தேசிய நீர் விருது அறிவிப்பு: எந்த மாநிலம் முதல் இடம்? தமிழ்நாட்டிலிருந்து யாருக்கு விருது?
மத்திய நீர்வள அமைச்சர் 5-வது தேசிய நீர் விருதுகளை அறிவித்தார். அதில் கல்லூரி பிரிவில், கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் இடம் பெற்றுள்ளது.
புதுதில்லியில் உள்ள ஷ்ரம் சக்தி பவனில், 5-வது தேசிய நீர் விருதுகளுக்கான வெற்றியாளர்களின் பட்டியலை மத்திய நீர்வள அமைச்சர் சி.ஆர். பாட்டீல் இன்று அறிவித்தார்.
மத்திய நீர் வள அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நீர்வளம், நதி மேம்பாடு மற்றும் கங்கை புத்துயிரூட்டல் துறை’ 5-வது தேசிய நீர் விருதுகள், 2023-க்கான கூட்டு வெற்றியாளர்கள் உட்பட 38 வெற்றியாளர்களை அறிவித்தது.
சிறந்த மாநிலம்:
சிறந்த மாநிலம், சிறந்த மாவட்டம், சிறந்த கிராம பஞ்சாயத்து, சிறந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு, சிறந்த பள்ளி அல்லது கல்லூரி, சிறந்த தொழில், சிறந்த நீரைப் பயன்படுத்துவோர் சங்கம், சிறந்த நிறுவனம் (பள்ளி அல்லது கல்லூரி தவிர), மற்றும் சிறந்த சிவில் சமூகம் ஆகிய பிரிவில் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த மாநிலம் என்ற பிரிவில், முதல் பரிசு ஒடிசாவுக்கும், இரண்டாவது இடத்தை உத்தரப்பிரதேசம் பெற்றும், குஜராத் மற்றும் புதுச்சேரி கூட்டாக மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.
தமிழ்நாடு:
கல்லூரி பிரிவில், கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் இடம் பெற்றுள்ளது.
விருது பெறும் ஒவ்வொருவருக்கும் சில பிரிவுகளில் பாராட்டுப் பத்திரம் மற்றும் கோப்பை மற்றும் ரொக்கப் பரிசு வழங்கப்படும்.
5-வது தேசிய நீர் விருதுகள், 2023 க்கான விருது வழங்கும் விழா 2023 அக்டோபர் 22 ஆம் தேதி காலை 11.00 மணிக்கு புதுதில்லி விக்யான் பவனில் நடைபெறும் என்று நீர்வளம்,நதி மேம்பாடு மற்றும் கங்கை புத்துயிரூட்டல் துறை அறிவித்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.
2023-ம் ஆண்டிற்கு, 5வதுதேசிய நீர் விருதுகள் 2023 அக்டோபர் 13 அன்று உள்துறை அமைச்சகத்தின் ராஷ்ட்ரிய தேசிய விருது தளத்தில் பெறப்பட்டன. மொத்தம் 686 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. விண்ணப்பங்கள் நடுவர் குழுவால் ஆய்வு செய்யப்பட்டு மதிப்பீடு செய்யப்பட்டன. மத்திய நீர்வள ஆணையம் மற்றும் மத்திய நிலத்தடி நீர் வாரியம் ஆகியன விண்ணப்பங்களின் உண்மை நிலையை ஆய்வு செய்தன. கள உண்மை அறிக்கைகளின் அடிப்படையில்,09 வெவ்வேறு பிரிவுகளைஉள்ளடக்கிய கூட்டு வெற்றியாளர்கள் உட்பட மொத்தம் 38 வெற்றியாளர்கள் 5-வது, தேசிய நீர் விருது 2023-க்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.