Yogi Adityanath | "1.54 கோடி ரூபாய்.. துப்பாக்கி, ரிவால்வர்.." : யோகி ஆதித்யநாத் சமர்ப்பித்த சொத்து விவரங்கள்..
1 கோடியே 54 லட்சத்து 94 ஆயிரத்து 054 ரூபாய் சொத்து இருப்பதாக தெரிவித்ததில், இதில் கையிலிருக்கும் பணம், ஆறு வங்கி கணக்குகளில் உள்ள பணம் மற்றும் சேமிப்பு ஆகியவை அடங்கும்.
உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் போட்டியிடும் முதல்வர் யோகி ஆதித்ய்நாத்துக்கு ரூ1.54 கோடி சொத்துகள் இருப்பதாக வேட்புமனுவில் தெரிவித்துள்ளார். மேலும் கைத்துப்பாக்கி, ரிவால்வர் ஆகியவையும் தம்மிடம் இருப்பதாக வேட்புமனுவில் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். நடைபெற உள்ள 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக, நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசத்தில் பிப்ரவரி 10 தொடங்கும் தேர்தல் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூர் தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்தார். இந்நிகழ்வில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார்.
லோக்சபா எம்.பி.யாக பல முறை வெற்றி பெற்ற யோகி ஆதித்யநாத் உ.பி. சட்ட மேலவை உறுப்பினராக இருந்து வருகிறார். இதுவரை அவர் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டதில்லை என்ற நிலையில், தற்போது கோரக்பூர் நகர்ப்புறம் தொகுதியில் யோகி ஆதித்யநாத் போட்டியிடுகிறார். அதன்மூலம் யோகி ஆதித்யநாத் போட்டியிடும் முதல் சட்டமன்ற தேர்தல் இதுவாகிறது. கோரக்பூர் நகர் தொகுதியில் போட்டியிடும் யோகி ஆதித்யநாத், நேற்று தமது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். இத்தொகுதிக்கு 6-வது கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது அதாவது, இவர் போட்டியிடும் இந்த தொகுதிக்கு உத்திரபிரதேச மாநிலத்தின் தேர்தலில் ஆறாவது கட்டமான மார்ச் 3-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது.
பொதுவாக ஒரு வேட்பாளர் வேட்புமனு தாக்கல் செய்யவேண்டும் என்றால் சொத்து விபரக்குறிப்புகளை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். அதன் மூலம் அந்த வேட்பாளரின் சொத்துக்களை மக்கள் அறிந்துகொள்ள முடியும். அப்படி கோரக்பூர் நகர்புறம் தொகுதியில் போட்டியிடும் யோகி ஆதித்யநாத் தனது வேட்புமனு தாக்கலில், தனது சொத்து விபர குறிப்புகளை சமர்ப்பித்தார். யோகி ஆதித்யநாத் தமது வேட்புமனுவில் சொத்து விபரங்களாக குறிப்பிட்டிருப்பதுபடி அவரிடம் வாகனமோ, விளை நிலமோ இல்லை என்று தெரிகிறது. சட்டமன்ற தேர்தலில் முதல்முறையாக போட்டியிடும் அவர் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தின்படி அவருக்கு 1 கோடியே 54 லட்சத்து 94 ஆயிரத்து 054 ரூபாய் சொத்து இருப்பதாக தெரிவித்ததில், இதில் கையிலிருக்கும் பணம், ஆறு வங்கி கணக்குகளில் உள்ள பணம் மற்றும் சேமிப்பு ஆகியவை அடங்கும். ரூ12,000 மதிப்பிலான சாம்சங் செல்போன் உள்ளது. ரூ1,00,000 மதிப்பிலான கைத் துப்பாக்கி, ரூ80,000 மதிப்பிலான ரிவால்வர் ஆகியவையும் உள்ளன.
ரூ49,000 மதிப்பிலான 20 கிராம் தங்க நகைகள் உள்ளன. தங்க செயின் உள்ளது. ஆபரணங்களைக் கொண்ட உருத்திராட்ச மாலை உள்ளது. மேலும் 2020-2021-ல் தமது ஆண்டு வருமானம் 13,20,653 என்றும் 2019-20ல் ரூ15,68,799; 2018-19-ல் ரூ 18,27,639; 2017-18-ல் ரூ 14,38,670 ஆண்டு வருமானம் எனவும் யோகி ஆதித்யநாத் குறிப்பிட்டுள்ளார். யோகி பெயரில் எந்த விளைநிலமும் இல்லை. அதேபோல் யோகிக்கு சொந்த வாகனமும் இல்லை என அந்த வேட்புமனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் அனல் பரப்பிக்கொண்டிருக்கிறது உத்தரபிரதேச மாநில தேர்தல் களம். பிரதமர் நரேந்திர மோடி முதல் பிரியங்கா காந்தி வரை தேர்தல் பரப்புரையில் முனைப்பு காட்டிவருகிறார்கள்.