பெற்ற தாயை உயிரோடு எரித்த மகன்கள்.. மரத்தில் கட்டி வைத்த கொடூரம்.. திரிபுராவில் ஷாக்!
திரிபுராவில் மூதாட்டி ஒருவரை மரத்தில் கட்டி வைத்து உயிரோடு எரித்து கொலை செய்துள்ளனர். அவரது இரண்டு மகன்களே இந்த வெறிச்செயலை செய்துள்ளனர்.
திரிபுராவில் 62 வயது மூதாட்டியை அவரது மகன்களே உயிரோடு எரித்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றிலும் இம்மாதிரியான வெறிச் செயல்கள் அரங்கேறி வருகின்றன. இளம்பெண் ஷ்ரத்தா கொலை வழக்கு கடந்தாண்டு இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்தாண்டு, கொல்கத்தா சம்பவம் நாட்டில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.
திரிபுராவில் பதைபதைக்கும் சம்பவம்:
இந்த நிலையில், மேற்கு திரிபுராவில் ஒரு கொடூர சம்பவம் நடந்துள்ளது. மூதாட்டி ஒருவரை மரத்தில் கட்டி வைத்து உயிரோடு எரித்து கொலை செய்துள்ளனர். அவரது இரண்டு மகன்களே இந்த வெறிச்செயலை செய்துள்ளனர். இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
குடும்ப தகராறு காரணமாக இந்த கொடூர கொலை நடந்திருக்கலாம் என காவல்துறை சந்தேகிக்கிறது. இச்சம்பவம் சம்பக்நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கமர்பாரி பகுதியில் கடந்த சனிக்கிழமை இரவு நடந்தது.
கொலை செய்யப்பட்ட மூதாட்டி, சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் கணவனை இழந்துள்ளார். தனது இரண்டு மகன்களுடன் வசித்து வந்துள்ளார். அவரது மற்றொரு மகன் அகர்தலாவில் வசித்து வந்துள்ளார். ஜிரானியாவின் சப்-டிவிஷனல் போலீஸ் அதிகாரி கமல் கிருஷ்ணா கோலோய், இதுகுறித்து கூறுகையில், "ஒரு பெண் தீ வைத்து எரிக்கப்பட்டதாக தகவல் கிடைத்தது.
பெற்ற தாயை கொன்ற மகன்கள்:
அங்கு விரைந்த போலீஸ் குழு, மரத்தில் எரிந்த நிலையில் சடலத்தை கண்டது. உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். இந்த வழக்கில் தொடர்புடையதாக அவரது இரு மகன்களையும் கைது செய்துள்ளோம்.
இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உள்ளனர். குடும்ப தகராறே இந்த சம்பவத்திற்கு காரணமாக இருக்கலாம். இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது" என்றார்.
பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் பெரும்பாலும் அவர்களுக்கு தெரிந்தவர்களாலேயே நடத்தப்படுவதாக அதிர்ச்சி அறிக்கைகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. ஒவ்வொரு 11 நிமிடங்களுக்கும் நன்கு தெரிந்த ஒருவராலேயோ அல்லது குடும்ப உறுப்பினர் ஒருவராலேயோ ஒரு பெண்/சிறுமி கொல்லப்படுகிறார் என ஐநா செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் கடந்தாண்டு அதிர்ச்சி தகவலை வெளியிட்டிருந்தார்.