Twitter India | கும்பமேளா அனுமதி, ஆக்சிஜன், படுக்கை தட்டுப்பாடு.. அரசை விமர்சித்த 50 ட்விட்டர் பதிவுகள் நீக்கம்..
பெரும்பாலான பதிவுகள் கொரோனாவின் "இரண்டாவது அலை" பரவலின்போது மத்திய அரசின் செயல்பாடுகளை விமர்சிக்கும் விதமாக அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா இரண்டாவது அலை பரவி, மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியிருக்கும் இந்தச் சூழலில், இந்திய அரசையும் அதன் செயல்பாடுகளையும் விமர்சிக்கும் பதிவுகளை உடனடியாக நீக்க மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் உத்தரவிட்டதையடுத்து, ட்விட்டர் இந்தியா நிர்வாகம், அதன் தளத்தில் இருந்து 50 பதிவுகளை நீக்கியுள்ளது. இதில், பெரும்பாலான பதிவுகள் கொரோனாவின் "இரண்டாவது அலை" பரவலின்போது மத்திய அரசின் செயல்பாடுகளை விமர்சிக்கும் விதமாக அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த மார்ச் மாத நடுப்பகுதியில் இருந்து நாடு முழுவதும் தினசரி கொரோனா நோய்த் தொற்று அதிகரித்து வருகிறது. 25,52,940 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 3,46,786 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில், 2,624 பேர் உயிரிழந்துள்ளனர். தலைநகர் டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் ஆக்சிஜன் மற்றும் ஆக்சிஜன் தொடர்பான உபகரணங்களின் விநியோகத்தில் உள்ள தட்டுப்பாடுகள் காரணமாக கொரோனா உயிரிழப்புகளை சந்தித்து வருகிறது. மேற்குவங்கத் தேர்தல் பிரச்சாரம், கும்பமேளா நிகழ்வு உள்ளிட்டவைகள் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளன.
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கெரா, காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ரேவந்த் ரெட்டி, மேற்கு வங்க மாநில அமைச்சர் Moloy Ghatak, ஏபிபி செய்தி ஆசிரியர் பங்கஜ் ஜா, நடிகர் வினீத் குமார் சிங், திரைப்படத் தயாரிப்பாளர் அவினாஷ் தாஸ், திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் முன்னாள் பத்திரிகையாளர் வினோத் கப்ரி உள்ளிட்ட அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்குகளில் இருந்த பதிவுகள் நீக்கப்பட்டுள்ளன.
உலகம் முழுவதும் சமூக ஊடகத் தளங்களில் அரசின் தலையீடுகள் மற்றும் take Down உத்தரவுகளை கண்காணிக்கும் அமைப்பான lumen database, ட்விட்டர் நிர்வாகத்துக்கு மத்திய அரசு பிறப்பித்த take Down நோட்டிசை வெளியிட்டுள்ளது. முன்னதாக, டெல்லி விவசாயிகள் போராட்டங்களின் போது சுமார் 1000-க்கும் மேற்பட்ட பதிவுகளை நீக்க மத்திய ஐடி அமைச்சகம் ட்விட்டர் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது. இதனை, ட்விட்டர் நிர்வாகம் முழுமையாக அமல்படுத்த மறுத்துவிட்டது.
இதனையடுத்து, சமூக இணைய தளம் மற்றும் டிஜிட்டல் மீடியா மற்றும் OTT தளம் தொடர்பாக இணக்கமான மேற்பார்வையிடும் பொறிமுறையை பெறுவதற்காக, மத்திய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பம் அமைச்சகம் தகவல் தொழில்நுட்ப விதிமுறைகள் 2021-ஐ வெளியிட்டன. புதிய தகவல் தொழில்நுட்ப விதிமுறைகள் படி, இந்தியாவில் தொழில் செய்ய சமூக ஊடக தளங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆனால், அந்த நிறுவனங்கள், இந்திய அரசியலமைப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். கேள்விகள் எழுப்பவும், விமர்சிக்கவும், சமூக ஊடக தளங்களை பயன்படுத்தலாம். சமூக ஊடக தளங்கள் சாதாரண பயனர்களுக்கு அதிகாரம் அளித்துள்ளன, ஆனால் அதன் தவறான பயன்பாடு மற்றும் துஷ்பிரயோகத்திற்கு எதிராக அவர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டது.