இளம் பெண்ணை பாலியல் தொழிலில் தள்ளினாரா பாஜக நிர்வாகி...போராட்டக்களமாக மாறிய உத்தராகண்ட்
அந்த இளம்பெண்ணை பாலியல் தொழிலில் தள்ள அம்மாநிலத்தின் முக்கிய பாஜக தலைவரின் மகன் முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது.
உத்தரக்கண்ட் மாநிலத்தில் 19 வயது இளம்பெண், படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. அந்த இளம்பெண்ணை பாலியல் தொழிலில் தள்ள அம்மாநிலத்தின் முக்கிய பாஜக தலைவரின் மகன் முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது.
ஹோட்டல் ஒன்றுக்கு சொந்தக்காரரான அந்த பாஜக தலைவரின் மகனின் வற்புறுத்தலுக்கு அப்பெண் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து, அவரும் மேலும் இருவரும் சேர்ந்து அந்த பெண்ணை கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.
முதலில் அவர் காணாமல் போனதாகக் கூறப்பட்டது. இச்சூழலில், நேற்று அவரது உடல் கால்வாயில் இருந்து மீட்கப்பட்டது.
தற்போது நீக்கப்பட்ட பாஜக தலைவர் வினோத் ஆர்யாவின் மகன் புல்கித் ஆர்யா, ரிசார்ட் மேலாளர் சவுரப் பாஸ்கர் மற்றும் உதவி மேலாளர் அங்கித் குப்தா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிசிடிவி கேமரா காட்சிகளில் அந்த இளம்பெண் கடைசியாக மூன்று பேருடன் காணப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
அமைச்சர் அந்தஸ்தில் உள்ள மாநில வாரியத்தின் முன்னாள் தலைவர் வினோத் ஆர்யா மற்றும் அவரது சகோதரர் அங்கித் ஆர்யா ஆகியோர் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், தாங்களே முன் வந்து ராஜினாமா செய்ததாக ஆர்யா விளக்கம் அளித்துள்ளார். மகன் புல்கிட் தங்களுடன் தங்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
விசாரணையில் மெதுவாக நடத்தப்படுவதாக குற்றம்சாட்டிய எதிர்க்கட்சிகள், எப்ஐஆர் பதிவு செய்வதில் தாமதம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளனர். ரிசார்ட் அமைந்துள்ள பகுதி வழக்கமான காவல்துறையின் அதிகார வரம்பிற்குள் வராது என மாநில காவல்துறை தலைவர் அசோக் குமார் விளக்கம் அளித்துள்ளார்.
தாமதம் குறித்து பேசிய அசோக், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும் அதிகாரம் நில வருவாய்த்துறை அலுவலர்களிடம் உள்ளது என தெளிவுப்படுத்தியுள்ளார். இதற்கு மத்தியில், இளம்பெண் பணிபுரிந்து வந்த ரிசார்ட்டை உள்ளாட்சி அமைப்பு இடித்து தள்ளியது.
பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினர், அவர் பணிபுரிந்த ரிசார்ட்டை இடித்தது குறித்து கேள்வி எழுப்பி உள்ளனர். மேலும், உடலை தகனம் செய்ய மறுத்துள்ளனர். தற்போது கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ள பாஜக மூத்த தலைவரின் மகன் முக்கிய குற்றவாளியாக உள்ள வழக்கில் ஆதாரங்களை அழிக்கும் முயற்சி இது என்று அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதையடுத்து, அங்கு போராட்டம் வெடித்துள்ளது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர், உடலை தகனம் செய்ய சம்மதம் தெரிவித்துள்ளனர். மேலும், போராட்டம் நடத்தி வரும் கூட்டத்தை அகற்றுமாறு அதிகாரிகளை கேட்டுக் கொண்டனர். தற்காலிக பிரேத பரிசோதனை அறிக்கையில், இளம்பெண் நீரில் மூழ்கியதால் இறந்தார் என்றும், சக்தியால் ஏற்பட்ட காயத்தின் அறிகுறிகள் அவரது உடலில் இருப்பதாகவும் கூறியுள்ளது.