Top 10 News: பாஜக கூட்டணியில் இருந்து விலகல், இலங்கையின் புதிய பிரதமர் பதவியேற்பு - டாப் 10 செய்திகள்
TOP 10 News: இந்தியா முழுவதும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே காணலாம்.
16வது நிதிக்குழுவுவிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
“கடந்த காலங்களில் வளர்ச்சி குன்றிய மாநிலங்களுக்கு தொடர்ந்து அதிக நிதியை வழங்கியும் பல மாநிலங்களின் வளர்ச்சியில் முன்னற்றம் அடையவில்லை. நாட்டில் கடைபிடிக்கப்பட்டு வரும் வரி மறுபகிர்வு முறை மூலமாக எதிர்பார்த்த அளவு வளர்ச்சி ஏற்படவில்லை. எனவே, 16வது நிதிக்குழு புதிய அணுகுமுறையை வகுக்க வேண்டும்” என முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமிக்கு உதயநிதி ஸ்டாலின் பதிலடி
உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான்’ என்று எடப்பாடி பழனிசாமி என்னை விமர்சனம் செய்திருக்கிறார். ஊர்ந்து போய் பதவி பிடித்த சில கரப்பான் பூச்சிகளுக்கும், விஷ ஜந்துகளுக்கும், என்றைக்கும் நாங்கள் விஷக்காளான்கள் தான்” என குறிப்பிட்டுள்ளார்.
ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 480 ரூபாய் உயர்ந்து, 55 ஆயிரத்து 960 ரூபாயை எட்டியுள்ளது. அதன்படி, கிராமுக்கு 60 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை 6 ஆயிரத்து 995 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் 99 ரூபாயாக தொடர்கிறது.
கூட்டத்திற்கு வந்தால் நாற்காலி இலவசம்
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் நடந்த அதிமுகவின் 53ம் ஆண்டுவிழா பொதுக்கூட்டத்திற்கு ஆள் சேர்ப்பதற்காக, நாற்காலி இலவசம் எனக் கூறியதால் அங்கு வந்த மக்கள், கூட்டம் முடிந்தவுடன் நாற்காலிகளை கையோடு தூக்கிச் சென்றனர். இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், சரோஜா, பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
டெல்லியில் கடும் கட்டுப்பாடுகள்
டெல்லியில் காற்றின் நிலை மிக மோசமான நிலையை எட்டியுள்ளதால், க்ராப் 4 கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளன. 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு மட்டுமே அனுமதி. கட்டுமான பணிகளுக்கு தடை, அத்தியாவசிய தேவையற்ற கனரக வாகனங்கள் இயங்க தடை போன்ற விதிகள் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன.
பாஜக கூட்டணியில் இருந்து விலகியது தேசிய மக்கள் கட்சி!
பாஜகவுக்கான ஆதரவை வாபஸ் பெறுவதாக தேசிய மக்கள் கட்சியின் தலைவர் கோன்ராட் சங்மா, ஜே.பி.நட்டாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். 7 எம்.எல்.ஏக்களைக் கொண்டுள்ள தேசிய மக்கள் கட்சி, பாஜக கூட்டணியில் 2வது பெரிய கட்சியாகும். இக் விலகியதால் மணிப்பூரில் பைரன் சிங் தலைமையிலான பாஜக ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றுடன் ஓய்கிறது பரப்புரை
ஜார்கண்ட் மாநிலத்தில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவும், மகாராஷ்டிராவில் ஒரே கட்டமாகவும் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான பரப்புரை இன்று மாலையுடன் ஓய்கிறது. இதற்காக அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
நைஜீரியாவின் இரண்டாவது உயரிய விருதை பெற்ற பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி நைஜீரியாவின் இரண்டாவது மிக உயர்ந்த குடிமகன் விருதான கிராண்ட் கமாண்டர் ஆஃப் தி நைஜர் என்ற விருதைப் பெற்றார். இதன் மூலம், ராணி எலிசபெத்துக்குப் பிறகு இந்த விருதைப் பெறும் இரண்டாவது வெளிநாட்டுப் பிரமுகர் என்ற பெருமையை மோடி பெற்றார்.
இலங்கை பிரதமர் பதவியேற்பு:
இலங்கையின் புதிய பிரதமராக ஹரினி அமரசூரியா பதவியேற்றார். அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், அதிபர் அனுர குமார திசநாயகேவின் கட்சி அரிதிப் பெரும்பான்மையுடன் அபார வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
கேப்டன் பும்ரா
ஆஸ்திரேலியா அணிக்கான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா பங்கேற்கமாட்டார் என தெரிய வந்துள்ளது. அவருக்கு பதிலாக பும்ரா கேப்டனாக செயல்பட உள்ளார். இதனிடையே, கே.எல். ராகுல் காயத்திலிருந்து மீண்டதால், முதல் போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.