Triple Talaq: சவுதியில் இருந்து மனைவிக்கு போனில் ‛தலாக்’ : உ.பி., போலீஸ் வழக்கு பதிவு!
இந்த புகார் தொடர்பாக தசபுல் மற்றும் அவரது குடும்பத்தினர் 8 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருமணத்தின் போது கூறிய வரதட்சணைக் கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என சவுதியிலிருந்து போனில் மூலம் மனைவியிடம் தலாக் கூறி விவாகரத்து செய்த நபர் மீது உ.பி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
“தலாக் அல்லது முத்தலாக்“ என்பது இஸ்லாமிய பெண்களின் உரிமைகளைப்பறிக்கும் வார்த்தைகளாக பல ஆண்டுகளாக தொடர்ந்து வந்தது. தன்னுடைய மனைவி பிடிக்கவில்லை அல்லது வேறு ஏதாவது பிரச்சனை ஏற்பட்டாலும் மற்ற மதங்களைப்போல் மனைவியை விவகாரத்து செய்வதற்கு எந்த நீதிமன்றம் செல்லத்தேவையில்லை என்பதை தலாக் உறுதி செய்து வந்தது. இதன் மூலம் முஸ்லீம் மதத்தில் மூன்று முறை தலாக் என்று கூறினாலே மனைவியை விவகாரத்து செய்துக்கொள்ளலாம் என்ற நடைமுறை உள்ளது. இந்த நிலையில் தான் இத்தகைய வழக்கம் சட்டவிரோதமானது என்று அறிவிக்கக்கோரி முஸ்லீம் பெண்கள் உள்பட ஏழு பேர் துணிச்சலாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். பல கட்ட விசாரணைக்குப் பிறகு தான் இஸ்லாமியர்களின் முத்தலாக்கிற்கு தடை விதிக்கப்பட்டது.
இதனையடுத்து இஸ்லாமிய பெண்களை தலாக் கூறி கணவர் விவாகரத்து செய்யும் நடைமுறைக்கு தடைவிதிக்கும் அவசர சட்டத்தை கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மத்திய அரசு கொண்டுவந்தது. இதற்கு மாற்றான மசோதா, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. பின்னர் இஸ்லாமிய பெண்கள் திருமண பாதுகாப்பு மசோதாவிற்கு குடியரசுத்தலைவர் ராம் நாத் கோவிந்த ஓப்புதல் அளித்துள்ளார். இவ்வாறு முத்தலாக் சட்டத்திற்கு தடை விதிப்பு என்பது நடைமுறையில் உள்ள நிலையில் தான், சவுதியிலிருந்து போனின் மூலம் மனைவிற்கு தலாக் கூறி விவாகரத்து வழங்கிய சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
உபியைச்சேர்ந்த தசபுல் என்பவர் கடந்த 2005 ஆம் ஆண்டு ரசியா பானுவை திருமணம் செய்திருந்தார். திருமணத்திற்கு பிறகு ரசியா பானுவை தசபுல் மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சணைக்கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும், பல முறை தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தான், சவுதியில் உள்ள தனது கணவர், தனக்கு போனில் மூன்று முறை தலாக் என்று கூறி விவாகரத்து செய்துவிட்டதாக தெரிவித்துவிட்டார் என பாதிக்கப்பட்ட அப்பெண் உ.பி.யின் பதேபூர் மாவட்டம், ஹத்காம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகார் தொடர்பாக தசபுல் மற்றும் அவரது குடும்பத்தினர் 8 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஆனால் இதுவரை யாரையும் போலீசார் கைது செய்யவில்லை. முஸ்லீம்களின் முத்தலாக்கிற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையிலும், மீண்டும் இதனை நடைமுறைக்கு கொண்டுவருவது சட்டப்படி குற்றம் எனவும், விரைவில் ரசியா பானு கொடுத்த புகார் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.