பாலியல் வன்கொடுமை புகாரில் அமைச்சர் மகன்! பாதிக்கப்பட்ட பெண் மீது தாக்குதல் - ராஜஸ்தானில் பதற்றம்
தெற்கு டெல்லியில் தாயுடன் பாதிக்கப்பட்ட பெண் நடந்து செல்லும்போது இந்த தாக்குதல் சம்பவம் அரங்கேறியுள்ளது.
ராஜஸ்தான் அமைச்சரின் மகன், தன்னை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாக 23 வயது பெண் ஒருவர் குற்றம் சுமத்தியிருந்தார். இதையடுத்து, டெல்லியில் உள்ள சாலையில் அவர் நடந்து சென்ற கொண்டிருக்கும் போது, அவர் மீது மையை வீசி தாக்கியுள்ளனர்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இதை காவல்துறையினர் உறுதி செய்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தெற்கு டெல்லியில் பாதிக்கப்பட்ட பெண் தாயுடன் நடந்து செல்லும்போது இந்த தாக்குதல் சம்பவம் அரங்கேறியுள்ளது. இதில் இரண்டு ஆண்கள் ஈடுபட்டதாக காவல்துறையிடம் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார். காளிந்தி குஞ்ச் சாலை அருகே பாதிக்கப்பட்ட பெண் மீது இரண்டு நபர்கள், நீல நிற மையை வீசிவிட்டு தப்பி ஓடினர்.
அந்த பெண் எய்ம்ஸ் அதிர்ச்சி மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு முழுமையாக பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டதாக காவல்துறை அலுவலர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து தென்கிழக்கு காவல்துறை துணை ஆணையர் ஈஷா பாண்டே கூறுகையில், "முதன்மையாக, வீசப்பட்ட நீல நிற திரவம் மை போல் தெரிகிறது. இந்த விவகாரத்தில், இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 195 ஏ (எந்தவொரு நபரையும் பொய்யான சாட்சியத்தைக் கூறுமாறு அச்சுறுத்தல்), 506 (மிரட்டல்), 323 (காயப்படுத்துதல்) மற்றும் 34 (உள் நோக்கம்) ஆகியவற்றின் கீழ் ஷாஹீன் பாக் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.
குற்றவாளிகளை அடையாளம் காணவும், இந்த சம்பவம் எப்படி நடந்தது என்பது குறித்து தெரிந்து கொள்ளவும் போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துவருகின்றனர்.
ராஜஸ்தான் அமைச்சர் மகேஷ் ஜோஷியின் மகன் மீது பாதிக்கப்பட்ட பெண் ஏற்கனவே பாலியல் வன்கொடுமை புகா் அளித்துள்ளார். இந்த புகாரையடுத்து, டெல்லியில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அமைச்சரின் மகன் ரோஹித் ஜோஷியை கைது செய்ய போலீஸ் குழு ஜெய்ப்பூருக்கு அனுப்பப்பட்டது. ஆனால் அமைச்சரின் மகனை வீட்டில் இல்லை.
கடந்த ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி முதல் இந்த ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி வரை அமைச்சரின் மகன் தன்னை பல சந்தர்ப்பங்களில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதாகவும், மேலும் தன்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்ததாகவும் அந்த பெண் தனது புகாரில் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு, ரோஹித் ஜோஷியும் பாதிக்கப்பட்ட பெண்ணும் ஃபேஸ்புக்கின் மூலம் அறிமுகமாகியுள்ளனர். அதன்பிறகு அவர்கள் தொடர்பில் இருந்ததாகவும் அந்த பெண் கூறியுள்ளார். ரோஹித் ஜோஷி தன்னை கடத்தி மிரட்டியதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.