(Source: ECI/ABP News/ABP Majha)
Watch Video: "காரம்தான் கொஞ்சம் அதிகம்…" : வடபாவ், பானிபூரி என வெளுத்துக்கட்டும் ஜப்பான் தூதர்.. வீடியோ
புனேவில் வடா பாவ் மற்றும் மிசல் பாவ் போன்ற சில மகாராஷ்டிர ஸ்ட்ரீட் உணவுகளை, இந்தியா மற்றும் பூட்டானுக்கான ஜப்பான் தூதர் ஹிரோஷி சுசுகி முயற்சிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
இந்திய ஸ்ட்ரீட் உணவுகள் அனைவராலும் விரும்பப்படும் உணவு வகை ஆகும். தெருக்களெங்கும் உள்ள கடைகளில் மக்கள் சூழ்ந்து இருப்பதை வழக்கமாக காண முடியும். நாம் மட்டும் அல்ல, ஹாலிவுட் பிரபலங்கள் முதல் உலகத் தலைவர்கள் வரை அனைவரும் இந்த வகை சமையலின் ரசிகர்களாக உள்ளனர். அந்த வகையில் இந்திய ஸ்ட்ரீட் உணவுகளின் சமீபத்திய ரசிகர் வேறு யாருமல்ல, இந்தியா மற்றும் பூட்டானுக்கான ஜப்பான் தூதர் ஹிரோஷி சுசுகி தான்.
வட பாவ் சாப்பிட்ட ஹிரோஷி சுசுகி
புனேவில் வட பாவ் மற்றும் மிசல் பாவ் போன்ற சில மகாராஷ்டிர ஸ்ட்ரீட் உணவுகளை சுசுகி முயற்சிக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் புனேவில் ஒரு நிகழ்ச்சிக்காக வந்த அவர், அதில் ஸ்ட்ரீட் உணவை முயற்சித்தார். அதனை ரசித்து சாப்பிட்ட அவருக்கு ஒரே ஒரு குறை மட்டும் கூறினார். அந்த காரத்தை அவரால் தாங்க முடியவில்லை என்று கூறினார்.
I love street food of India🇮🇳
— Hiroshi Suzuki, Ambassador of Japan (@HiroSuzukiAmbJP) June 9, 2023
...but thoda teekha kam please!🌶️#Pune #Maharashtra #VadaPav pic.twitter.com/3GurNcwVyV
சுசுகியின் டுவிட்டர் பதிவு
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த ஸ்ட்ரீட் உணவுகளை உண்ணும் வீடியோவை வெளியிட்டார், அதில் "நான் இந்தியாவின் ஸ்ட்ரீட் உணவுகளை விரும்புகிறேன்...! காரம் தான் கொஞ்சம் அதிகம்..." என்று எழுதி இருந்தார். அவரை ட்விட்டரில் பின்தொடர்பவர்கள் பரிந்துரைத்தபடி, புனேவின் பிரபலமான மிசல் பாவ்வையும் சுஸுகி முயற்சித்தார்.
அடுத்தது மிசல் பாவ்
அவர் மிசல் பாவை ருசித்து சாப்பிடும்போது, கொஞ்சம் காரம் குறைவான மற்றொன்று வேண்டும் என்று கேட்பது போன்ற மற்றொரு வீடியோவை அவர் வெளியிட்டார், அதில் கீழே எழுதிய அவர், "பல ஃபாலோயர்கள் எனக்கு பரிந்துரைத்ததால்...! இதோ மிசல் பாவ்," என்று கூறினார். அவரது இந்த வீடியோக்கள் நெட்டிசன்களிடமிருந்து நிறைய பாராட்டுகளைப் பெற்றன. அவரது பதிவின் கீழ் பலர் புனேவில் உணவருந்துவதற்கான மற்ற சில இடங்களையும் பரிந்துரைத்தனர்.
Because many followers recommended me…!#MisalPav pic.twitter.com/PBDPERZAUw
— Hiroshi Suzuki, Ambassador of Japan (@HiroSuzukiAmbJP) June 9, 2023
வேறு எதெல்லாம் சாப்பிட வேண்டும்?
"உங்களுக்கு தைரியம் அதிகம், இவற்றில் நிறைய மிளகாய்கள் உள்ளன. வயிற்றைக் குளிர்விக்க மாம்பழ லஸ்ஸி அல்லது மாம்பழ ஐஸ்கிரீம் சாப்பிடுங்கள்" என்று ஒருவர் கமெண்டில் அக்கறையுடன் பரிந்துரைத்தார். "மிகவும் துணிச்சலானவர்தான்! பார்ப்பதற்கு கொஞ்சம் காரமாக இருப்பதுபோல தெரிகிறது. ஆனாலும் அது சாப்பிடுவதைத் தடுக்காது என்றாலும், கிரேவியில் சிறிது எலுமிச்சைப் பழத்தைப் பிழிவது நல்லது" என்று மற்றொருவர் கமெண்டில் எழுதினார். இவ்வாறாக பலர் தங்களது கருத்துக்களை அவர்களது விருப்பமான உணவை உண்ணும் ஹிரோஷி சுசுகிக்காக தெரிவித்தனர்.