Jai Shriram Violence : ஜெய் ஸ்ரீ ராம் கோஷத்தை சொல்ல சொல்லி கட்டாயப்படுத்தியதால் பரபரப்பு...மரத்தில் கட்டிவைக்கப்பட்ட இஸ்லாமியர்...உத்தர பிரதேசத்தில் மீண்டும் அதிர்ச்சி
இஸ்லாமிய மதத்தை சேர்ந்த தினக்கூலி திருடியதாக சந்தேகம் எழுந்த நிலையில், இரண்டு நபர்கள் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

உத்தர பிரதேச மாநிலத்தில் இஸ்லாமியர்கள் துன்புறுத்தப்படும் சம்பவங்கள் தினந்தோறும் செய்தித்தாள்களில் வெளியான வண்ணம் உள்ளது. இது, சிறுபான்மையினர்கள் மத்தியில் பெரும் அச்ச உணர்வை உருவாக்கியுள்ளது. அதன் தொடர்ச்சியாக, புலந்த்சாகர் மாவட்டத்தில் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கட்டாயப்படுத்தப்பட்ட இஸ்லாமியர்:
இஸ்லாமிய மதத்தை சேர்ந்த தினக்கூலி திருடியதாக சந்தேகம் எழுந்த நிலையில், இரண்டு நபர்கள் அவரை சரமாரியாக தாக்கியுள்ளனர். தாக்கியது மட்டும் இன்றி, அவரின் தலையை மொட்டையடித்துள்ளனர். கட்டாயப்படுத்தி, ஜெய் ஸ்ரீ ராம் சொல்ல வைத்துள்ளனர். இதையடுத்து, இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட நபரின் பெயர் சாஹில். இவரின் தந்தை ஷகீல் நடந்த சம்பவம் குறித்து விவரிக்கையில், "சம்பவத்திற்குப் பிறகு என் மகன் சிறைக்கு அனுப்பப்பட்டார். குற்றம் சாட்டப்பட்டவருடன் சமரசம் செய்து கொள்ளுமாறு போலீஸார் என்னை மிரட்டுகின்றனர். மதிய உணவுக்காக என் மகன் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது, குற்றம் சாட்டப்பட்டவர்கள் அவரைப் பிடித்து மரத்தில் கட்டி வைத்து அடித்துள்ளார்.
எங்கள் கோரிக்கையை யாரும் கேட்கவில்லை. போலீசார் எங்கள் மகனை தூக்கி சென்று சிறையில் அடைத்தனர். எங்கள் புகாரில் சம்பந்தப்பட்டவர்களின் பெயரை நாங்கள் சொன்னோம். இப்போது சமரசம் செய்யுமாறு சொல்கிறார்கள். அப்படி இல்லை என்றால் நாங்கள் இருக்கக்கூடாது என மிரட்டுகிறார்கள். எங்களுக்கு நீதி வேண்டும்" என்றார்.
புயலை கிளப்பிய சம்பவம்:
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மூவரில் ஒருவர், சம்பவத்தை வீடியோவாக எடுத்துள்ளார். இதனை தொடர்ந்து, அந்த வீடியோ வைரலாக பரவி புயலை கிளப்பியுள்ளது. இந்த குறிப்பிட்ட வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ள ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவரும் ஹைதராபாத் மக்களவை உறுப்பினருமான அசாதுதீன் ஒவைசி, உத்தர பிரதேச காவல்துறையை கடுமையாக விமர்சித்துள்ளார்.
"காவல்துறையின் அனுதாபத்தைப் பாருங்கள். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராகச் செயல்படாமல், சாஹிலை சிறைக்கு அனுப்பினார்கள். அநீதிக்கு எதிரான எங்கள் மனுக்களை எங்கே கொண்டு செல்வது?" என ஒவைசி பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுரேந்திர நாத் திவாரி கூறுகையில், "வயர் கிராமத்தில் எடுக்கப்பட்ட வீடியோவில், திருட்டு சந்தேகத்தின் பேரில் அதே கிராமத்தைச் சேர்ந்த சாஹிலை மூன்று பேர் தாக்குவதைக் காணலாம். வீடியோ குறித்து தெரிய வந்ததையடுத்து, குடும்பத்தினரிடம் இருந்து பெறப்பட்ட புகாரின் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்டவர் மீது காக்கோடு காவல் நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு, இரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்" என்றார்.
கஜேந்திரா, சவுரப், தன்னி ஆகியோர் குற்றம்சாட்டப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். உத்தர பிரதேசம்,. மத்திய பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது தொடர் கதையாகி வருகிறது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

