பெகசஸ் விவகாரம் : உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு - மேற்குவங்க அரசு
பெகசஸ் உளவு தொழில்நுட்பம் மூலம் உளவு பார்க்கப்பட்ட விவகாரம் குறித்து விசாரிக்க, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைமையில் மேற்குவங்க அரசு விசாரணை குழுவை அமைத்துள்ளது.
இஸ்ரேல் நாட்டின் பெகசஸ் உளவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்தியாவில் அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள் உளவு பார்க்கப்பட்டதாக உலகின் மிகவும் பிரபலமான பத்திரிகைகளான வாஷிங்டன் போஸ்ட், தி கார்டியன் உள்ளிட்ட பத்திரிகைகள் கடந்த வாரம் செய்தி வெளியிட்டது. மேலும், உளவு பார்க்கப்பட்டோரின் பட்டியலையும் வெளியிட்டது. இந்த பட்டியலில் இந்தியாவின் முன்னணி பத்திரிகையாளர்கள் பெயர்கள், எதிர்க்கட்சித் தலைவரான ராகுல்காந்தி உள்பட பலரது பெயர்களும் இடம்பெற்றிருந்தது. நாடாளுமன்ற மழைக்கால தொடர் தொடங்குவதற்கு ஓரிரு நாட்கள் முன்பு வெளியான இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் பெரும் பூதாகரத்தை கிளப்பி வருகிறது.
பெகசஸ் தொழில்நுட்பத்தை சரிபார்க்கப்பட்ட அரசாங்கத்திற்கு மட்டுமே பகிர்ந்து கொள்வோம் என்று அந்த தொழில்நுட்பத்தை உருவாக்கிய இஸ்ரேல் நிறுவனமான என்.எஸ்.ஓ. நிறுவனம் திட்டவட்டமாக அறிவித்தது. இதனால், இந்தியர்களை மத்திய அரசு உளவு பார்த்தது என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தது. மேலும், பெகசஸ் தொழில்நுட்பம் பற்றி இந்தியர்கள் உளவு பார்க்கப்பட்டதை முதன்முதலில், டுவிட்டரில் வெளியிட்ட முன்னாள் மத்திய அமைச்சர் சுப்பிரமணியன்சுவாமி, இந்தியர்களை உளவு பார்க்க என்.எஸ்.ஓ. நிறுவனத்திற்கு பணம் செலுத்தியது யார்? மத்திய அரசு உளவுபார்க்கவில்லை என்றால் உளவு பார்க்க பணம் கொடுத்தது யார்? என்று கேள்வி எழுப்பினார்.
பல தரப்பினரும் மத்திய அரசு மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்த நிலையில், மத்திய அரசு பெகசஸ் விவகாரத்தில் பா.ஜ.க. அரசு மீதான குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்தது. ஆனால், எதிர்க்கட்சிகள் இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்ற நிலைக்குழு விசாரணை தேவை என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், தேசிய அளவில் மத்திய அரசையும், பா.ஜ.க.வையும் கடுமையாக எதிர்த்து வருபவர் மம்தாபானர்ஜி. மேற்கு வங்கத்தில் மம்தாபானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. நாடாளுமன்றத்தில் பெகசஸ் விவகாரம், பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு குறித்து தீவிரமாக கேள்வி எழுப்பி மத்திய அரசுக்கு திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் நெருக்கடி அளித்து வருகின்றனர். இந்த நிலையில், பெகசஸ் உளவு தொழில்நுட்பம் மூலம் தலைவர்களின் செயலிகள் ஒட்டுக்கேட்கப்பட்ட விவகாரம் குறித்து விசாரிக்க உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி மதன் பி லோகுர் தலைமையில் மேற்கு வங்க அரசு குழு ஒன்றை அமைத்துள்ளது.
சோனியாகாந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களை சந்திக்க மம்தாபானர்ஜி டெல்லி சென்றுள்ள சூழலில், பெகசஸ் உளவு தொழில்நுட்பம் தொடர்பாக விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 1953-ஆம் ஆண்டு மதன் பி லோகுர் கடந்த 2012-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்தின் நீதிபதியாக பதவியேற்றுக் கொண்டார். கடந்த 2018-ஆம் ஆண்டு டிசம்பர் 30-ந் தேதி உச்சநீதிமன்ற நீதிபதி பொறுப்பில் இருந்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.