி அன்று போளி, பாயசம் உள்ளிட்ட சமையல் செய்து இறைவனை வழிபடலாம்.
- போகி அன்று மதியத்திற்கு சுத்தம் செய்து முடித்துவிட வேண்டும். முந்தைய நாளில் சுத்தம் செய்யும் பணிகளை தொடங்கிவிடலாம். அப்போதுதான் மறுநாள் பொங்கல் கொண்டாட முடியும்.
- தீய எண்ணங்கள், பழக்கங்களை கைவிட முயற்சி செய்யுங்கள்.
- நன்மைகளே சூழட்டும்.