(Source: ECI/ABP News/ABP Majha)
Waqf Amendment Bill Explained: வக்பு வாரிய மசோதா - அரசுக்கு லட்சக்கணக்கில் மெயில் குவிவது ஏன்? மாற்றத்திற்கான நேரமா?
Waqf Amendment Bill Explained: வக்பு வாரிய திருத்த மசோதா, முன்மொழியும் பரிந்துரைகள் என்ன என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
Waqf Amendment Bill Explained: வக்பு வாரியம் என்றால் என்ன? அதன் அதிகாரங்கள் ஏற்படுத்தும் தாக்கம் என்ன என்பது குறித்து கீழே விவரிக்கப்பட்டுள்ளது.
வக்பு வாரிய சர்ச்சை:
வக்பு வாரியம் என்பது இந்தியாவில் சட்டப் போராட்டங்கள், குழப்பம் மற்றும் சர்ச்சைகளுக்கு பெயர் போன ஒரு அமைப்பாகும். இஸ்லாமிய சட்டத்தில் ஆழமாக வேரூன்றிய வக்பு அமைப்பு, இந்தியாவில் மத மற்றும் கலாச்சார இயக்கவியலில் செல்வாக்கு செலுத்தியது மட்டுமின்றி நில உரிமை மற்றும் ஆளுகை தொடர்பான மோதல்களுக்கும் வழிவகுத்தது. இந்த சூழலில் அதன் சீர்திருத்தங்களுக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுத்து வருவதால், வக்பு வாரியம் தொடர்பான விவாதம் மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. மத்திய அரசு முன்னெடுத்துள்ள புதிய சட்டமசோதா, வக்பு சொத்துக்களின் அளவு மற்றும் தவறாகப் பயன்படுத்தப்படுவது பற்றிய கேள்விகளை எழுப்புகிறது. இந்த சூழலில் வக்பு என்றால் என்ன? அது எவ்வாறு கையாளப்படுகிறது? மற்றும் பாஜக அரசின் சீர்திருத்தங்கள் வக்பு நிலப்பரப்பை ஏன் மாற்றியமைக்க முடியும் என்பதை இங்கே அறியலாம்.
வக்பு என்றால் என்ன?
வக்பு என்பது ஒரு இஸ்லாமிய அறக்கட்டளையைக் குறிக்கிறது. இதில் மத அல்லது தொண்டு நோக்கங்களுக்காக சொத்து நன்கொடையாக வழங்கப்படுகிறது. ஒரு சொத்தை வக்பு அமைப்புக்கானது என்று நியமித்துவிட்டால், அதை விற்கவோ அல்லது மாற்றவோ முடியாது. அது தொண்டு அறக்கட்டளையில் நிரந்தரமாக இருக்கும். இந்த கருத்து கோட்பாட்டில் உன்னதமானது என்றாலும், நடைமுறையில் இது குறிப்பிடத்தக்க சர்ச்சைகளுக்கு வழிவகுப்பதாக கூறப்படுகிறது. தவறான மேலாண்மை மற்றும் சட்டவிரோத உரிமைகோரல்கள் என பரவலான குற்றச்சாட்டுகள் இந்த அமைப்பு மீது நிலவுகிறது.
வக்பு எப்படி ஏராளமான சொத்துக்களை உரிமை கோர முடியும்?
வக்பு அமைப்பை சுற்றியுள்ள முதன்மையான சர்ச்சைகளில் ஒன்று, அதன் எல்லையின் கீழ் கோரப்படும் சொத்துகளின் அளவு ஆகும். இந்தியா முழுவதும், ஆயிரக்கணக்கான சொத்துக்கள்-தனியார் நிலம் முதல் பிரதான நகர்ப்புற ரியல் எஸ்டேட் வரை- பெரும்பாலும் முறையான ஆவணங்கள் அல்லது சரிபார்ப்பு இல்லாமல் வக்பு அமைப்புக்கு உரியது என பதிவு செய்யப்பட்டுள்ளன. பல சந்தர்ப்பங்களில், மக்கள் தங்கள் தனிப்பட்ட சொத்துக்கள் தங்களுக்குத் தெரியாமலோ அல்லது ஒப்புதல் இல்லாமலோ வக்பு ஆக பதிவு செய்யப்பட்டதைக் கண்டறிந்துள்ளனர். இது உரிமைக்காக சட்டப் போராட்டங்களுக்கு வழிவகுத்தது. இந்த உரிமைகோரல்களின் நோக்கம் பல ஆண்டுகளாக விரிவடைந்து, நில அபகரிப்பிற்காக இந்த இஸ்லாமிய நிறுவனம் தவறாகப் பயன்படுத்தப்படுவது பற்றிய கவலைகளை எழுப்புகிறது.
வக்பு நிலம் எப்படி வணிக ரீதியாக பயன்படுத்தப்படுகிறது?
வக்பு நிலத்தை வணிக ரீதியாகப் பயன்படுத்துவது சர்ச்சைக்குரிய முக்கிய அம்சமாகும். வக்பு சொத்துக்கள் தொண்டு நன்மைக்கான நோக்கங்களுக்காக இருந்தாலும், பல சந்தர்ப்பங்களில், வக்பு நிலம் வணிக நோக்கங்களுக்காக தனியார் நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. இது ஒரு அறக்கட்டளையாக இருந்ததை வருவாய் ஈட்டும் முயற்சியாக மாற்றுகிறது. வக்பு நிலத்தின் இந்த வணிகப் பயன்பாடு சர்ச்சையை தூண்டியுள்ளது. குறிப்பாக இந்து அமைப்பினர், வக்பு அமைப்பின் இத்தகைய நடைமுறைகள் அறக்கொடைகள் என்ற கருத்தையே குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது மற்றும் மதத்தின் பெயரில் அநியாயமாக செல்வம் குவிக்க வழிவகுக்கிறது என்று குற்றம்சாட்டுகின்றனர்.
வக்பு திருத்த மசோதா 2024:
பல ஆண்டுகளாக தொடரும் சர்ச்சைகளுக்கு தீர்வு காணும் வகையில், வக்பு சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வர, மத்திய அரசு புதிய சட்ட திருத்த மசோதாவை முன்மொழிந்துள்ளது. அது கடுமையான விதிமுறைகளை அறிமுகப்படுத்தவும், வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், வக்பு வாரியம் சொத்துக்களை தவறாக பயன்படுத்துவதை தடுக்கவும் முயல்வதாக கூறப்படுகிறது. வக்பு நிலங்களை நிர்வகிப்பதற்கான மிகவும் வலுவான கட்டமைப்பை நிறுவுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது, நிலங்கள் சரியான நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்கிறது எனவும் அரசு தரப்பு தெரிவிக்கிறது. முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்கள் பல இஸ்லாமிய அமைப்புகளின் கடுமையான எதிர்ப்பை சந்தித்துள்ளன. இந்த மசோதா தங்கள் மத உரிமைகள் மீதான தாக்குதல் என்று கூறுகின்றன. இருப்பினும், இந்த மசோதாவை ஆதரிப்பவர்கள் தனிப்பட்ட மற்றும் வணிக ஆதாயத்திற்காக வக்பு மீதான பரவலான துஷ்பிரயோகத்தை குறைக்க வேண்டியது அவசியம் என்று வாதிடுகின்றனர்.
மசோதா அமலுக்கு வந்தால் என்ன ஆகும்?
முன்மொழியப்பட்ட திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டால், இந்தியாவில் வக்பு சொத்துக்கள் எவ்வாறு நிர்வகிக்கப்படுகின்றன என்பதில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டு வரலாம். வக்பு உரிமைகோரல்களின் கீழ், கட்டாய சரிபார்ப்பு பின்பற்றப்படும் என்பது முக்கிய மாற்றங்களில் ஒன்றாகும். இது சட்டபூர்வமான சொத்துக்கள் மட்டுமே வக்பு கீழ் பதிவு செய்யப்படுவதை உறுதி செய்யும். இந்த மசோதா வக்பு நிலத்தை வணிக ரீதியாக பயன்படுத்துவதில் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கும். லாப நோக்கத்திற்காக சொத்துக்களை குத்தகைக்கு விடுவதை தடுக்கிறது. தவறான நிர்வாகம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை தவிர்த்து, வக்பு வாரியங்களில் வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதில் அரசாங்கம் ஆர்வமாக உள்ளது.
பெண்களுக்கு வாய்ப்பில்லை:
வக்பு அமைப்பின் மற்றொரு சர்ச்சைக்குரிய அம்சம், சொத்துக்களின் நிர்வாகத்தை மேற்பார்வையிடும் வக்பு வாரியத்தில், முடிவெடுக்கும் செயல்பாட்டில் பெண்கள், போராக்கள் அல்லது ஆகா கானிகள் பங்கேற்க அனுமதிக்கப்படாததாகும். இஸ்லாமிய சமூகத்தின் முக்கிய பிரிவினரின் பிரதிநிதித்துவம் இல்லாதது தற்போதைய அமைப்பில் உள்ள பெரும் குறைபாடாக பார்க்கப்படுகிறது. மேலும் விரிவான சீர்திருத்தங்களின் தேவையை நியாயப்படுத்துவதாக பல தரப்பினரும் கருத்து தெரிவிக்கின்றனர்.
அரசுக்கு குவியும் மின்னஞ்சல்கள்:
அரசால் முன்மொழியப்பட்ட வக்பு சீர்திருத்தங்கள் நாடு முழுவதும் உள்ள இந்து அமைப்புகளிடமிருந்து பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. வக்பு சட்டத் திருத்த மசோதாவை அமல்படுத்த வலியுறுத்தி, லட்சக்கணக்கான மின்னஞ்சல்கள் அரசுக்கு அனுப்பி வருகின்றன. அதில் வக்பு நிலங்களை தவறாக பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் மற்றும் அனைத்து குடிமக்களின் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளன.