SC/ST reservation in promotion : பட்டியலின மக்களுக்கு பணிஉயர்வில் இடஒதுக்கீடு - உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி
அரசின் கீழுள்ள பணியிடங்களில் பிற்படுத்தப்பட்ட (எஸ்.சி/எஸ்.டி பிர்வினரையும் சேர்த்து) மக்கள் போதிய அளவிற்கு இடம்பெறவில்லை என்பதை அரசு நியாயப்படுத்த வேண்டும்
அரசின் கீழுள்ள பணியிடங்களில் பட்டியலின/ பழங்குடியின மக்கள் பணிஉயர்வில் இடஒதுக்கீடு ஏற்பாடு செய்வதற்கான தரவுகள் எங்கே என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
அரசுப் பணியிடங்களில் பட்டியலின/ பழங்குடியின மக்கள் போதிய அளவிற்கு இடம்பெறவில்லை என்ற கூற்றை அரசு நியாயப்படுத்த வேண்டும். அரசியல் சாசன அமைப்பு வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் தான் பணிஉயர்வில் இடஒதுக்கீடு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
வழக்கின் சாராம்சம்: கடந்த 2006ம் ஆண்டு நாகராஜ் வழக்கில் உச்சநீதிமன்றம் இடஒதுக்கீட்டில் சில கடுமையான நிபந்தனைகளை விதித்தது. அதில், முதலாவதாக, அரசு கருதும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் முதலில் பாதிக்கப்பட்ட நிலையில் தான் உள்ளனர் என்பதனை தரவுகள் கொண்டு நிறுவ வேண்டும்; இரண்டாவாதாக, அரசின் கீழுள்ள பணியிடங்களில் பிற்படுத்தப்பட்ட (எஸ்.சி/எஸ்.டி பிர்வினரையும் சேர்த்து) மக்கள் போதிய அளவிற்கு இடம்பெறவில்லை என்பதை அரசு நியாயப்படுத்த வேண்டும்; பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களில் கிரீமி லேயர் (Creamy Layer) கண்டிப்பாக இட ஒதுக்கீட்டு ஏற்பாட்டிலிருந்து நீக்கப்பட வேண்டும்; இடஒதுக்கீட்டு வசதியால் அரசின் நிர்வாகத் திறன் எந்த விதத்திலும் பாதிக்கப்படக் கூடாது (அரசியலமைப்பு சரத்து 335); ஐம்பது சதவீதங்களுக்கு மேல் மிகாமல் இருக்க வேண்டும் போன்ற நிபந்தனைகளை விதித்தது.
இந்திய அரசியலில், நாகராஜ் வழக்கின் நிபந்தனைகள் பல்வேறு விவதாங்களை ஏற்படுத்தியது. ஏனெனில், அரசியலமைப்பு பிரிவு 341ன் கீழ் குடியரசுத் தலைவர் எந்தவொரு குறிப்பிட்ட சாதிகளையோ, இனங்களையோ, பழங்குடிகளையோ பட்டியல் கண்ட சாதிகள் என்று பொது அறிக்கையின் மூலம் அறிவிக்கலாம் (நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறும்). பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பின்பும், இடஒதுக்கீட்டில் மீண்டும் அரசு ஏன் ஊர்ஜிதம் செய்ய வேண்டும் என்ற கேள்வி எழுந்தது.
மேலும், பட்டியலின் மக்கள் பொருளாதார மேம்பாடு என்பதைத் தாண்டி சமுதாய நிலையிலும், கல்வி நிலையிலும் பின்தங்கிய வகுப்பினரை உள்ளனர். எனவே, கிரீமி லேயர் என்ற பொருளாதார நிபந்தனை அவர்களுக்கு பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த 2018ம் ஆண்டு நாகராஜ் வழக்கின் தீர்ப்புகளை மறுஆய்வு செய்த உச்சநீதிமன்றம் (Jarnail Singh vs Lachhmi Narain Gupta and others), இடஒதீக்கீடு முறையில், பட்டியலின/ பழங்குடியின மக்கள் முதலில் பாதிக்கப்பட்ட நிலையில் தான் உள்ளனர் என்பதனை தரவுகள் கொண்டு நிறுவத் தேவையில்லை என்று தெரிவித்தது. இருந்தாலும், அரசின் கீழுள்ள பணியிடங்களில் பணி உயர்வு இடஒதுக்கீட்டு முறையில் எஸ்.சி/எஸ்.டி பிர்வினர் போதிய அளவிற்கு இடம்பெறவில்லை என்பதை நிறுவ வேண்டும் என்று தீர்ப்பளித்தது.
இந்த வழக்கு தொடர்பாக, நேற்று நடைபெற்ற விசாரனையில், பட்டியலின/ பழங்குடியின மக்களுக்கு எதன் அடிப்படையில் பணி உயர்வில் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது? அதற்கான தரவுகள் எங்கே? போன்ற கேள்விகளை உச்சநீதிமன்றம் மீண்டும் எழுப்பியுள்ளது.
மேலும், வாசிக்க: