ரேடியோ ஜாக்கி டூ மாநிலத்தின் இளம் எம்எல்ஏ.. மிசோரத்தை திரும்பி பார்க்க வைத்த இளம் பெண் வன்னேசங்கி! யார் இவர்?
ரேடியோ ஜாக்கியாக தனது பயணத்தை தொடங்கி, தற்போது இளம் அரசியல்வாதியாக உருவெடுத்துள்ளார் பேரில் வன்னேசங்கி.
ஐந்து மாநில தேர்தல் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. பெரிய மாநிலங்களுக்கு இணையாக மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருந்தது மிசோரம் தேர்தல். பெரும்பாலான கருத்துக்கணிப்புகளை பொய்யாக்கும் விதமாக முடிவுகள் அமைந்தது. ஆளும் மிசோ தேசிய முன்னணியை தோற்கடித்து சோரம் மக்கள் இயக்கம் மிசோரத்தில் ஆட்சி அமைக்க உள்ளது.
மிசோரத்தில் ஆட்சியை பிடித்த சோரம் மக்கள் இயக்கம்:
கிட்டத்தட்ட கடந்த 40 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சியும் மிசோ தேசிய முன்னணியும் மாறி மாறி ஆட்சி அமைத்து வந்தது. இச்சூழலில், இந்த தேர்தலில் அதற்கு முடிவு கட்டியுள்ளது சோரம் மக்கள் இயக்கம். அக்கட்சியின் தலைவர் லால்டுஹோமா வரும் வெள்ளிக்கிழமை முதலமைச்சராக பதவியேற்க உள்ளார்.
இந்த தேர்தலில் சோரம் மக்கள் இயக்கம், 27 இடங்களை கைப்பற்றி மாபெரும் சாதனை படைத்துள்ளது. அதே சமயத்தில், அக்கட்சியை சேர்ந்த பெண் ஒருவர், இந்த தேர்தலில் வெற்றிபெற்றதன் மூலம் மாநிலத்தின் இளம் சட்டப்பேரவை உறுப்பினராகியுள்ளார். ரேடியோ ஜாக்கியாக தனது பயணத்தை தொடங்கி, தற்போது இளம் அரசியல்வாதியாக உருவெடுத்துள்ளார் பேரில் வன்னேசங்கி.
ஐஸ்வால் தெற்கு-III தொகுதியில் போட்டியிட்ட 32 வயதான பேரில் வன்னிசங்கி 1,414 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். இன்ஸ்டாகிராமில் பிரபலமாக வலம் வரும் இவருக்கு 2 லட்சத்து 52 ஆயிரம் பாலோவர்கள் உள்ளனர். தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். இந்த தேர்தலில் வென்ற மூன்று பெண்களில் இவரும் ஒருவர்.
மாநிலத்தை திரும்பி பார்க்க வைத்த இளம்பெண்:
தேர்தல் முடிவுகள் வெளியானதை தொடர்ந்து, தனது வெற்றி பற்றி பேசிய பேரில் வன்னேசங்கி, "நாங்கள் விரும்பும், தொடர விரும்பும் செயலை செய்வதிலிருந்து நமது பாலினம் நம்மைத் தடுக்காது என்பதை அனைத்து பெண்களுக்கும் நான் சொல்ல விரும்புகிறேன். நாம் விரும்பும் செயலை செய்யவிடாமல் பாலினம் நம்மை தடுக்கக் கூடாது.
பெண்களுக்கு எனது செய்தி என்னவென்றால், அவர்கள் எந்த சமூகம் அல்லது சமூக அடுக்குகளை சேர்ந்தவர்கள் என்பதைப் பொருட்படுத்தாமல், அவர்கள் எதையாவது செய்ய விரும்பினால், அவர்கள் அதை நோக்கி செல்ல வேண்டும்" என்றார்.
ஷில்லாங்கில் உள்ள நார்த் ஈஸ்டர்ன் ஹில் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ள பேரில் வன்னிசங்கி, ஐஸ்வால் முனிசிபல் கவுன்சிலராக இருந்துள்ளார்.
அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து சில பகுதிகளை பிரித்து மிசோரம் மாநிலம் உருவாக்கப்பட்டது. யூனியன் பிரதேசமாக இருந்த மிசோரமுக்கு கடந்த 1987ஆம் ஆண்டு முழு மாநில அந்தஸ்து வழங்கப்பட்டது. மிசோரத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான லால் தன்ஹாவ்லா, ஐந்து முறை முதலமைச்சராக பதவி வகித்துள்ளார்.