Trump Tariffs: ஓவரா ஆடும் ட்ரம்ப் - என்ன செய்தால் அமெரிக்காவை அடக்கலாம்? இந்தியா செய்ய வேண்டியது என்ன?
USA Trump Tariffs: அமெரிக்காவின் வரிச்சுமையை எதிர்கொள்ள இந்தியா செய்ய வேண்டியது என்ன? என்பது குறித்து இந்த தொகுப்பில் அறியலாம்.

USA Trump Tariffs: அமெரிக்காவின் வரிச்சுமையை எதிர்கொள்ள இந்தியாவின் முன் உள்ள வழிகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
வரியை அள்ளிப்போட்ட ட்ரம்ப்:
இந்தியாவையும், பிரதமர் மோடியையும், நட்பு நாடாகவும், நெருங்கிய நண்பராகவும் குறிப்பிட்டு வந்த, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 50 சதவிகிதம் வரி விதித்து அதிர்ச்சி அளித்துள்ளார். பொருளாதார தடைகளை மீறி ரஷ்யாவுடன் தொடர்ந்து வணிகம் செய்து வரும் சீனா மற்றும் துருக்கி போன்ற நாடுகள் மீது கூடுதல் வரி விதிக்காத அமெரிக்கா, இந்தியா மீது மட்டும் வரி விதித்து இரட்டை நிலைப்பாட்டை கொண்டுள்ளது. இதற்கு வெளியுறவு அமைச்சகம் கண்டனமும் தெரிவித்துள்ளது. இந்நிலையில், அமெரிக்காவின் வரிச்சுமையை எதிர்கொள்ள இந்தியாவின் முன் உள்ள வழிகள் என்ன என்பதை இங்கே அறியலாம்.
அமெரிக்கா நட்பு நாடு தானா?
இந்தியாவை காட்டிலும் ரஷ்யாவிடமிருந்து கூடுதல் கச்சா எண்ணெயை கொள்முதல் செய்யும் ரஷ்யா மீது விதிக்கப்பட்ட வரியை அமல்படுத்த 90 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தியாவிற்கு முதற்கட்டமாக இன்றும், கூடுதல் வரிகள் வரும் 27ம் தேதி முதலும் அமலுக்கு வரவுள்ளன. அதேநேரம், அமெரிக்காவுடம் ரஷ்யாவிடமிருந்து யுரேனியம், பல்லேடியம் போன்றவற்றை தொடர்ந்து இறக்குமதி செய்கிறது. அப்படி இருக்கையில் இந்தியா மீது மட்டும் அவர்கள் கூடுதல் வரி விதிப்பது நியாயாமா? என்பதே கேள்வியாக உள்ளது. இதனால், உண்மையில் அமெரிக்கா இந்தியாவிற்கு நட்பு நாடு தானா? ட்ரம்ப் நிர்வாகம் எதிர்பார்த்தபடி மோடியின் நிர்வாகத்துடன் நட்பு பாராட்டுகிறதா?
இந்தியாவும் போட்டி வரி விதிக்கக் கூடுமா?
இந்தியாவும் ஏன் அமெரிக்காவிற்கு போட்டியாக சரிநிகர் வரி விதிக்கக் கூடாது என்பதே பலரின் பிரதான கேள்வியாக உள்ளது. அப்படி செய்தாலும் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்பதே வல்லுநர்களின் கருத்தாக உள்ளது. காரணம் அமெரிக்க பொருட்கள் நம் நாட்டிற்கு வருவதை காட்டிலும், நமது பொருட்களே அந்நாட்டிற்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதாவது இந்தியாவின் ஏற்றுமதி நாடுகளில் அமெரிக்க முதன்மையானதாக இருக்கிறது. ஆனால், அமெரிக்காவிற்கான ஏற்றுமதி நாடுகளில் இந்தியா அப்படி முக்கியத்துவம் வாய்ந்ததாக இல்லை. எனவே, அந்நாட்டு பொருட்கள் மீது கூடுதல் வரி விதித்தாலும் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்பதே துறை சார் வல்லுநர்களின் கணிப்பாக உள்ளது.
பரந்த சந்தைகளை நோக்கிய பயணம்
இந்திய அரசாங்கம் அமெரிக்காவை தாண்டி, தனது வர்த்தக நண்பர்களாக பல நாடுகளை ஒருங்கிணைப்பதே சிறந்த நடவடிக்கையாக இருக்கும் என பொருளாதார வல்லுநர்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்களும் அறிவுறுத்துகின்றனர். ஏற்றுமதியை பரந்ததாக விரிவு செய்வதன் மூலம் ஒற்றை நாட்டை நம்பியிருக்கும் சூழலை மாற்ற முடியும். நமது நாட்டு உற்பத்தி பொருட்களுக்கு தேவை உள்ள பல சந்தைகளையும் அணுகி நமக்கான வாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும். அதற்கேற்ற வெளியுறவுக் கொள்கைகளையும் வகுக்க வேண்டும்.
புதிய வர்த்தக ஒப்பந்தங்கள்:
இங்கிலாந்துடன் அண்மையில் தான் இந்தியா தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொண்டது. ஐரோப்பிய யூனியன் நாடுகளுடன் இத்தகைய ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. விரைவில் இறுதி செய்யப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேபோன்று இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு தேவை உள்ள நாடுகளை கண்டறிந்து ஒப்பந்தங்களை மேற்கொண்டால், அமெரிக்கா போன்ற சில நாடுகளின் வரி விதிப்பு நடவடிக்கைகள் என்பது எதிர்காலத்தில் நமது ஏற்றுமதியாளர்களுக்கு பெரும் சுமையாக இருக்காது. ஆனால், தற்போதைய சூழலுக்கு ட்ரம்ப் நிர்வாகத்தின் வரி விதிப்பு நடவடிக்கையானது, குறுகிய காலத்திற்கான தவிர்க்க முடியாத தாக்கமாக இருக்கும் என்பது நிராகரிக்க முடியாத உண்மையாக உள்ளது.




















