Top 10 News Headlines: கூட்ட நெரிசல் முதல் துணை ஜனாதிபதியின் எச்சரிக்கை வரை
Top 10 News Headlines Today June 29: இந்தியா முழுவதும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே காணலாம்.

பூரி ஜெகன்நாதர் கோயில் ரத யாத்திரை நெரிசலில் 3 பேர் உயிரிழப்பு:
ஒடிசா பூரி ஜெகன்நாதர் கோயிலில் ரத யாத்திரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். குண்டிச்சா கோயில் அருகே ஜெகன்நாதர் தேர் வந்தபோது ஏற்பட்ட இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
மோசமாக கட்டப்பட்ட பாலம்.. தூக்கி அடிக்கப்பட்ட பொறியாளர்கள்:
போபாலில் மோசமாக கட்டப்பட்ட பாலத்தின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் விமர்சனத்தை சந்தித்த நிலையில், அந்த பாலத்தை கட்டிய 7 இன்ஜினியர்களை மத்திய பிரதேச அரசு இடைநீக்கம் செய்துள்ளது.
பெற்ற மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தாய்:
பெங்களூருவில் 9ம் வகுப்பு பயிலும் பெற்ற மகளுக்கு பெற்ற தாயே பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் ஒரு மோசமான சம்பவம் அரங்கேறியுள்ளது. 9ம் வகுப்பு மாணவி ஒருவர், திருமணத்திற்குப் பிறகு கணவருடன் ஏற்படும் உடல் ரீதியான நெருக்கத்தை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து பாடம் எடுப்பதாக பெற்ற தாயே தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், தாக்கியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். ஆனால், தாயோ இந்த குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
ராமேஸ்வரம் மீனவர்கள் கைது:
ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை. நேற்று அனுமதி சீட்டு பெற்று கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த மீனவர்களை, எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, இலங்கை கடற்படை கைது செய்து, ஒரு படகையும் கைப்பற்றியுள்ளது.
"இரண்டாவது முறையாக ஆபத்தில் சிக்க கூடாது" துணை ஜனாதிபதி எச்சரிக்கை:
நமது சுதந்திரம் இரண்டாவது முறையாக ஆபத்தில் சிக்க கூடாது என்றும் நமது சுதந்திரத்தைப் பாதுகாக்க நாம் உறுதியாக இருக்க வேண்டும் என்றும் துணை ஜனாதிபதி தன்கர் தெரிவித்துள்ளார்.
மூழ்கடிக்கும் மூடநம்பிக்கை.. செல்லப்பிராணியை பலி கொடுத்த பெண்.. பெங்களூருவில் பரபர
பெங்களூருவில் பெண் ஒருவர், தனது செல்லப்பிராணி நாயை பலி கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாந்திரீக சடங்கின் ஒரு பகுதியாக நாயின் கழுத்தை அறுத்து கொன்றுள்ளார். வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்து வீட்டினர் புகார் அளித்த நிலையில், இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
ஊதினால் அணைய நாம தீக்குச்சி இல்ல! முதல்வர் ஸ்டாலின் பேச்சு:
"ஊதினால் அணைய நாம் என்ன தீக்குச்சியா? உதயசூரியன்! நம்மை அடக்க நினைத்தால், நம் மண், மொழி, மானத்தைக் காப்பாற்ற ஒன்றாக நின்று எதிர்ப்போம்" என திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் பேசியுள்ளார்.
உரிமைத் தொகை விதிகளை தளர்த்திய தமிழக அரசு:
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான விதிகளை தளர்த்தி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
டி20 உலக கோப்பை கைப்பற்றிய நாள்:
17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி 2வது முறையாக டி20 உலக கோப்பையை கைப்பற்றிய நாள் இன்று! கடந்தாண்டு இதே நாளில் நடந்த இறுதிப்போட்டியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று ஒட்டுமொத்த நாட்டையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியது இந்திய அணி.
உதவிக்கரம் நீட்டிய சக காவலர்கள்:
பணியின்போது உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு உதவிக்கரம் நீட்டிய சக காவலர்கள். 2009ம் ஆண்டு காவல்துறை பணியில் சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து, 'உதவும் அன்பு உள்ளங்கள்' என்ற பெயரில் குழு தொடங்கி இதுவரை 36 காவலர்களின் குடும்பங்களுக்கு ரூ.8 கோடி திரட்டி உதவியுள்ளனர்.




















