violence in Madhya Pradesh: ஆதார் கேட்டு இஸ்லாமியர் மீது தாக்குதல்; ம.பி.,யில் அடுத்தடுத்து சம்பவம்!
ஜாஹீர் கானிடம் ஆதார் அட்டை இல்லை என்பதை அறிந்து ஆத்திரம் அடைந்த அந்த இருவரும், தகாத வார்த்தைகளால் பேசி, கம்பாலும், பெல்டாலும் கடுமையாக தாக்கி உள்ளனர்
மத்தியப்பிரதேச மாநிலம், தேவாஸ் மாவட்டத்தில் உள்ள அமல்டாஸ் பகுதியை சேர்ந்தவர் ஜாஹீர் கான். 45 வயதான இவர் மோட்டார் பைக்கில் ஊர் ஊராக சென்று பிஸ்கட் விற்கும் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில், தேவாசிலிருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பரோலி சாலையில் தெரு ஓரத்தில் பிஸ்கட் விற்று வந்து உள்ளார் ஜாஹீர் கான்.
அப்போது, ஜாஹீர் கானை இடைமறித்த அப்பகுதியை சேர்ந்த இருவர், ஆதார் கார்டை காட்டுமாறு கோரி உள்ளனர். ”என்னிடம் ஆதார் கார்டு உள்ளது, ஆனால் வீட்டில் வைத்துவிட்டு வந்தேன்.” என ஜாஹீர் கான் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து தெரிவித்துள்ள கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சூரியகாந்த் சர்மா, “ஜாஹீர் கானிடம் ஆதார் அட்டை இல்லை என்பதை அறிந்து ஆத்திரம் அடைந்த அந்த இருவரும், தகாத வார்த்தைகளால் பேசி, கம்பாலும், பெல்டாலும் கடுமையாக தாக்கி உள்ளனர். குற்றவாளிகளை தேடி வருகிறோம். விரைவில் பிடிபடுவார்கள்” என்றார்.
இருவரின் கடும் தாக்குதலுக்கு ஆளான ஜாஹீர் கானின் கைகளிலும் கால்களிலும் காயம் ஏற்பட்டு உள்ளது. தன்னை தாக்கிய இருவரும் தேவாஸ் கிராமத்தை சேர்ந்தவர் தான் என்றும், பிஸ்கட் விற்பனை செய்யும்போது அவர்களை தான் பார்த்து உள்ளதாகவும், இனி தேவாஸ் கிராமத்துக்குள் நுழையக்கூடாது என தன்னை இருவரும் மிரட்டியதாகவும், அவர்களின் பெயர் தெரியவில்லை எனவும் ஜாஹீர் கான் போலீசாரிடம் தெரிவித்து உள்ளார்.
இருவரால் கடுமையாக தாக்கப்பட்டதை தொடர்ந்து ஹட்பிபலியா காவல் நிலையத்தில் ஜாஹீர் கான் புகார் அளித்துள்ளார். அதனை தொடர்ந்து, தரக்குறைவாக பேசுதல், காயப்படுத்துதல், மிரட்டல், உள்நோக்கத்துடன் தாக்குதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறை குற்றவாளிகளை தேடி வருகிறது.
கடந்த ஞாயிறு அன்று, மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உத்தரப்பிரதேச மாநிலம் ஹர்தோயை சேர்ந்த தஸ்லிம் என்ற வளையல் வியாபாரி மர்ம நபர்களால் தாக்கப்பட்டார். தஸ்லிம் அலி தாக்கப்படும் வீடியோ வைரலானதை தொடர்ந்து அவரை தாக்கிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
அதே சமயம் தாக்குதலுக்கு உள்ளான தஸ்லிம் அலி, 13 வயதுக்கு சிறுமிக்கு வளையல் மாட்டிவிடும்போது அவரது கை பட்டதற்காக போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.
ஒரே வாரத்தில் அடுத்தடுத்து இரண்டு இஸ்லாமியர்கள் மத்தியப் பிரதேசத்தில் தாக்கப்பட்டு உள்ள சம்பவம் அதிர்ச்சியையும் சிறுபான்மையினரிடயே அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களில் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு இல்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக இருந்து வரும் நிலையில், சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான மத்தியப் பிரதேச பாஜக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள், மனித உரிமை ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.