Wayanad Landslide : அய்யோ.. வயநாடு பெருஞ்சோகம்.. 7-வது நாளாக மீட்புப்பணி.. 400-ஐ கடந்த பலி எண்ணிக்கை..
வயநாடு நிலச்சரிவு சம்பவத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 400க்கும் மேலாக அதிகரித்துள்ளது. இது மக்கள் மத்தியில் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
கடவுளின் தேசம் என்று மக்களால் அன்புடன் அழைக்கப்படும் கேரள முழுவதையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது வயநாடு துயரம். கடந்த மாதம் 30ம் தேதி அங்கு நிகழ்ந்த நிலச்சரிவு காரணமாக 3 கிராமங்கள் முழுவதும் மண்ணில் புதைந்து போக ஆயிரக்கணக்கான மக்கள் ஆதரவற்ற நிலைக்கு ஆளாகினர்.
400-யை கடந்த உயிரிழப்பு:
ஏராளமான வீடுகள், பள்ளிகள், கடைகள் என மண்ணில் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் புதைந்தன. ஒட்டுமொத்த கேரளம் மட்டுமின்றி நாட்டையே சோகத்தில் மூழ்கடித்த இந்த துயரச்சம்பவத்தினால், அங்கு ராணுவம், விமானப்படை, பேரிடர் மீட்புக்குழு, கேரள அதிகாரிகளுக்கு உதவியாக தமிழக அதிகாரிகள் என அண்டை மாநிலங்களும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
முதல் நாள் முதல் சிறியவர்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என பலரும் சடலம், சடலமாக மீட்கப்பட தினசரி சடலங்கள் தோண்ட, தோண்ட கிடைத்து வருகிறது. தொடர்ந்து 7வது நாளாக இன்று வரை மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை 400 பேருக்கு மேல் இந்த துயரச்சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர். இவர்களில் குழந்தைகளும் பலர் அடங்குவார்கள்.
தொடரும் மீட்பு பணி:
7 நாட்களாக மீட்பு பணி நடைபெற்று வரும் சூழலிலும் 200 பேருக்கும் மேற்பட்டவர்களின் கதி என்ன ஆனது? என்று தற்போது வரை தெரியவில்லை. இதனால், அவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், அவர்களில் உயிரிழந்தவர்கள் அதிகளவில் இருக்கும் என்று அஞ்சப்படுகிறது.
தற்போது வரை ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். சூரல்மலை, முண்டக்கை, மேப்பாடி கிராமங்கள் முற்றிலும் சிதைந்துள்ளன. இந்த நிலச்சரிவு காரணமாக வயநாட்டில் ஓடும் பிரதான ஆறான சாலியாற்றின் வழித்தடமே மாறியுள்ளது. சாலியாற்றில் ஏராளமான சடலங்கள் பல கிலோ மீட்டர்கள் அடித்துச் செல்லப்பட்ட துயரச்சம்பவம் பார்ப்பவர்களின் மனதை ரணமாக்கியது.
தமிழர்களும் மரணம்:
இந்த சம்பவத்தால் உருக்குலைந்த வயநாட்டை சீரமைக்கும் பொருட்டும், மக்களுக்கு உறுதுணையாக இருக்கும் பொருட்டும் ஏராளமானோர் தங்களால் இயன்ற நிதியை உதவியாக அளித்து வருகின்றனர். நாட்டின் முக்கிய எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி வயநாட்டில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டார். இந்த நிலச்சரிவில் ஏராளமான தமிழர்களும் உயிரிழந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. நிலச்சரிவால் உருக்குலைந்த வயநாடு தனது இயல்பு நிலைக்கு திரும்ப ஓரிரு மாதத்திற்கும் மேலே ஆகும் என்று கருதப்படுகிறது.