வெள்ளை டி சர்ட் மட்டுமே அணிவதற்கு காரணம் என்ன? பிரச்சாரத்திற்கு நடுவே ராகுல் காந்தி ஜாலி டாக்!
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எப்போதும் வெள்ளை நிற டீ சர்ட் அணிவது ஏன்? என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
இந்தியாவை அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஆளுப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் நாடாளுமன்ற தேர்தல் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடந்து வருகிறது. கடந்த மாதம் 19ஆம் தொடங்கிய தேர்தல் வரும் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
ஏற்கனவே, இரண்டு கட்ட வாக்குப்பதிவு முடிந்துவிட்டது. கர்நாடகா உள்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 94 மக்களவை தொகுதிகளுக்கு வரும் 7ஆம் தேதி மூன்றாம் கட்டமாக வாக்குப்பதிவு நடக்க உள்ளது.
ரேபிட் ஃபயர் கேள்விகளுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பதில்:
கர்நாடகாவில் ஆளும் கட்சியாக உள்ளதால் இந்த முறை குறிப்பிடத்தகுந்த வகையில் தொகுதிகளை கைப்பற்ற காங்கிரஸ் முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக, காங்கிரஸ் தலைவர்கள் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், கர்நாடகாவில் கடும் பிரச்சாரத்திற்கு மத்தியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடக முதலமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையா, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரிடம் ரேபிட் ஃபயர் கேள்விகள் முன்வைக்கப்பட்டன.
தேர்தல் பிரச்சாரத்திற்கு காரில் செல்லும்போது ராகுல் காந்தி கேட்கும் கேள்விகளுக்கு இரண்டு தலைவர்களும் பதில் அளித்துள்ளனர். அதோடு, தன்னிடம் எழுப்பப்படும் கேள்விகளுக்கும் ராகுல் காந்தி பதில் அளிக்கிறார். கேள்விகளுக்கு காங்கிரஸ் தலைவர்கள் பதில் அளிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கொள்கையா? அதிகாரமா?
அதில், பிரச்சாரத்தின் சிறந்த பகுதி என்ன? என்ற கேள்விக்கு பதில் அளித்த ராகுல் காந்தி, "பிரச்சாரம் முடிவதே சிறந்து பகுதி" என்றார். பிரச்சாரத்தில் நீங்கள் ரசிக்கும் விஷயம் என்ன? என முன்வைக்கப்பட்ட கேள்விக்கு, "கடந்த 70 நாள்களாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறேன். பாரத் ஜோடோ யாத்ராவை பொறுத்தவரையில் அது ஒரு பிரச்சாரம் அல்ல என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். பிரச்சாரத்தை விட கடுமையாக இருந்தது. இடைவிடாமல் மேற்கொண்டேன். நீண்ட நாள்களாக மேற்கொண்டு வருகிறேன். பிரச்சாரத்தின்போது ஆற்றப்படும் பேச்சுக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். நாட்டுக்கு என்ன தேவை என்று சிந்திக்க வைக்கிறது" என்றார்.
இதே கேள்வியை காங்கிரஸ் தலைவர் கார்கேவிடம் ராகுல் காந்தி முன்வைத்தார். அதற்கு பதில் அளித்த அவர், "பிரச்சாரத்தில் பிடிக்காதது என எதுவும் இல்லை. இதை நாட்டுக்காகச் செய்வது நல்லது என உணர்கிறேன். நாட்டைக் கெடுப்பவன், அவர்களைத் தடுத்து நிறுத்தும் போது, நாம் நன்றாக உணர்கிறோம். குறைந்தபட்சம் நாட்டிற்காக ஏதாவது செய்கிறோம் என்ற உணர்வு இருக்கிறது" என்றார்.
வெள்ளை நிற டி சர்ட் அணிவதற்கு காரணம் என்ன?
கொள்கை முக்கியமான? அதிகாரம் முக்கியமா? என்ற கேள்வியை கர்நாடக முதலமைச்சரிடம் ராகுல் காந்தி முன்வைத்தார். அதற்கு சித்தராமையா பதில் அளிக்கையில், "கொள்கையே எப்போதும் முக்கியமானது. கட்சியின் சித்தாந்தங்களையும் திட்டங்களையும் மக்களிடம் முன்வைக்க வேண்டும். ஆட்சியில் இருந்தாலும் நமது சாதனைகளை மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும். இந்த வழியில், மக்கள் எங்கள் நிலைப்பாட்டை பாராட்டுவார்கள். நம்மை ஆசீர்வதிப்பார்கள்" என்றார்.
கொள்கையா? அதிகாரமா? என்ற கேள்விக்கு ராகுல் காந்தி பதில் அளிக்கையில், "சித்தாந்தம் பற்றிய தெளிவான புரிதல் இல்லாமல் ஆட்சிக்கு செல்ல முடியாது. ஏழைகளுக்கு ஆதரவான, பெண்களுக்கு ஆதரவான, பன்மைத்துவம் வாய்ந்த, அனைவரையும் சமமாக நடத்தும் நமது சித்தாந்தத்தை மக்களுக்கு உணர்த்த வேண்டும். அரசியல் போர் என்பது நிறுவன மட்டத்திலோ அல்லது தேசிய மட்டத்திலோ, எப்போதும் சித்தாந்தத்தைச் சுற்றியே உள்ளது" என்றார்.
A day campaigning in Karnataka.
— Rahul Gandhi (@RahulGandhi) May 5, 2024
Some light rapid fire questions and some very illustrious company. pic.twitter.com/xHoqK3AF5T
வெள்ளை நிற டி சர்ட்டே எப்போதும் அணிவதன் காரணம் என்ன? என கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த ராகுல் காந்தி, "வெளிப்படைத்தன்மையும் எளிமையே காரணம். நான் உண்மையில் ஆடைகளைப் பற்றி கவலைப்படுவதில்லை. நான் எளிமையாக இருக்கவே விரும்புகிறேன்" என்றார்.