இதுல என்ன ரகசியம் இருக்கு? லிவிங் டுகெதரில் இருக்கும் ஜோடியிடம் கேள்வி கேட்ட நீதிபதி!
உத்தரகாண்டில் அமல்படுத்தப்பட்ட பொது சிவில் சட்டத்தால் தங்களின் தனிப்பட்ட சுதந்திரம், தனியுரிமை பாதிக்கப்படுவதாக லிவிங் டுகெதரில் இருக்கும் ஜோடி அம்மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

மாநிலத்தில் அமல்படுத்தப்பட்ட பொது சிவில் சட்டத்தால் தங்களின் தனிப்பட்ட சுதந்திரம், தனியுரிமை பாதிக்கப்படுவதாக லிவிங் டுகெதரில் இருக்கும் ஜோடி, உத்தரகாண்ட் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதை விசாரித்த நீதிபதிகள், "லிவிங் டுகெதரில் இருக்கக் கூடாது என அரசாங்கம் சொல்லவில்லை. உங்களின் தனியுரிமை பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு முன்வைத்திருக்கிறீர்கள். அதற்கான ஆதாரத்தை தாருங்கள்" என தெரிவித்துள்ளனர்.
உத்தரகாண்ட் பொது சிவில் சட்டம்:
பொது சிவில் சட்டத்தை இயற்றிய முதல் மாநிலமாக மாறியுள்ளது உத்தரகாண்ட். திருமணம், விவாகரத்து, தத்தெடுத்தல், சொத்துரிமை உள்ளிட்ட விவகாரங்களில் அனைத்து மக்களுக்கும் ஒரே மாதிரியான சட்டம் இயற்றப்பட்டுள்ளது.
ஆனால், அதில், பல சட்டப்பிரிவுகள் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. குறிப்பாக, லிவ்-இன் உறவு தொடர்பாக கடுமையான சட்ட விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளன. லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பவர்கள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். அதோடு, பெற்றோரிடம் ஒப்புதல் பெறுவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில், உத்தரகாண்டில் அமல்படுத்தப்பட்ட பொது சிவில் சட்டத்தால் தங்களின் தனிப்பட்ட சுதந்திரம், தனியுரிமை பாதிக்கப்படுவதாக லிவிங் டுகெதரில் இருக்கும் ஜோடி அம்மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.
நீதிபதிகள் பரபர கருத்து:
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் நரேந்தர் மற்றும் அலோக் மஹ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு, "இதில் ரகசியம் என்ன இருக்கிறது? நீங்கள் இருவரும் லிவிங் டுகெதரில் இருக்கிறீர்கள். உங்கள் அண்டை வீட்டாருக்கும் தெரியும், சமூகத்திற்கும் தெரியும், உலகத்திற்கே தெரியும்.
நீங்கள் சொல்லும் தனியுரிமை இதில் எங்கிருந்து வருகிறது?... இதில் என்ன கிசுகிசு இருக்கிறது? நீங்கள் ரகசியமாக, ஒதுக்குப்புறமான குகையில் வாழ்கிறீர்களா? நீங்கள் சிவில் சமூகத்தின் மத்தியில் வாழ்கிறீர்கள். உங்களின் அந்தரங்கம் இதில் எங்கு பாதிக்கப்பட்டுள்ளது?
நீங்கள் ஒன்றாக வாழ முடியாது என்று அரசு சொல்லவில்லை. உங்கள் யார் இடையில் வருகிறார்கள்? உங்கள் தனியுரிமையில் இடையூறு செய்வதாகவும், உங்கள் அந்தரங்க தகவல்களை வெளியிடுவதாகவும் நீங்கள் குற்றம் சாட்டுகிறீர்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
அப்படி ஏதாவது இருந்தால், தயவுசெய்து அதை வெளியிடுங்கள். நீங்கள் குற்றச்சாட்டுகளைச் சுமத்தினால், அதை குறிப்பிட்டு சொல்லுங்கள்" என தெரிவித்துள்ளது.





















