Tripura Election 2023: தேர்தல் நடக்கும் திரிபுராவின் தலைநகரில் குண்டு வெடிப்பு; அதிகரிக்கும் பதற்றம்..!
Tripura Election 2023: சட்டமன்ற பொதுத் தேர்தல் நடக்கும் திரிபுரா தலைநகர் அகர்தலா அருகே உள்ள பிஷல்கர் பகுதியில் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
திரிபுரா தலைநகர் அகர்தலா அருகே உள்ள பிஷல்கர் பகுதியில் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஒரு சிபிஎம் ஆதரவாளர் குடும்பம் இரவில் தங்கள் வீட்டிற்கு வெளியே வெடிகுண்டு வீசப்பட்டதாக கூறுகின்றனர். இதற்கு பாஜக ஆதரவாளர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் திரிபுரா தலைநகரான அகர்தலாவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் இங்கு பாதுகாப்பு பணிகள் தீவிரமாக்கப்பட்டுள்ளது.
திரிபுராவில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கப்பட்ட வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவுபெற்றுள்ளது. 81.10 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
களத்தில் 259 வேட்பாளர்கள்:
மொத்தமுள்ள 60 தொகுதிகளில் மொத்தமாக 259 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். வாக்குப்பதிவு நிறைவு பெற்ற போதிலும், வாக்களிப்பதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். தேர்தலின்போது, அங்கும் இங்குமாய் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தபோதிலும், பெரும்பாலான பகுதிகளில் தேர்தல் அமைதியாக நடந்து முடிந்துள்ளது.
இந்த வன்முறையில் சிக்கி ஒருவர் காயம் அடைந்துள்ளார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பல தொகுதிகளில் வாக்காளர்கள் வாக்குச் சாவடிகளுக்குச் செல்ல விடாமல் தடுக்கப்பட்டனர் என புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார்கள் அனுப்பப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
மார்ச் 2ஆம் தேதி வெளியாகும் தேர்தல் முடிவுகள்:
மூன்று மாநிலங்களுக்கும் சேர்த்து மார்ச் 2ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. திரிபுராவை பொறுத்தவரையில், ஒரு காலத்தில் கம்யூனிஸ்ட்களின் கோட்டையாக கருதப்பட்ட மாநிலம். 25 ஆண்டுகால கம்யூனிஸ்ட்களின் ஆட்சியை கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல் வெற்றி மூலம் பாஜக முடிவுக்கு கொண்டு வந்தது.
அந்த தேர்தலில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான கூட்டணியை முதல்முறையாக தோற்கடித்து பாஜக ஆட்சி அமைத்தது. அதற்கு முன்பு வரை, திரிபுரா சட்டப்பேரவையில் பாஜகவுக்கு எம்எல்ஏக்கள் இருந்ததில்லை. தற்போது, ஐந்து ஆண்டு கால பாஜக ஆட்சியை தொடர்ந்து, சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது.
மும்முனை போட்டியில் முந்தப்போவது யார்?
60 தொகுதிகள் கொண்ட திரிபுராவில் இந்த முறை மும்முனை போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலில் பாஜக பல சவால்களை எதிர்கொண்டுள்ள நிலையில், பிரதான எதிர்க் கட்சிகளாக உள்ள காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்துள்ளது.
இந்த கட்சிகளை தவிர்த்து மூன்றாவது முக்கிய கட்சியாக இருப்பது புதிதாக தொடங்கப்பட்ட திப்ரா மோதா கட்சி. இந்த கட்சியின் தலைவர் மாணிக்ய தேவ் வர்மா, இந்த தேர்தலில் கிங் மேக்கராக உருவெடுத்திருக்கிறார் என அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.
திப்ராலாந்து என்ற பெயரில் தனி மாநிலம் உருவாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறார் தேவ் வர்மா. திரிபுரா ராஜ குடும்பத்தை சேர்ந்த இவர், காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக பதவி வகித்தவர். திப்ரா மோதா கட்சியை தொடங்கிய இரண்டு ஆண்டுகளில் மாநிலத்தின் முக்கிய அரசியல் கட்சியாக மாற்றியுள்ளார். பழங்குடி மக்கள் மத்தியில் இவரின் பிரச்சாரம் எடுபட்டு வருகிறது என்றே சொல்லப்படுகிறது.