I.N.D.I.A என்பது ஆபத்தான சொல்.. மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சர்ச்சை கருத்து
எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள கூட்டணிக்கு I.N.D.I.A என பெயர் சூட்டியதில் இருந்தே, பாஜக அதற்கு கடுமையாக எதிர்வினையாற்றி வருகிறது.
டெல்லியில் நடைபெற உள்ள ஜி20 உச்சி மாநாட்டின் இரவு விருந்துக்கு வெளிநாட்டு தலைவர்களை வரவேற்கும் வகையில் அச்சிடப்பட்ட அழைப்பிதழில் இந்தியாவுக்கு பதிலாக பாரத் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருப்பது சர்ச்சையை கிளப்பி வருகிறது.
இந்தியா பெயர் மாற்ற சர்ச்சை:
எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து உருவாக்கியுள்ள கூட்டணிக்கு I.N.D.I.A என பெயர் சூட்டியதில் இருந்தே, பாஜக அதற்கு கடுமையாக எதிர்வினையாற்றி வருகிறது. இதுதொடர்பான அறிவிப்பு வெளியானது முதலே நாட்டின் பெயரை பாரத் என பயன்படுத்த வேண்டும் என பாஜக தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்தும், இனி இந்தியா என்ற பெயரை பயன்படுத்தக் கூடாது, பாரத் என்றே நாட்டை அழைக்க வேண்டும் என கூறி இருந்தார். இந்த சூழலில்தான், வழக்கமாக குறிப்பிடுவதை போன்று அல்லாமல், ஜி20 மாநாட்டிற்கான அழைப்பிதழில் பாரத குடியரசு தலைவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனால், நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் இந்தியாவின் பெயரை “பாரதம்” என மாற்றுவதற்கான மசோதா தாக்கல் செய்யப்படலாம் என தகவல்கள் வெளியான வண்ணம் இருக்கிறது.
"INDIA என்பது ஆபத்தான சொல்"
இந்த நிலையில், INDIA என்பது ஆபத்தான சொல் என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். ராஜஸ்தானில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஜெய்சால்மர் நகரில் பாஜகவின் மூன்றாவது பரிவர்தன் சங்கல்ப் யாத்திரையை ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார். தொடர்ந்து பேசிய அவர், "28 எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளன. என்ன நடந்தாலும், மோடி பிரதமர் ஆகக் கூடாது என அவர்கள் கூறுகிறார்கள்.
சகோதர சகோதரிகளே, இந்த நாட்டின் வளர்ச்சிக்காக, நாட்டின் மரியாதையை கெளரவத்தை உயர்த்த கூட்டணிகள் அமைக்க வேண்டும். ஆனால், எந்த நிபந்தனையிலும் மோடி ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்காக இந்த கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தக் கூட்டணியின் நிலை என்ன? அவர்கள் INDIA என்ற பெயரை வைத்திருக்கிறார்கள்.
ஆனால், நான் அவர்களுக்கு ஒன்றை சொல்ல விரும்புகிறேன். இந்த பெயர் மிகவும் ஆபத்தானது. ‘ஒளிரும் இந்தியா’ என்ற கோஷத்தை முன்வைத்து நாங்கள் தேர்தலில் தோல்வியை சந்தித்தோம். இப்போது, நீங்கள் இந்தியாவை உங்கள் பெயராக மாற்றிவிட்டீர்கள். உங்கள் தோல்வி நிச்சயம்" என்றார்.
ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டை விமர்சித்து பேசிய அவர், "முதலமைச்சர், ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருக்கிறார். ஆனால், வேறு ஒருவர் இந்த வாகனத்தின் கிளட்சை அழுத்துகிறார். மேலும் ஒருவர் ஆக்சிலேட்டரை அழுத்துகிறார்" என்றார்.
முன்னதாக, மத்தியப் பிரதேசத்தில் நடந்து பொதுக்கூட்டம் ஒன்றில், சனாதனம் குறித்து தமிழ்நாடு அமைச்சர் உதயநிதியின் கருத்தை விமர்சித்து பேசினார்.