CAA Rules: நெருங்கும் தேர்தல்; அமலானது குடியுரிமை திருத்த சட்டம்! என்ன மாற்றங்கள் இனி?
CAA Rules Explained:குடியரிமை திருத்த சட்டம் அமலுக்கு வந்ததாக மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டது.
நாடாளுமன்றத்தின் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், குடியுரிமை திருத்த சட்டம் நடைமுறைக்கு வருவதாக மத்திய அரசு தெரிவித்து அரசிதழில் வெளியிட்டது.
குடியுரிமை திருத்த சட்டம் நிறைவேற்றம்:
அயல்நாடுகளிலிருந்து சட்ட விரோதமாக இந்தியாவில் குடியேறியவர்கள் இந்திய குடிமகன்களாக கருதப்படமாட்டார்கள். அப்படி குடியேறுபவர்கள் சிறையில் அடைக்கப்படுவார்கள் அல்லது நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள் அல்லது அகதிகள் முகாமில் சேர்க்கப்படுவர், இதுதான் அன்றைய நிலை.
ஆனால் 1955-ஆம் ஆண்டில், 11 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் வசிக்கிற வெளிநாட்டவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என குடியுரிமைச் சட்டம் இயற்றப்பட்டது.
இதையடுத்து, கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் குடியுரிமைச் சட்டத்தில் சில திருத்தங்களை செய்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது பாஜக அரசு. இந்த சட்ட திருத்தமானது இன்றுமுதல் அமலுக்கு வருவதாக மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டது.
இந்நிலையில் குடியுரிமை சட்ட திருத்தம் குறித்து தெரிந்து கொள்வோம்.
குடியுரிமை திருத்த சட்டம் என்ன சொல்கிறது:
இச்சட்டத்தின்படி பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 3 நாடுகளைச் இஸ்லாமியர் இல்லாத சிறுபான்மையினராக கருதப்படுகிற இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்சி இனத்தவர், கிறிஸ்தவர்கள் ஆகியோருக்கு உரிய ஆவணங்கள் எதுவுமில்லை என்றாலும் கூட, இந்தியாவில் குறைந்தது 5 ஆண்டுகளுக்கு வசித்தாலே இந்தியக் குடியுரிமை வழங்கப்படும். அதாவது டிசம்பர் 31, 2014ஆம் ஆண்டுக்கு முன்பு குடியேறியவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும்.
ஏன் ஆதரவு:
இதுகுறித்து இச்சட்டத்திற்கு ஆதரவளிப்போர் தெரிவிக்கையில், பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் வசிக்கும் இந்துக்கள், சீக்கியர்கள், பௌத்தர்கள், சமணர்கள், பார்சி இனத்தவர், கிறிஸ்தவர்கள் சிறுபான்மையினருக்காகத்தான் என்றும் இஸ்லாமியர்கள் அங்கு பெரும்பான்மையாக இருப்பதால், அவர்கள் சேர்க்கப்படவில்லை; மேலும், சிறும்பான்மையினர், அங்கு பாதிக்கப்பட்டதால் இங்கு வந்திருக்கின்றனர். அவர்களு க்கு அடைக்கலம் தரும்வகையில் இருப்பதால் ஆதரவளிக்கிறோம் என தெரிவித்து வருகின்றனர்.
ஏன் எதிர்ப்பு?
பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளை சேர்ந்த இஸ்லாமிய அகதிகளுக்கு இந்த சட்டத்தின் கீழ் அனுமதி இல்லை.
சிறுபாண்மையினருக்குத்தான் பொருந்தும் என்றால், பாகிஸ்தானில் உள்ள அகதிமதியர்கள் என்று கருதப்படும் இஸ்லாமியர்களுக்கு ஏன் இல்லை என்றும், மியான்மையினரைச் சேர்ந்த அங்கு சிறுபான்மையினராக உள்ள ரோஹிங்யா இஸ்லாமியர்களை ஏன் சேர்க்கவில்லை என்றும் எதிர் விமர்சர்கள் கருத்து பதிவிடுகின்றனர்.
அதே போல இலங்கை வாழ் தமிழர்களையும் ஏன் சேர்க்கவில்லை என்றும் கருத்துக்கள் எழுந்து வருகிறது.
இந்தியா மதச்சார்பற்ற நாடு, மதத்தை அடிப்படையாக வைத்து முடிவு எடுப்பது சரியானது அல்ல என்றும் சில மதத்தை வைத்து அரசியல் செய்வது மதச்சார்பற்ற நாட்டுக்கு உகந்தது அல்ல என்றும் விமர்சர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தேர்தல் நேரத்தில் சிஏஏ:
இன்னும்ஒருமாதத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடத்தப்பட உள்ள நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டம் இன்று முதல் அமலுக்கு வருவதால், தேர்தல் விவகாரமாக கையில் எடுத்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் பாஜகவினர், சிஏஏ சட்டம் அமலுக்கு வந்ததற்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
Also Read: CM MK Stalin: "அமைதிமிகு இந்தியாவில் பிளவுமிகு சட்டம் சி.ஏ.ஏ." - முதலமைச்சர் கடும் கண்டனம்