சித்தராமையாவை வீழ்த்த வியூகம்...முன்னாள் முதலமைச்சரின் மகனை களம் இறங்க பாஜக திட்டம்...பரபரப்பான கர்நாடக தேர்தல் களம்..!
கர்நாடக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், அரசியல் பரபரப்பு தற்போதே தொற்றி கொண்டது. இச்சூழலில், எதிர் முகாமில் உள்ள முக்கிய தலைவர்களை வீழ்த்த காங்கிரஸ் கட்சியும் பாஜகவும் முறையே திட்டமிட்டு வருகிறது.
கர்நாடகாவில் வரும் மே மாதம் 10ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட உள்ளது. தேர்தல் முடிவுகள், வரும் மே 13ஆம் தேதி வெளியிடப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தென்னிந்தியாவை பொறுத்தவரையில் பாஜக ஆளும் ஒரே மாநிலம் கர்நாடகம் என்பதால், இது முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாக கருதப்படுகிறது.
சித்தராமையாவை வீழ்த்த திட்டம்:
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், அரசியல் பரபரப்பு தற்போதே தொற்றி கொண்டது. இச்சூழலில், எதிர் முகாமில் உள்ள முக்கிய தலைவர்களை வீழ்த்த காங்கிரஸ் கட்சியும் பாஜகவும் முறையே திட்டமிட்டு வருகிறது.
அந்த வகையில், எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையாவுக்கு எதிராக கர்நாடக முன்னாள் முதலமைச்சர் பி.எஸ். எடியூரப்பாவின் மகன் பி.ஒய்.விஜயேந்திரா களம் இறக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு கட்சியில் அதிகரித்து வரும் கோரிக்கையை மேற்கோள் காட்டி, கர்நாடக முதலமைச்சரும் பாஜகவின் மூத்த தலைவருமான பொம்மை பேசுகையில், “சித்தராமையாவுக்கு எதிராக வருணா தொகுதியில் கடும் போட்டியை ஏற்படுத்துவோம். அவரை எதிர்த்து விஜயேந்திரர் போட்டியிட வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. இருப்பினும், இறுதி முடிவை எடியூரப்பா மற்றும் நாடாளுமன்ற குழு எடுக்கும்" என்றார்.
இதற்கிடையில், பாஜக மத்திய நாடாளுமன்றக் குழு உறுப்பினருமான எடியூரப்பா, இன்று காலை மைசூரு மாவட்டத்திற்குச் சென்று இது தொடர்பார ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு வருணா தொகுதி தலைவர்களுடன் அவர் சந்திப்பு நடத்துவார் என கூறப்படுகிறது.
பரபரக்கும் கர்நாடக தேர்தல் களம்:
விஜயேந்திரா போட்டியிடும் பின்னணியில் அவரது மைசூரு பயணம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. முன்னதாக, வருணா தொகுதியில் தனது மகன் விஜயேந்திராவை களமிறக்க பாஜக ஆலோசித்து வருவதாக எடியூரப்பா கூறியிருந்தார். விஜயேந்திரரின் வருணா வேட்புமனுவை இறுதி செய்வது குறித்து உயர்மட்டக் குழு அழைப்பு விடுக்கும் என்றும் அவர் கூறினார்.
சித்தராமையாவின் வெற்றி எளிதில் கிடைத்துவிடாது. அவருக்கு வலுவான எதிர் வேட்பாளரை நிறுத்துவோம் என்று எடியூரப்பா தெரிவித்தார். வருணாவில் இருந்து விஜயேந்திரா போட்டியிடுவது குறித்து பதிலளித்த சித்தராமையா, தனது எதிரிகளைப் பற்றி ஒருபோதும் கவலைப்படவில்லை என்று கூறினார்.
இதுகுறித்து கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் பதிலளித்தபோது சித்தராமையாவுக்கு எதிராக வருணா தொகுதியில் எடியூரப்பா போட்டியிடுவதை வரவேற்பதாக கூறினார்.
இது தனக்கு கடைசி தேர்தல் என்றும், தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கிய சொந்த தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்ததன் அடிப்படையில், தனக்கு சீட் வழங்கப்பட்டுள்ளதாகவும் சித்தராமையா விளக்கம் அளித்திருந்தார்.
கடந்த 2018ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில், தொங்கு சட்டப்பேரவையே அமைந்தது. ஆனால் இம்முறை, காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது.