Womens Only Court : குடும்ப வன்முறையால் தவிப்பா? ஆணாதிக்க சமூக அமைப்புக்கு பதிலடி தர வரும் மகளிர் மட்டும் நீதிமன்றம்..மத்திய அரசு அதிரடி
ஆணாதிக்க சமூக அமைப்புக்கு பதிலடி தரும் வகையில் மகளிர் மட்டும் நீதிமன்றங்கள் இயங்க உள்ளது.
நாளுக்கு நாள் பெண்கள், எதிர்கொள்ளும் பிரச்னைகள் ஏராளம். குறிப்பாக, குடும்ப வன்முறை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நகரங்களை காட்டிலும் கிராமங்களில் இது அதிக அளவில் நடந்து வருகிறது. இதை தடுக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தொடர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
மத்திய அரசு அதிரடி திட்டம்:
இந்த நிலையில், குடும்ப வன்முறை, சொத்து உரிமை உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் நீதிமன்றங்களுக்கு மாற்றாக கிராம அளவில் மகளிர் மட்டும் நீதிமன்றங்களை மத்திய அரசு அமைக்க உள்ளது. ஆணாதிக்க சமூக அமைப்புக்கு பதிலடி தரும் வகையில் மகளிர் மட்டும் நீதிமன்றங்கள் இயங்க உள்ளது.
ஆகஸ்ட் மாதம் முதல் அசாம் மற்றும் ஜம்மு காஷ்மீரில் தலா 50 கிராமங்களில் சோதனை அடிப்படையில் இத்திட்டம் தொடங்கப்பட்டு அடுத்த ஆறு மாதங்களில் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட உள்ளது. இந்த திட்டம் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்து மாநிலங்களுக்கும் தயார் செய்யப்பட்டுள்ளன. இது அடுத்த வாரம் வெளியிடப்பட உள்ளது.
மகளிர் மட்டும் நீதிமன்றங்கள்:
நாரி அதாலத் என அழைக்கப்படும் மகளிர் மட்டும் நீதிமன்றம், ஒவ்வொரு கிராமத்திலும் அமைக்கப்பட உள்ளது. ஒவ்வொரு மகளிர் மட்டும் நீதிமன்றத்திலும் 7 முதல் 9 உறுப்பினர்கள் இருப்பார்கள். இதில் பாதி பேர் கிராம பஞ்சாயத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களாகவும், மற்ற பாதி ஆசிரியர்கள், மருத்துவர்கள் மற்றும் சமூக சேவகர்கள் போன்ற சமூக அந்தஸ்துள்ள பெண்களாகவும் இருப்பார்கள். இவர்கள் கிராம மக்களால் நியமிக்கப்படுவார்கள்.
இதுகுறித்து பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "பெண்களிடம் உள்ள தலைமை பண்பு, பிரச்னையை தீர்த்து வைக்கும் திறனை வெளி கொண்டு வர இந்த மகளிர் மட்டும் நீதிமன்றம் உதவும். தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து உறுப்பினர்கள் கொள்கை வகுக்கும்போது, இவர்கள் முக்கிய பங்காற்றுவர்" என்றார்.
நோக்கங்கள் என்னென்ன?
தனிப்பட்ட வழக்குகளுக்கு தீர்வு காண்பது மட்டும் இன்றி, அரசின் சமூக திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் திட்டத்தை மேம்படுத்த மக்களிடம் கருத்து கேட்கவும் இந்த மகளிர் மட்டும் நீதிமன்றங்கள் உதவு உள்ளது. தங்களின் சமூகத்துக்குள்ளேயே உதவி தேவைப்படும் அல்லது குறைகள் உள்ள அனைத்து பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு இந்த மகளிர் மட்டும் நீதிமன்றங்கள் உதவ போகிறது.
பெண்களின் சட்ட உரிமைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் அதன் அதிகார வரம்பிற்குள் வரும் வழக்குகளைத் தீர்ப்பது ஆகியவை இதன் முக்கிய நோக்கங்களாகும். இதுகுறித்து விவரித்த அதிகாரி, "பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது, புகார்களை தீர்த்து வைப்பது, ஆலோசனை வழங்குவது, ஆதாரங்களின் அடிப்படையில் முடிவுகளை எடுப்பது, பேச்சுவார்த்தை நடத்துவது, மத்தியஸ்தம் செய்வது, கொள்கை வகுப்பில் செல்வாக்கு செலுத்துவது உள்ளிட்ட சேவைகளை வழங்க உள்ளது" என்றார்.
இந்த மகளிர் மட்டும் நீதிமன்றத்தின் உறுப்பினர்கள் சட்ட நண்பர்கள் என அழைக்கப்படுவார்கள். இவர்களை, கிராம பஞ்சாயத்து தேர்வு செய்யும் அல்லது நியமிக்கும். மகளிர் மட்டும் நீதிமன்றத்தின் தலைவர், தலைமை சட்ட நண்பர் என அழைக்கப்படுவார். உறுப்பினர்களில் இருந்து ஒருவர் தலைவராக தேர்வு செய்யப்படுவார். இவர்களின் பதவிக்காலம் 6 மாதங்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.