"3 இடத்தைதான் கேட்கிறோம்" - அயோத்தி வரிசையில் இந்த மசூதிக்கள்? உ.பி. முதலமைச்சர் சர்ச்சை
உத்தர பிரதேச சட்டப்பேரவையில் அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், கிருஷ்ண ஜென்ம பூமி குறித்து தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சைக்கு வழி வகுத்துள்ளது.
கிட்டத்தட்ட 100 ஆண்டுகால அயோத்தி சர்ச்சை கடந்த 2019ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பால் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. சர்ச்சைக்குரிய இடம் இந்து தரப்பினருக்கு சொந்தம் என்றும் அங்கு அயோத்தி கோயில் கட்டவும் உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதையடுத்து, அயோத்தி கட்டுமான பணிகள் வேகமாக நடந்து வந்த நிலையில், கடந்த மாதம் 22ஆம் தேதி ராமர் கோயில் திறக்கப்பட்டது.
அயோத்தி வரிசையில் குறிவைக்கப்படும் மசூதிகள்:
ஏற்கனவே, அயோத்தி வழக்கு நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், தற்போது மதுரா மசூதி வழக்கும் ஞானவாபி மசூதி வழக்கும் பூதாகாரமாக வெடித்துள்ளது. உத்தர பிரதேசம் மாநிலம் மதுராவில் ஷாஹி இத்கா மசூதி அமைந்திருக்கும் இடத்தில் பகவான் கிருஷ்ணர் பிறந்ததாக இந்துகள் நம்புகின்றனர்.
எனவே, மசூதி அமைந்திருக்கும் இடத்தில் கோயில் கட்டப்பட வேண்டும் என இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகிறது. அதேபோல, வாரணாசி காசி விஸ்வநாதர் கோயில் அருகே அமைந்துள்ள ஞானவாபி மசூதியில் கோயில் இருந்ததாக சர்ச்சை எழுந்த நிலையில், அதற்கு ஆதாரங்கள் இருப்பதாக இந்திய தொல்லியல் துறை அறிக்கை வெளியிட்டிருப்புது பதற்றத்தை மேலும் தூண்டியுள்ளது.
இந்த நிலையில், உத்தர பிரதேச சட்டப்பேரவையில் அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், கிருஷ்ண ஜென்ம பூமி குறித்து தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சைக்கு வழி வகுத்துள்ளது. வாரணாசி ஞானவாபி மசூதி குறித்து மறைமுகமாக பேசிய அவர், "நந்தி தேவர் (சிவனின் வாகனம்) அயோத்தியில் கொண்டாட்டங்களைக் கண்டதும், பிடிவாதமாக இருந்ததால், இரவில் தடுப்புகளை உடைத்து எறிந்தார்.
உ.பி. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சர்ச்சை:
இப்போது நமது கிருஷ்ண பகவான் பிடிவாதமாக இருக்கிறார். 5,000 ஆண்டுகளுக்கும் மேலாக அயோத்திக்கு அநீதி இழைக்கப்பட்டது. காசியிலும் மதுராவிலும் இதுதான் நடந்தது. கோயிலில் நம் பகவான் இடம் பிடித்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. கும்பாபிஷேகம் நடந்ததில் மகிழ்ச்சி அடைந்தேன். அங்கு கோவில் கட்டுவோம் என்ற வாக்குறுதியை நிறைவேற்றியதில் மகிழ்ச்சியாக இருந்தது" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "கௌரவர்களிடம் சென்று கிருஷ்ணர் பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் செய்தார். ஆனால், துரியோதனன் மறுத்துவிட்டான். அயோத்தியிலும், காசியிலும், மதுராவிலும் இதுதான் நடந்தது. கிருஷ்ணர் ஐந்து கிராமங்களைக் கேட்டார். நாங்கள் எங்கள் நம்பிக்கையின் மூன்று மையங்களைக் கேட்கிறோம்" என்றார்.
இதன் மூலம், பாஜக அரசின் அடுத்த இலக்கு மதுரா, வாரணாசி என்பது தெளிவாகியுள்ளது. மதுரா விவகாரத்தை பொறுத்தவரையில், மசூதி அமைந்திருக்கும் இடத்தில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என இந்து அமைப்புகள் உள்ளூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. ஆய்வு மேற்கொள்வதற்கு இஸ்லாமிய தரப்பு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
ஞானவாபி விவகாரத்தை பொறுத்தவரையில், இந்திய தொல்லியல் துறை மேற்கொண்ட ஆய்வில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. அதாவது, ஞானவாபி மசூதி இருக்கும் இடத்தில் இந்து கோயில் இருந்துள்ளதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன என ஆய்வறிக்கையில் கூறப்பட்டது. இதனையடுத்து, ஞானவாபி மசூதியின் மூடப்பட்ட அடித்தள பகுதியில் நீதிமன்ற அனுமதியுடன் இந்துக்கள் வழிபட்டு வருகின்றனர்.