Rahul Gandhi Speech: ”தனது வாழ்நாளில் ஒருபோதும் தமிழக மக்களை பாஜக ஆள முடியாது” - மக்களவையில் கொந்தளித்த ராகுல் காந்தி!
மேக் இன் இந்தியா, ஸ்டார்ட்-அப் இந்தியா என்று நீங்கள் பேசுகிறீர்கள், ஆனால் இளைஞர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த வேலை கிடைக்கவில்லை
2022ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கல் நிகழ்வு குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது.
இன்று பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி, குடியரசுத் தலைவர் உரையில் நமது நாடு இப்போது எதிர்கொள்ளும் முக்கிய சவால்களைப் பற்றி பேசவில்லை என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
“ஜனாதிபதி உரையில் வேலையில்லா திண்டாட்டம் பற்றி ஒரு வார்த்தை கூட இல்லை. நாடு முழுவதும் இளைஞர்கள் வேலை தேடி வருகின்றனர். உங்கள் அரசால் அவர்களுக்கு வேலை வழங்க முடியவில்லை. 2021ல் 3 கோடி இளைஞர்கள் வேலை இழந்துள்ளனர். இன்றைய தேதியில் இந்தியா 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பின்மையை எதிர்கொள்கிறது. மேக் இன் இந்தியா, ஸ்டார்ட்-அப் இந்தியா என்று நீங்கள் பேசுகிறீர்கள், ஆனால் இளைஞர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த வேலை கிடைக்கவில்லை” என அவர் கூறியுள்ளார்.
மேலும், “துரதிர்ஷ்டவசமாக, ஜனாதிபதியின் உரையானது அரசாங்கம் செய்ததாகக் கூறும் விஷயங்களின் நீண்ட பட்டியலாக இருக்கிறது. ஆனால் நாம் எதிர்கொண்டு வரும் மூலோபாய சிக்கல்களைப் பற்றி ஆழமான தகவல்களை அது கொண்டிருக்கவில்லை. நம் நாடு எதிர்கொள்ளும் இரண்டு முக்கிய சவால்களைப் பேசவில்லை. எனக்கு, ஜனாதிபதி உரை என்பது ஒரு மூலோபாய பார்வைக்கு பதிலாக அதிகாரம் சொல்ல விரும்புவதைச் சொல்லுவதாக உள்ளது. இது ஒரு நல்ல தலைமைத்துவம் எழுதிய உரையாக இல்லாமல் அதிகாரம் சொல்லுவதைப் பிரதிபலிக்கும் கீழே போடத் தகுதியான காகிதமாகவே உள்ளது.” என்றும் கூறியுள்ளார்.
UPA Govt pulled 27 crore people out of poverty in 10 years. This is not our data, this is factual data. You pushed 23 crore people back into poverty: Congress MP Rahul Gandhi in Lok Sabha pic.twitter.com/4jfG2fNpoN
— ANI (@ANI) February 2, 2022
கூடுதலாக, காங்கிரஸ் அரசு 27 கோடி பேருக்கு வேலை வழங்கியதாகவும் அவர்களில் 23 கோடி பேரை பாஜக அரசு வீட்டுக்குத் திருப்பி அனுப்பிவிட்டதாகவும் ராகுல் தனது உரையில் குற்றம்சாட்டியுள்ளார்.
முன்னதாக, ராஜ்யசபாவில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, ”ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி வேலைகளை வழங்குவதாக வாக்குறுதியை பாஜக அரசு அளித்தது ஆனால் அதை பின்பற்றத் தவறிவிட்டது” என்று குற்றம் சாட்டினார். “இப்போதைக்கு நீங்கள் 15 கோடி வேலைகளை வழங்கியிருக்க வேண்டும். ஆனால் நீங்கள் உண்மையில் எத்தனை வேலைகளை வழங்கினீர்கள்? இந்த ஆண்டு பட்ஜெட் அடுத்த 5 ஆண்டுகளில் வெறும் 60 லட்சம் பேருக்கான வேலைகளை மட்டுமே உறுதியளிக்கிறது, ”என்று கூறியுள்ளார்.
அத்தியாவசியப் பொருட்களின் விலையைக் கட்டுப்படுத்தவும், வேலை வழங்கவும், விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்கும் இலக்கை எட்டவும் அரசு தவறிவிட்டதாகக் கூறி எதிர்க்கட்சிகள் இன்று மாநிலங்களவையில் அமளி செய்தன. மேலும் மாநிலங்களின் உரிமைகளை மீறுவதாகவும், நாட்டின் கூட்டாட்சி கட்டமைப்பில் இடையூறு விளைவிப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.
மக்களவையில் தொடர்ந்து பேசிய ராகுல்காந்தி “தனது வாழ்நாளில் ஒருபோதும் தமிழக மக்களை பாஜக ஆள முடியாது. நாட்டின் அடிதளத்தோடு ஆர்.எஸ்.எஸ் விளையாடிக்கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டு மக்களுக்கு மொழி, கலாசாரம், வரலாறு குறித்த புரிதல் இருக்கிறது. அவர்களிடம் இருந்து நான் கற்றுக்கொள்கிறேன். நீட் தேர்வில் தமிழகம் தொடர்ந்து விலக்கு கோருகிறது. ஆனால் மத்திய அரசு அதை கண்டுகொள்ளவில்லை. ஆனாலும் தொடர்ந்து மனம் தளராமல் தமிழகம் கேட்டுக்கொண்டுக்கிறது” எனப்பேசினார்.