Wayanad Landslide: நிலச்சரிவால் சிதைந்த வயநாட்டிற்கு செல்கிறார் பிரதமர் மோடி! எப்போது தெரியுமா?
நிலச்சரிவால் முற்றிலும் சிதைந்த வயநாட்டிற்கு பிரதமர் மோடி நாளை மறுநாள் நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளார்.
கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த மாதம் 30ம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் இதுவரை 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த துயரச் சம்பவத்தால் ஒட்டுமொத்த நாடே சோகத்தில் மூழ்கியுள்ளது. இந்த துயரச் சம்பவத்தால் ஆயிரக்கணக்கானோர் வீடுகளையும், உடைமைகளையும் இழந்துள்ள நிலையில் அவர்களின் வாழ்வதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது.
வயநாடு செல்லும் பிரதமர் மோடி:
இந்த நிலையில், வயநாட்டில் பாதிப்பிற்குள்ளான பகுதிகளுக்கு பிரதமர் மோடி நேரில் சென்று ஆய்வு செய்ய உள்ளார். நாளை மறுநாள் அவர் டெல்லியில் இருந்து வயநாடு செல்கிறார். அங்கு பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்வதுடன், பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.
கடந்த மாத இறுதியில் வயநாட்டில் எதிர்பாராத விதமாக நள்ளிரவில் ஏற்பட்ட நிலச்சரிவால் முண்டக்கை, மேப்பாடி, சூரல்மலை ஆகிய கிராமங்கள் முற்றிலும் சிதைந்தது. மொத்தம் 5 கிராமங்கள் மிக கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் மண்ணில் பலரும் புதைந்தனர்.
400க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு:
இந்த கோர சம்பவத்தைத் தொடர்ந்து கேரள மீட்பு படையினர் மட்டுமின்றி தமிழக மீட்பு படையினர், ராணுவம், விமானப்படை என பலரும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். மண்ணில் புதைந்த நூற்றுக்கணக்கான மக்களை உயிருடன் மீட்டனர். இதுமட்டுமின்றி நிலச்சரிவால் மண்ணில் புதைந்த நூற்றுக்கணக்கானோரின் சடலங்களை தொடர்ந்து மீட்டனர்.
இந்த துயரச் சம்பவத்தில் உயிரழந்த 400க்கும் மேற்பட்டோரின் சடலங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. வயநாட்டில் பாதிக்கப்பட்ட மக்களை ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்களும், பிரபலங்களும் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். பிரதமர் மோடி வயநாட்டிற்கு செல்லாததை பலரும் விமர்சித்த நிலையில், பிரதமர் மோடி வயநாட்டிற்கு நாளை மறுநாள் செல்கிறார். பிரதமர் மோடி வயநாடு துயரச்சம்பவத்தால் உயிரிழந்த நபர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் இழப்பீடாக வழங்கி அறிவித்தார்.
வயநாட்டில் நடைபெற்ற மீட்பு பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட மக்களை மீட்டுள்ளனர். ஆனால், இன்னும் 138 பேர் மாயமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நிலச்சரிவில் சிக்கிய பலரது உடல்களும் வயநாட்டில் உள்ள சாலியாற்றில் பல கிலோ மீட்டர் தொலைவிற்கு அடித்துச் செல்லப்பட்ட துயரச்சம்பவமும் அரங்கேறியது. இதனால், வயநாடு மட்டுமின்றி அருகில் உள்ள பல பகுதிகளிலும் மாயமானவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.