ஹேக் செய்யப்பட்ட ட்விட்டர் கணக்குகள்...200 மில்லியன் பேரின் மெயில் கணக்கு தொடர்பான தகவல்கள் லீக்... ஆராய்ச்சியாளர் அதிர்ச்சி..!
ட்விட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டது குறித்த குற்றச்சாட்டுக்கு ட்விட்டர் சார்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.
200 மில்லியன் ட்விட்டர் பயனர்களின் இமெயில் தொடர்பான தகவல்களை ஹேக்கர்கள் திருடியுள்ளதாகவும் அதை ஆன்லைன் ஹேக்கிங் தளத்தில் அவர்கள் பதிவிட்டுள்ளதாகவும் பாதுகாப்பு தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வரும் ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டது குறித்து விரிவாக பேசியுள்ள இஸ்ரேல் நாட்டின் சைபர் பாதுகாப்பு கண்காணிப்பு நிறுவனமான ஹட்சன் ராக்கின் இணை நிறுவனர் அலோன் கால், "இந்த பாதுகாப்பு விதி மீறல் இன்னும் பல ஹேக்கிங்கிற்கு வழிவகுக்கும்.
அதுமட்டுமின்றி, நிறுவனங்கள் அனுப்புவது போல மெயில் மற்றும் குறுஞ்செய்திகளை அனுப்பி தனிப்பட்ட தகவல்களை திருட வழிவகுக்கும். இதுவரை நடந்த மிக பெரிய பாதுகாப்பு விதி மீறல் இதுவாகும்" என்றார்.
ட்விட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டது குறித்த குற்றச்சாட்டுக்கு ட்விட்டர் சார்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. பாதுகாப்பு விதி மீறல் தொடர்பான அறிக்கையை முதலில் சமூக வலைதளத்தில்தான் கால் வெளியிட்டிருந்தார்.
மேலும், இந்த விவகாரத்தில் ட்விட்டர் எந்த மாதிரியான நடவடிக்கையை எடுத்துள்ளது என்பது குறித்த தெளிவான தகவல்கள் இல்லை.
ஹேக்கர்கள் தளத்தில் லீக்கான மெயில் கணக்கு தொடர்பான தகவல்கள் எல்லாம் உண்மையானவையா, ட்விட்டர் மூலம் கசியவிடப்பட்டதா என்பது குறித்து ஆராய ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் முயற்சித்தது. ஆனால், அவை உண்மையானவையா என்பது குறித்து சரி பார்க்க முடியவில்லை.
பாதுகாப்பு மீறலுக்குப் பின்னால் உள்ள ஹேக்கர் அல்லது ஹேக்கர்களின் அடையாளம் அல்லது அவர்களின் இருப்பிடம் குறித்து எந்த தடயமும் இல்லை. இந்த பாதுகாப்பு விதி மீறல் 2021 ஆம் ஆண்டிலேயே நடந்திருக்கலாம். அதாவது, ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்குவதற்கு முன்பு இந்த பாதுகாப்பு விதி மீறல் நடந்திருப்பதாக கூறப்படுகிறது.
முதலில், 400 மில்லியன் மெயில் கணக்குகள் மற்றும் அவர்களின் தொடர்பு எண்கள் திருடப்பட்டதாக டிசம்பர் மாதம் தகவல் வெளியாகி இருந்தது. ஆனால், தற்போது 200 மில்லியன் ட்விட்டர் பயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதாக கூறப்படுகிறது.
Interesting timing on this tweet. Comes after a hacker this week published data on as many as 200+ million Twitter users, although the tweet does not reference the hack. https://t.co/RcxDCvEjmo https://t.co/xs7bZiJCgS
— Mikael Thalen (@MikaelThalen) January 5, 2023
ட்விட்டர் நிறுவனத்தின் ஐரோப்பிய தலைமையகம் அயர்லாந்தில் உள்ளது. அங்குள்ள தரவு பாதுகாப்பு ஆணையமும் அமெரிக்காவில் உள்ள அமெரிக்க மத்திய வர்த்தக ஆணையமும் ட்விட்டர் முறையான பாதுகாப்பு விதிகளை பின்பற்றுகிறதா என்பது குறித்து கண்காணித்து வருகிறது. இந்த பாதுகாப்பு விதி மீறல் குற்றச்சாட்டு குறித்து அவை இரண்டும் இன்னும் பதில் அளிக்கவில்லை.